Published : 29 May 2021 06:30 am

Updated : 29 May 2021 06:30 am

 

Published : 29 May 2021 06:30 AM
Last Updated : 29 May 2021 06:30 AM

ஆங்கிலோ-இந்தியர்களின் அடையாளச் சிக்கல்

book-review

நிலநடுக் கோடு
விட்டல் ராவ்
பாரதி புத்தகாலயம்
தேனாம்பேட்டை, சென்னை – 18.
தொடர்புக்கு: 044-24332424
விலை: ரூ.295

இந்தியப் பெருநகரங்களில் குடியேறி, ஐரோப்பியப் பண்பாட்டைத் தங்களுடையதாக வரித்துக்கொண்ட ஆங்கிலோ-இந்திய இனக்கலப்பானது தமிழகத்தில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்துத் தமிழில் பதிவுகள் மிகக் குறைவு. அந்த வகையில், அடையாளம் இல்லாமல் தவிக்கும் ஆங்கிலோ இந்தியர்களைப் பற்றி விட்டல் ராவ் எழுதியிருக்கும் ‘நிலநடுக் கோடு’ நாவல் மிக முக்கியமான ஆவணமாகும்.


நாவலின் கதைநாயகன் தேவேந்திர அய்தாள. இந்தப் பெயர்தான் இவனுக்கு எல்லா இடத்திலும் அடையாளச் சிக்கலை ஏற்படுத்துகிறது. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவன், சேலத்தில் வசிக்கிறான். வீட்டில் கன்னடமும் தமிழும் கலந்த மொழியைப் பேசுகிறான். ஆங்கிலோ இந்தியருக்கு ஏற்பட்ட ஏற்புச் சிக்கல் இவனுக்கும் ஏற்படுகிறது. கன்னடர்களும் தமிழர்களும் இவனை ஏற்க மறுக்கின்றனர். இறுதி வரை தனது அடையாளத்தைத் தேடி தேவ் அலைகிறான். நாவலில் பேசப்படும் அனைத்துடனும் ஏதோ ஒருவகையில் தேவ் என்ற எளிய மனிதன் சம்பந்தப்பட்டிருக்கிறான். இவன்தான் இந்தப்புனைவின் நிலநடுக் கோடு.

இவனுடைய கதையே நாவலின் மையமாக இருந்தாலும், ஐம்பதுகளுக்குப் பிறகுள்ள இருபத்தைந்து ஆண்டு கால சென்னையின் வரலாற்றையும் நாவல் பேசுகிறது. எக்ஸ்ரே மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் இயக்கத்தை விட்டல் ராவ் துல்லியமாக எழுதியிருக்கிறார். 1639-ல் உருவாக்கப்பட்ட சென்னை நகரின் ஒரு குறிப்பிட்ட கால வளர்ச்சியை நாவல் மொழியால் கட்டிப் போட்டிருக்கிறது. சென்னையில் இருந்த சினிமா தியேட்டர்களின் அமைப்பு, உணவகங்கள் பற்றி அவ்வளவு நுணுக்கமாக விட்டல் ராவ் எழுதியிருக்கிறார். வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட பொருட்களின் விற்பனையானது சென்னையில் அமோகமாக நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக, சென்னையில் வணிகம் செய்த ஈரானியர்களில் சிலர் தங்கம், வைரம், கைக்கடிகாரம், துணிகள் போன்றவற்றைக் கடத்திவந்து சென்னையில் விற்றிருக்கிறார்கள். வரலாற்றுத் தகவல்கள் பலவும் புனைவின் பகுதியாகி மெருகூட்டுகின்றன.

ஆவணப் புனைவாக எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் ஆங்கிலோ-இந்தியர்களின் வாழ்க்கையைத் தனித்துவமாக எழுதியிருக்கிறார் விட்டல் ராவ். மாட்டுக்கறி அவர்களின் பிரதான உணவாக இருந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. சுதந்திரத்துக்கு முன்பு செல்வாக்குடன் இருந்த அவர்கள், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். சென்னையில் இருந்த பெரும்பாலான கைரிக்ஷாக்களுக்கு உரிமையாளர்களாக ஆங்கிலோ இந்தியர்களே தொடக்கத்தில் இருந்திருக்கிறார்கள். குதிரைப் பந்தயங்களில் இவர்களின் பங்கேற்பு அதிக அளவில் இருந்திருக்கிறது. சின்ன மகிழ்ச்சியையும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழும் பழக்கத்தை இவர்கள் கொண்டிருந்திருக்கிறார்கள்.

பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்தித்த இந்தச் சமூகத்தின் பெண்கள், அந்தக்காலத் திரைப்படங்களில் இடம்பெறும் க்ளப் டான்ஸ் பாடல்களில் குட்டைப் பாவாடையுடன் நடனமாடினார்கள். இந்தியப் பெண்களின் வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது இவர்கள் சுதந்திரமானவர்களாகவே இருந்திருக்கின்றனர். சாதி மதத்தைக் கடந்து தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இவர்கள் பெற்றிருந்தனர். காதல் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் உணர்ச்சிவசப்படாமல் கடந்துசெல்லும் மனநிலையைக் கொண்டிருந்தனர். யாரும் யாரையும் சார்ந்திருக்காத குடும்ப அமைப்பை இந்தச் சமூகம் கொண்டிருந்தது. ஆண், வாரிசு, சொத்து போன்ற இந்திய மனப்பான்மை இவர்களிடம் இல்லை. இப்படியான பல விஷயங்களை முன்வைப்பதிலிருந்து நம் சமூகத்தின் இயக்கத்தையும் அவற்றோடு மோத விட்டு உரையாடிக்கொள்ள முடிகிறது.

நாவலின் மற்றுமொரு சிறப்பாக இதில் இடம்பெற்றுள்ள உரையாடல்களைக் குறிப்பிட வேண்டும். ஆசிரியரின் குறுக்கீடே இல்லாமல் அவ்வளவு கதாபாத்திரங்களையும் சுயமாக உரையாட விட்டிருக்கிறார் விட்டல் ராவ். உரையாடலின் வழி வரலாற்றைப் பேசவும் செய்கிறார். இந்த நாவலில் இவர் உருவாக்கியிருக்கும் களம் மிகப் பெரியது. அவ்வகையில்,வாசிக்கவும் விவாதிக்கவும் பட வேண்டிய மிக முக்கியமான நாவலாக இருக்கிறது ‘நிலநடுக் கோடு’.

- சுப்பிரமணி இரமேஷ், ‘தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும்’ நூலின் தொகுப்பாசிரியர்.
தொடர்புக்கு: ramesh5480@gmail.comBook reviewஆங்கிலோ-இந்தியர்களின் அடையாளச் சிக்கல்நிலநடுக் கோடு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x