Last Updated : 12 Jun, 2021 07:03 AM

 

Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM

சமூகத்தை எப்படி அச்சவுணர்வு இயக்குகிறது?

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்
ஆ.சிவசுப்பிரமணியன்
என்சிபிஹெச் வெளியீடு
அம்பத்தூர், சென்னை-98.
தொடர்புக்கு:
044 – 2625 1968
விலை: ரூ.145

தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான சமூக ஆய்வாளரும், இடதுசாரி அறிவுஜீவியுமான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் சமீபத்திய புத்தகம், ‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும்’. இறந்தோரையும் முன்னோரையும் வழிபடும் வழக்கம், அந்த வழிபாட்டு முறையில் ஏற்பட்ட சிதைவுகள், அவ்வழிபாட்டின் எச்சங்கள் ஆகியவற்றைச் சங்க காலப் பாடல்கள் வழியாகவும், புராணங்கள் வழியாகவும், நாட்டார் கதைகள் வழியாகவும் ஒரு புனைவுக்கே உரிய சுவாரஸ்யமான விவரணைகளோடு எடுத்துரைக்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். அவர் இதுவரை நமக்குத் தந்திருக்கும் அற்புதமான கொடைகளுள் இப்போது இன்னொன்று சேர்ந்திருக்கிறது.

‘இந்தப் பிரபஞ்சம் கதைகளால் ஆனது; அணுக்களால் அல்ல’ என்ற நோயல் காஃபின் வாக்கியம் மிகவும் அர்த்தபூர்வமானது என்பதற்கு இப்புத்தகம் சுட்டிக்காட்டும் ஆவிகள் பற்றிய கருத்தாக்கம் ஓர் உதாரணம். இறந்துபோகிறவர்கள் என்ன ஆகிறார்கள் என்பது புலப்படாததாக இருப்பதால், அதைப் புரிந்துகொள்வது சுலபமான காரியமாக இல்லை. இதேபோல இயற்கை, கனவு, இறப்பு, மனம் ஆகியவையும் புலப்படாத தன்மையைக் கொண்டிருக்கின்றன. பண்டைச் சமூகமானது புலப்படாத இவ்விஷயங்களை மொழிக்குள் கொண்டுவர முயன்றபோது, அவை கதைகளாக வெளிப்பட்டன. புலப்படும் விஷயங்களை மொழிக்குள் கொண்டுவருவதும்கூட ஒருவகையில் கதைதான் என்றாலும் அதை அறிவியல் என்றோ, பகுத்தறிவுக்கு உட்பட்டது என்றோ சொல்கிறோம்.

இந்த இரண்டு அணுகுமுறைக்கும் இடையேயான பாரதூரமான வித்தியாசங்களில் ஒன்று என்னவென்றால், புலப்படும் விஷயங்களுக்கு உட்பட்டுச் சிந்திக்கும்போது அங்கே கற்பனைக்கான எல்லை சுருங்கிவிடுகிறது. இன்னொருபுறம், புலப்படாத விஷயங்களிலிருந்து கிளைக்கும் கற்பனைகளோ கட்டுப்படுத்த இயலாத ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. அதனுடைய ஆற்றல் எவ்வளவு வலிமை மிக்கது என்பதற்கு ஆவிகள் பற்றிய கருத்தாக்கம் மிக நல்ல உதாரணம். ஆயிரமாயிரம் ஆண்டு பழமைமிக்க அந்தக் கருத்தாக்கம் இன்றைய சமூகத்தின் அன்றாட வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஆற்றலாகவும் இருக்கிறது என்பது முக்கியமானது.

இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும் புலப்படாத தன்மையால் விளைந்த அச்சத்திலிருந்து உருவான வழக்கங்கள் என்கிறது இந்நூல். கூட்டு அச்சமாக அது பரிணமித்தபோது அந்த அச்சத்தின் விளைவுகளாக எண்ணற்ற கற்பனைகளும் கதைகளும் நம்பிக்கைகளும் முளைக்கின்றன. உடலில் கண்ணுக்குப் புலனாகாத உயிர் என்று ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை எழுகிறது. அதாவது, உடல் வேறு, உயிர் வேறு என்று இரண்டாகப் பிரிப்பதில் இந்த நம்பிக்கை நிலைபெறுகிறது. உடலும் உயிரும் வேறுவேறு என்ற கருத்தாக்கத்திலிருந்து விளைந்த கற்பனைகளே மாபெரும் சமூகத்திரளின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அம்சங்களாகின்றன. இன்றைய அன்றாடத்தை இயக்கும் ஆற்றலாகவும் அவை நீடிப்பது உண்மையில் சுவாரஸ்யமான விஷயம்தான். இதற்குக் காரணம், அந்தக் கருத்தாக்கம் கொஞ்சம்கொஞ்சமாக மனித வாழ்க்கையின் வெவ்வேறு கூறுகளோடு பின்னிப்பிணைந்துவிடுகின்றன. மதத்தையும் சாதியையும் கட்டமைக்கும் காரணிகளில் ஒன்றாகவும் இந்த நம்பிக்கைகள் இருக்கின்றன. தொட்டுத்தொட்டு எங்கெல்லாம் இந்த நம்பிக்கைகள் பரவிப்பெருகின என்பதற்கும், தங்களை வெவ்வேறு விதமாக எப்படி உருமாற்றிக்கொண்டன என்பதற்கும் இந்தப் புத்தகம் எண்ணற்ற தரவுகளைத் தருகிறது.

உதாரணமாக, உடல் அழிவுறுவதாகவும், உயிரானது வேறு உடல்களிலோ மறுவுலகிலோ தங்கும் இயல்புடையது என்றும் நம்பியதன் அடிப்படையில்தான் உடலை இழிவானதாகக் கருதும் போக்கு பிற்காலத்தில் நிறுவனச் சமயத்தில் உருவானது என்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். இதன் நீட்சியாக, சமூகத்தில் வர்க்கப் பிரிவினைகள் உருவாகி, உடல் உழைப்பிலிருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொண்டவர்கள் உடல் உழைப்பும் இழிவானது என்ற கருத்துகளை முன்னிறுத்தினர் என்கிறார். ஆவி போன்ற இத்தகைய நம்பிக்கையின் நீட்சியாகவே ஆன்மா என்ற கருத்தாக்கம் முளைக்கிறது என்றும், நிறுவன சமயங்கள் உருப்பெற்ற பின்னர் இதுவே ‘ஜீவன்’, ‘மனம்’ என்று அழைக்கப்படலாயிற்று என்றும் சொல்கிறார். இப்படியான கருத்தாக்கங்கள் சிக்கலானதும் ஆபத்தானதுமான பிணைப்புகளைச் சமூகத்தில் எப்படியெல்லாம் உருவாக்கியிருக்கின்றன என்பதை அவரவர் கற்பனைக்கு விட்டுவிடலாம்.

கால மாற்றத்துக்கு ஏற்ப சமூகப் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மாற்றங்கள் ஏற்படும் என்பது யதார்த்தமானது. பண்டை மரபின் நீட்சி இன்றும் தொடர்கிறது எனும்போது அதை எண்ணிப் பெருமைகொள்வதற்குக் காரணங்கள் இருக்கும் அதே நேரத்தில், சில கருத்தாக்கங்களின் நீட்சியை மறுதலிக்க வேண்டியதும் அவசியமாகிறது. ஆவி, மனம், ஆன்மா குறித்த கருத்தாக்கங்களின் விளைவுகளை மிகத் தீவிரமாக விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும் என்பதையே இந்தப் புத்தகம் வலியுறுத்துவதாக நான் வாசித்துக்கொள்கிறேன்.

இதன் தொடர்ச்சியாக இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும்: பண்டைச் சமூகத்தின் அச்சத்திலிருந்து உருவான நம்பிக்கைகள் என்று சொல்லும்போது, அப்போதைய சமூகம் குழந்தைத்தனமானது என்ற பார்வை உட்பொதிந்திருக்கிறது. ஆனால், அன்றைய நீட்சிகள் இன்றும் தொடர்கின்றன எனும்போது இந்தப் பார்வை அர்த்தமற்றதாகிவிடுகிறது. அதே நேரத்தில், இந்த நம்பிக்கைகளின் பின்னணியில் அச்ச உணர்வு வியாபித்திருக்குமானால், அதனால் உருவாகும் விளைவுகள் பரிசீலனைக்கு உரியவைதான். இன்றைக்கும் பல்வேறு கருத்தாக்கங்களுக்குப் பின்பாக அச்ச மனநிலை இருப்பதைப் பார்க்கிறோம். உதாரணமாக, காவல் துறை பிரயோகிக்கும் வன்முறையை ஆதரிக்கும் மனதுக்குப் பின்பாக இருப்பது அச்சம்தான். தூக்குத் தண்டனையை ஆதரிக்கும் மனதையும் அச்சமே ஆட்கொண்டிருக்கிறது. இந்த அச்சமானது கூட்டு அச்சமாக மாறும்போது எப்படியான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பது வெளிப்படை. அதனால்தான், அரசுகளோ அதிகாரிகளோ எழுத்தாளர்களோ முன்வைக்கும் கருத்துகளுக்கும் தீர்வுகளுக்கும் பின்பாக அச்சம்தான் அடிப்படையாக இருக்கிறது என்று உணர்வோமேயானால் அந்தக் கருத்துகளையும் தீர்வுகளையும் விமர்சித்துக்கொள்வது அவசியமாகிறது. ஒரு நபரின் அச்சமானது கூட்டு அச்சமாக உருப்பெறும்போது, அது உருவாக்கும் விளைவுகள் பேராபத்தாகவும் இருக்கக்கூடும் என்பதற்கு இந்தப் புத்தகம் உருவாக்கும் கதையாடலே சான்று.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x