Published : 18 May 2021 10:43 PM
Last Updated : 18 May 2021 10:43 PM

கி.ரா.வின் ‘கிடை’ சினிமாவான கதை!   

‘கட்டில்’ படத்தின் முதல் பார்வைகளை கி.ரா.வெளியிட்டபோது...

அரசு மரியாதையுடன் கி.ரா.வின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும், அவரது சொந்த மண்ணில் அவருக்கு சிலை வைக்கப்படும் என்றும் ஒரு மாநிலத்தின் முதல்வரே அறிவிக்கும் அளவிற்கு, தமிழ் இலக்கியத்துக்குத் தன்னுடைய நெடும் பங்களிப்பை வழங்கிச் சென்றிருக்கிறார் கரிசல் எழுத்தின் பிதாமகர் கி.ரா.

அவருடைய எழுத்துகளில் வட்டாரக் கலாச்சாரம் நிறைந்திருக்கும். வரலாற்றின் நிழல் கவிழ்ந்திருக்கும். அழுத்தமான சம்பவங்களுக்குப் பஞ்சமிருக்காது. கதாபாத்திரங்கள் வலிமையாக, தன்னியல்பு மிக்கவையாக, உணர்வூக்கம் மிக்கவையாக இருக்கும். கி.ரா.வின் படைப்புகளைத் தமிழ் சினிமா பயன்படுத்திக் கொண்டிருந்தால், இந்நேரம் நூற்றுக்கணக்கான ‘மண்ணின் சினிமாக்கள்’ நமக்குக் கிடைத்திருக்கும். அவரது கதைகள் குறும்பட வடிவம் பெற்ற அளவுக்கு முழு நீளத் திரைப்படங்கள் ஆகாதது ஒரு நடிகனாக, இயக்குநராக, எழுத்தாளராக எனக்கு வருத்தத்தை உண்டாக்குவது.

அதேநேரம் அவரது ‘கிடை’ என்கிற நாவல் ‘ஒருத்தி’ என்கிற பெயரில் திரைப்படமாக்கப்பட்டபோது அதில் கதாநாயகனாக நடிக்கும் கொடுப்பினை எனக்கு அமைந்தது. நான் திரைப்படங்களில் நடிக்க முயன்ற நாட்களில் ஜெயகாந்தன் தொடங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் வரை இலக்கியவாதிகளின் படைப்புகள் படமாகும்போது அவற்றில் எப்படியாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிடத் துடிப்பேன். ஆனால், நான் எந்த முயற்சியும் செய்யாமலேயே கி.ரா.வின் ‘கிடை’ நாவல் என்னைக் கதாநாயகனாக ஆக்கியது.

நேசித்தது என் மடியில்...

பள்ளி நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் கி.ரா.வின் கதைகள்தான் என் கைகளில் இருக்கும். நான் நேசித்து வாசித்த ஒரு படைப்பாளி. தஞ்சை மண்ணில் வளர்ந்த எனக்கு தெற்கத்திச் சீமையின் வாழ்க்கையை மக்களின் மொழியில் தந்து, நான் உச்சரிக்கும் தமிழுக்கு உரமூட்டிய எழுத்தாக கி.ரா.வின் படைப்புகள் இருந்தன.

அப்போது டெல்லியில் நடந்த சர்வதேச திரைப்பட விழா – இந்தியன் பனோரமாவில் பீ.லெனின் இயக்கத்தில் ஜெயகாந்தனின் எழுத்தில் உருவான ‘ஊருக்கு நூறு பேர்’ திரையிடப்பட்டது. அதில் ஒரு முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தேன். அங்கே இயக்குநர் அம்ஷன் குமார் என்னை அணுகி ‘கி.ரா.வின் ‘கிடை’ நாவலை திரைப்படமாக்கப் போகிறேன். அதில் வரும் ‘எல்லப்பன்’ கதாபாத்திரத்தில் கதை நாயகனாக நீங்கள் நடிக்க வேண்டும்’ என்று கூறினார். ஏற்கெனவே அந்தக் கதையை நான் வாசித்திருந்ததால் அந்த வாய்ப்பு எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது. படப்பிடிப்பு தொடங்குவதற்குள் மீண்டும் மீண்டும் ‘கிடை’ நாவலை மறுவாசிப்பு செய்தேன்.

நடிகர் விஜய்யின் நண்பனாக ‘புதிய கீதை’ மற்றும் சில வணிகப் படங்களில் பரபரப்பாக நான் நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. அந்த நேரத்தில் இந்த ‘ஒருத்தி’ (கிடை) படத்துக்குத் தேதி ஒதுக்குவதே சவாலாக இருந்தது. தனிப்பட்ட முறையில் புதுச்சேரிக்குப் போய் வாஞ்சையுடன் கி.ரா.வைச் சந்தித்து, அவரது காலடியில் அவரது பேரனைப் போல் அமர்ந்துகொண்டு ஆலோசனையும் கேட்டேன். அவர் என்னைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள் இன்றும் மறக்கமுடியாது.

“கையிலிருக்கும் படங்களில் நடித்து முடித்துவிட்டு, வேறு படங்களை ஒப்புக்கொள்வதற்கு முன் ‘கிடை’க்கு நேரம் ஒதுக்கு. வணிகப் படம் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். ‘கிடை’ போன்ற படைப்புகள் மிகவும் அரிதானவை. இதை விட்டுவிடாதே…” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அந்தப் படைப்பில் நான் நடிப்பதற்கு எப்படியெல்லாம் என்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டுமென்று அறிவுரை கூறியதுடன் எல்லப்பனின் உடல் மொழி எப்படி இருக்கவேண்டும் என்றும் நடித்துக் காட்டி ஆச்சரியப்படுத்தினார் கி.ரா.

‘ஒருத்தி’ படத்தில் சக நடிகர்களுடன் இ.வி.கணேஷ்பாபு

கி.ரா.வின் பாராட்டு

பின்னர், ‘ஒருத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது. கோவில்பட்டியிலிருந்து படப்பிடிப்பு நடக்கும் பக்கத்து கிராமங்களுக்குப் புறப்படுவதற்காக ஹோட்டலில் 7 மணிக்கு கார் தயாராக இருக்குமென்று சொல்வார்கள். ஆனால் கிடைபோடும் ஆடுகளோடும், கீதாரிகளோடும் அதிகாலை 4 மணிக்கே புழுதி பறக்க லாரியில் புறப்பட்டு படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றுவிடுவேன். அவர்களது வட்டார வழக்கைக் கற்றுக்கொண்டேன். அந்த நாட்களில் ஆட்டுப் புழுக்கைகளே என் உடலுக்கு சந்தனமாக மாறிப்போனது. என்னை நான் மறந்துபோய் எல்லப்பனாக உருமாறி நின்றதைப் பார்த்து ஒட்டுமொத்த யூனிட்டுமே கண்கள் விரிய என்னைக் கவனித்தன. அந்தக் கதாபாத்திரத்துகான உடல் மொழியையும் அந்த வட்டார மொழியையும் கி.ரா. சொன்னபடியே நான் கிரகித்துக்கொண்டு நடிக்கத் தொடங்கினேன். அது அந்தப் படத்தில் எனது நடிப்பை மிகவும் இயல்பாக மாற்றியது.

படம் முடிக்கப்பட்டு, கி.ரா.விடமிருந்து எனக்குக் கிடைத்த பாராட்டுதான் மிகப்பெரிய பாராட்டு. ”கணேசா நீ தஞ்சாவூர்க்காரன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டேங்கிறாங்கப்பா… கோவில்பட்டியிலயே பொறந்து வளந்த மாதிரி படத்துல பேசி நடிச்சிருக்குற…” என்றார். ‘ஒருத்தி’ படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் – இந்தியன் பனோரமா பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், கேரளத்தின் சலச்சித்ரா, புதுவை மாநில விருது, நியூஜெர்சி, நியூயார்க் உள்ளிட்ட 13 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு உலக சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டது.

‘ஒருத்தி’ படத்துக்குப் பிறகு கி.ரா.வை வாய்ப்பு அமையும்போதெல்லாம் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, வா. கௌதமன் இயக்கத்தில் ‘கதைசொல்லி’ என்கிற நிகழ்ச்சியை நான் ஒருங்கிணைத்தேன். அதில் கி.ரா., தாத்தாவாக திண்ணையில் அமர்ந்திருப்பார். நான் பேரனாக அவரருகில் அமர்ந்து வெள்ளந்தியாக அவரிடம் மண்ணின் கதைகளைச் சொல்லும்படி கேட்பேன். மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட முதல் நாள் தொடங்கி ஒளிபரப்பான வெற்றிகரமான நிகழ்ச்சியில் மீண்டும் அவரது விரல் பிடித்துக்கொள்ளும் கொடுப்பினை அமைந்தது.

கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நான் நடித்து, இயக்கிவரும் ’கட்டில்’ திரைப்படத்தின் முதல் பார்வைகளை கி.ரா.தான் புதுச்சேரியில் பத்திரிகையாளர்களுக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள், “இரத்தமும் சதையுமாக உயிரோடு வாழ்ந்த மனிதர்களை நான் எழுத்தாக்குவேன். எழுத்தான பிறகு மீண்டும் அந்த மனிதர்களை அதே உணர்வுகளுடன் வேறு வடிவில் பார்த்த மாதிரி ‘ஒருத்தி’ திரைப்படம் இருந்தது. அந்தக் கதையின் நாயகன் ‘எல்லப்பனாக’ நம் கண்முன்னே கணேசன் நிற்கிறான்…” என்று ’கட்டில்’ திரைப்படத்தின் கதை, திரைக்கதை ஆசிரியர், எடிட்டர் லெனின், நடிகர், சமூகச் செயற்பாட்டாளர் ரோகிணி முன்னிலையில் என்னைப் பாராட்டினார். 150 வருடங்களுக்கு முன்பு சாதியத்திற்கு எதிரான உண்மைச் சம்பவத்தை தனது ‘கிடை’ நாவலின் மூலம் சொன்ன கி.ரா., தனது நூறாண்டுகால நிறைவான வாழ்வை வாழ்ந்திருந்தாலும் உலகின் தலைசிறந்த விருதுகள் அவரை வந்தடைந்திருக்க வேண்டும்.

கட்டுரையாளர்: இ.வி.கணேஷ்பாபு,

நடிகர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர்.

தொடர்புக்கு: evganeshbabu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x