Published : 20 May 2021 04:52 PM
Last Updated : 20 May 2021 04:52 PM

கி.ரா. திறந்து வைத்த ‘கதவு’

நவீனத் தமிழ் இலக்கியத்தின் சிறுகதை வடிவத்தில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. காலங்களை வென்ற, மொழி எல்லைகளைக் கடந்த பல கதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று கி.ராஜநாராயணன் எழுதிய ‘கதவு’. இது அவருடைய இரண்டாவது சிறுகதை. 1959இல் ‘தாமரை’ இதழில் வெளியாகியிருந்தது. ‘தாமரை’ இதழ் ஜீவாவால் தொடங்கப்பட்டிருந்த காலம் அது.

கி.ரா.வின் முதல் கதையான ‘மாயமான்’, ‘சரஸ்வதி’ இதழில் வெளியாகியிருந்தது. இளம் வயதில் இசை கற்றுக்கொண்டு இசைக்கலைஞராக மாற விரும்பிய கி.ரா. காசநோய் போன்றவற்றுடன் போராடியதால், அந்த விருப்பதைக் கைவிட்டார். 35 வயதுக்கு மேல்தான் கி.ரா. எழுதத் தொடங்கியிருந்தார்.

‘கதவு’ கதைக்கு உத்வேகம் அளித்த சம்பவமாக அந்தக் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்றுவந்த காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார் எழுத்தாளர் நாறும்பூநாதன். நாடு விடுதலை பெற்று பத்தாண்டுகளே கடந்திருந்த நிலையில், நாட்டில் வறுமை தீவிரமாக இருந்தது, காரணம் வறட்சி.

வேளாண்மையே முதன்மைத் தொழில். ஆனாலும் ஏழைக் குடியானவர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை வசூலிப்பதில் அதிகாரிகள் தீவிரம் காட்டினார்கள். அன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் சின்னம் உழவு மாடு. ஆனால், அரசுக்கு வரி செலுத்தாத உழவர்களிடமிருந்து உழவு மாடு பிடுங்கப்பட்டது. வேளாண்மைக்கு அடிப்படையான மாட்டை ஜப்தி செய்த பிறகு, அந்த உழவர் எப்படி வரியைக் கட்ட முடியும்? இந்த முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே கி.ரா. ‘கதவு’ கதையை எழுதினார் என்கிறார் நாறும்பூநாதன். தன் மனத்தைத் தைத்த ஒரு சம்பவத்தை காலத்தை வென்ற கதையாக்கும் சூட்சுமம், தேர்ந்த எழுத்தாளனிடம் சாத்தியமாகும்.

என்ன கதை?

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரங்கம்மா கூலி வேலை செய்து, தனது குழந்தைகளைக் காப்பாற்றிவருகிறார். பிழைப்புக்காக மணிமுத்தாறுக்குப் போன கணவனிடமிருந்து நாலைந்து மாதமாக அவர்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. மூத்த மகள் லட்சுமி, மகன் சீனிவாசன், ஒரு கைக்குழந்தை என மூன்று குழந்தைகள். வீட்டுத் தீர்வையை (வரி) கட்ட முடியாமல் போகவே, தலையாரி பல முறை தாமதித்த பிறகு, கடைசியாக எச்சரிக்கை செய்துவிட்டுப் போகிறார். பிறகு ரங்கம்மா இல்லாதபோது கதவைக் கழற்றிச் சென்றுவிடுகிறார். குழந்தைகளைப் பொறுத்தவரை அந்தக் கதவுதான் முதன்மை விளையாட்டுப் பொருள், கனவுகளோடும் கற்பனைகளோடும் அவர்களை சுமந்து ஆடும் கதவு அவர்களுக்குப் பேருந்து. ’கதவாட்டம்’ அவர்களின் விருப்பமான பொழுதுபோக்கு. இப்போது அது இல்லாமல் குழந்தைகள் தவிக்கிறார்கள். கதவற்ற வீட்டில் ரங்கம்மாவின் கைக்குழந்தை குளிரால் ஒரு நாள் இறந்துவிடுகிறது. வீட்டில் மிச்சமிருந்த கொஞ்சம் தானியத்தைப் போட்டு வைத்த கஞ்சியையும் நாய் குடித்துவிட்டுப் போய்விடுகிறது.

கதவு எடுத்துச் செல்லப்பட்டு சில நாட்கள் கழித்து, பள்ளிக்கூடத்திற்கு அருகிலுள்ள சாவடிக்குப் பின்புறம் தங்கள் வீட்டின் கதவை சீனிவாசன் கண்டுபிடிக்கிறான். ஆர்வம் துள்ள ஓடிவந்து அக்கா லட்சுமியிடம் தெரிவிக்கிறான். அந்த இடத்தில் யாருக்கும் பயனில்லாமல் கதவு சும்மா சாத்தி வைக்கப்பட்டுள்ளது. இருவரும் சென்று கதவை வாஞ்சையாக வருடி இறுகப் பிடித்துக்கொள்வதுடன் கதை நிறைவடைகிறது.

அழியாத சித்திரம்

கி.ரா.வின் நெருங்கிய நண்பரான கு.அழகிரிசாமி எழுதிய சிறுகதை ‘ராஜா வந்திருக்கிறார்’. இதேபோல ஏழைக் குடியானவர்கள், குழந்தைகளை மையமாக வைத்துச் சொல்லப்பட்ட மற்றொரு கதை அது. சற்றே நீண்ட அந்தக் கதை குழந்தைகளின் உலகத்துக்குள் ஊடுருவிச் சென்றிருக்கும் அதேநேரம், நிஜ உலகின் துயரங்களையும் பதிவுசெய்திருக்கும். அதுவும் புகழ்பெற்றதொரு கதையானது. ‘கதவு’ கதை சிறிய கதைதான். ஆனால், அது ஏற்படுத்தும் மனச்சித்திரமும் தாக்கமும் ஆழமானவை. காலத்தைக் கடந்தவை.

பிரான்ஸில் இருந்து வந்திருந்த ஓர் ஆய்வாளர், ‘கதவு’ கதையை பிரெஞ்சில் வாசித்திருப்பதாகவும் அது அற்புதமான கதை என்றும் சொல்லி வியந்ததாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய கிராமங்களின் வறுமை, மக்கள் படும் பாடுகள் குறித்து உலக கவனத்தை ஈர்த்தது சத்யஜித் ரேவின் ‘பதேர் பாஞ்சாலி’. அதேபோன்றதொரு அழுத்தமான சித்திரத்தை இந்தச் சிறுகதை வழியே கி.ரா. சாத்தியப்படுத்தி இருப்பதாக எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

இப்படித் தமிழ் வாசகர்களிடமும் இலக்கிய உலகிலும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது கி.ரா. எழுதிய ‘கதவு’ சிறுகதை. புகழ்பெற்ற இந்தக் கதை பல்வேறு வடிவங்களில் இணையத்தில் கிடைக்கிறது.

இந்தக் கதையை வாசிக்க: https://azhiyasudargal.wordpress.com/2010/06/04/%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d/

ஆங்கிலத்தில் இந்தக் கதையை வாசிக்க: https://kaveripak.com/2018/09/29/the-door-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81-ki-rajanarayanan/

இந்தக் கதையின் ஆடியோ வடிவம்: https://bookday.in/ki-rajanarayanan-short-stories-door-read-soumya/

மதரா (மரிய தங்கராஜ்) எடுத்த குறும்பட வடிவத்தில் இந்தக் கதை: https://www.youtube.com/watch?v=5foX5Qdi3Tw&t=91s

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x