Last Updated : 12 Jun, 2021 11:56 AM

 

Published : 12 Jun 2021 11:56 AM
Last Updated : 12 Jun 2021 11:56 AM

தமிழுக்கு வை.கோவிந்தன் தந்த ‘சக்தி’

‘சக்தி’ வை.கோவிந்தன் பிறந்த நாள் - ஜூன் 12

‘சக்தி’ வை.கோவிந்தன் - தமிழில் நூல்களை வாசிக்கும் ஒவ்வொருவரும் நினைத்துப் பெருமைப்பட வேண்டிய பெயர். நூல்களும் எழுத்தாளர்களும் பெரிதாகக் கொண்டாடப்படாத தமிழ் நிலத்தில், பதிப்புத் துறையில் புதிது புதிதாக முயன்றுபார்த்த, சிறந்த புத்தகங்களைத் தேடித்தேடிப் பதிப்பித்த முன்னோடி வை.கோவிந்தன் கொண்டாடப்படாதது பெரிய ஆச்சரியமில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில் 12.6.1912-ல் வை.கோவிந்தன் பிறந்தார். பள்ளிப் படிப்பை முழுமையாக நிறைவுசெய்த நிலையில், பர்மாவில் தொழில் பழகப் போனார். பிறகு வங்கி ஒன்றிலும் பணியாற்றினார். 1934-ல் தமிழகம் திரும்பிய பிறகு ‘சக்தி’ இதழையும், ‘சக்தி காரியாலயம்’ என்கிற வெளியீட்டகத்தையும் தொடங்கினார்.

இதழியல் ‘சக்தி’

‘கவியோகி‘ சுத்தானந்த பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு 1939-ல் ‘சக்தி’ மாத இதழ் தொடங்கப்பட்டது. தி.ஜ.ர., கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன், ரா.கி.ரங்கராஜன், தமிழ்வாணன், ம.ரா.போ.குருசாமி, அழ.வள்ளியப்பா உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் ‘சக்தி’ ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தவர்கள். இவர்கள்தான் பிற்காலத்தில் இலக்கிய உலகிலும் இதழியல் உலகிலும் பரிமளித்தார்கள் என்பது வரலாறு. பாரதிதாசன், ‘கவிமணி‘ தேசிக விநாயகம், ‘நாமக்கல் கவிஞர்’ ராமலிங்கம், டி.கே.சி., வெ.சாமிநாதசர்மா, மு.அருணாசலம், எஸ்.வையாபுரிப் பிள்ளை உள்ளிட்டோர் ‘சக்தி’ இதழில் பங்களித்திருக்கிறார்கள்.

வீடுதோறும் பாரதியார், குறள்

இந்தியாவில் பதிப்புத் தொழில்நுட்பம் வளர்ந்திராத காலத்தில் சர்வதேசத் தரத்துக்கு இணையாக இதழையும் நூல்களையும் பதிப்பிப்பதில் வை.கோவிந்தன் தீவிர ஆர்வம் காட்டினார். ‘மகாகவி’ பாரதியாரின் கவிதைகள் தமிழர் வீடுதோறும் எடுத்துச் செல்லப்பட்டதற்குக் காரணம் வை.கோவிந்தன். பாரதியாரின் மகள்களின் கோரிக்கைக்கு ஏற்ப ‘பாரதியார் கவிதைகளை’ மலிவு விலையில் வெளியிட்டார். பரலி சு.நெல்லையப்பரின் முன்னுரையோடும் ரா.அ. பத்மநாபனின் முகவுரையோடும் 1957இல் வெளிவந்த அந்த நூல், ஐந்து நாட்களில் 15,000 பிரதிகள் விற்றன.

முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளை மலிவுப் பதிப்பு மூலம் பெரும் வாசகர் பரப்புக்குக் கொண்டு செல்வதைக் கடமையாகக் கொண்டு வை.கோவிந்தன் செயலாற்றினார். அவரது முயற்சியால் இன்றைக்கும் கற்பனைசெய்து பார்க்க முடியாத எண்ணிக்கையில் தமிழ் நூல்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.

பாரதியார் கவிதைகளுடன் அவர் நின்றுவிடவில்லை பரிமேலழகர் உரையுடன் திருக்குறள், மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’, ‘சுகுண சுந்தரி’, கு.அழகிரிசாமியின் கம்பராமாயணப் பதிப்பு உள்ளிட்ட 13 மலிவுப் பதிப்பு நூல்களை வை.கோவிந்தன் வெளியிட்டுள்ளார்.

அழியாத படைப்புகள்

மலிவுப் பதிப்புகளைத் தாண்டி 200க்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார். பெரும்பாலான பதிப்பாளர்கள் முயன்றுபார்க்காததை, தன் பதிப்பகத்தின் வழியாக அவர் சாத்தியப்படுத்தினார். தமிழர்கள் அவசியம் படிக்க வேண்டும் என்று நினைத்த நூல்களை உலகத் தரத்துடன் தமிழில் கொண்டுவந்தார்.

கு.அழகிரிசாமியின் கதைகள், புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ (‘உதிரிப் பூக்கள்’ திரைப்படத்தின் மூலக்கதை) என நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளின் படைப்புகள்; ‘அறிஞர் மார்க்ஸ்’, ‘லெனின் பிறந்தார்’, ‘வ.உ.சிதம்பரம் பிள்ளை’, ‘பாரதியார் சரித்திரம்’ என மேதைகளின் வாழ்க்கை வரலாறுகள்; டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனா’, ‘போரும் அமைதியும்’, விக்டர் ஹ்யூகோவின் ‘ஏழை படும்பாடு’, நோபல் பரிசுபெற்ற பெர்ல் எஸ்.பக்கின் ‘நல்ல பூமி’, ஆஸ்கர் ஒயில்டின் ‘சிலையும் குருவியும்’, மாக்சிம் கார்க்கியின் ‘தந்தையின் காதலி’ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற நாவல்கள் என வை.கோவிந்தன் வெளியிட்ட நூல்கள் காலத்தால் அழியாதவை. அவருடைய பெருமையை இன்றைக்கும் அவை பேசிக்கொண்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x