Published : 18 May 2021 16:56 pm

Updated : 27 May 2021 21:19 pm

 

Published : 18 May 2021 04:56 PM
Last Updated : 27 May 2021 09:19 PM

கி.ரா.வும் நானும்: தங்கர் பச்சான்

director-thangar-bacchan-on-ki-rajanarayanan
கி.ராஜநாராயணனுடன் தங்கர் பச்சான் மற்றும் குடும்பத்தினர்.

கி.ராஜநாராயணன் 99 ஆண்டு காலங்கள் வாழ்ந்திருக்கிறார். இதில், 60 ஆண்டுகள் தமிழுக்காக மட்டுமே வாழ்ந்திருக்கிறார். எனது திரைத்துறை அறிமுக ஆண்டிலிருந்து, இன்றுவரை 33 ஆண்டுகளும் அவர் குறித்தே அதிகமாகப் பேசியிருக்கிறேன்.

சரியாக 40 ஆண்டுகளுக்கு முன் கி.ரா.வின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய 'பிஞ்சுகள்' குறுநாவல் இல்லையென்றால், இன்றைக்கு நான் இல்லை. எனது இலக்கியப் படைப்புகள் திரைப் படைப்புகளை வடிவமைத்தது, அவரின் எழுத்துகள்தான். எனது ஆசான், குடும்பத் தலைவர், எதையும் ஒளிவு மறைவில்லாமல் பேசிக் கலந்துரையாடும் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.


திரைத்துறைக்கு வரும் முன்பே எனது அப்பாவை நான் இழந்துவிட்டதால், அவரை 'அப்பா' என்றே அழைத்தேன். எனது திருமண அழைப்பிதழைக்கூட அப்பாவின் கையினாலேயே எழுதவைத்து, நகல் எடுத்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கினேன்.

கடிதத் தொடர்பிலேயே எங்களின் உறவு வளர்ந்தது. கி.ரா. நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் மட்டுமே இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன. கடிதங்களை இலக்கியமாக்கியவர் கி.ரா. அப்பா எனக்கு எழுதிய கடிதங்கள் எனது சொத்துகளை விடவும் மதிப்பு வாய்ந்தவை.

எனது முதல் இலக்கிய நூலான 'வெள்ளை மாடு' கையெழுத்துப் படிகள் அவர் படித்த பின்பே நூல் வடிவம் பெற்றது. 'ஒன்பது ரூபாய் நோட்டு' நாவலின் கையெழுத்துப் படிவங்களைப் படித்துவிட்டு, அதற்குத் தலைப்பு சூட்டியவரும் அப்பாதான். எந்தக் காரியத்தை தொடங்கினாலும், அவரிடம் கூறிக் கருத்தை அறிந்தபின்தான் செயல்படுத்துவேன்.

இறுதிக் காலத்தில் அம்மாவும் அப்பாவும் சென்னையிலேயே என்னுடன்தான் இருக்க வேண்டும் என்பதற்காக, அவருக்காக என் வீட்டின் கீழ்த்தளத்தில் ஒரு அறையும் அமைத்தேன். சென்னை வாழ்க்கை அவருக்கு விருப்பமில்லை. புதுச்சேரி அந்தப் பெருமையை எடுத்துக்கொண்டது.

தங்கர் பச்சான் திருமணத்தில் கி.ராஜநாராயணன்.

மிகச்சிறந்த படைப்புகளுக்கு மிக அரிதாகவே 'சாகித்ய அகாடமி' விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் இனி இவர் எழுத மாட்டார், வயதாகிவிட்டது அல்லது இவருக்கு விருது வழங்கப்படாமல் இருந்ததற்காக, இப்பொழுது கொடுத்துவிடுவோம் எனக் கொடுத்து விடுவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

கி.ராவுக்கும் அப்படித்தான் 'கோபல்ல கிராமம்' நாவலுக்குத் தரவேண்டியதை 'கோபல்லபுரம் மக்கள்' நாவலுக்குத் தந்தார்கள். இதே துயர சம்பவம்தான் சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன் போன்ற பலருக்கும் நிகழ்ந்தது.

கி.ரா.வின் எழுத்துகளை அனுபவிக்காதவர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுவதுண்டு. இதையெல்லாம் வாசிக்காமல் இந்தப் பிறவியை வீணாக்குகிறார்களே எனத் தோன்றும். ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு இட்லி, காபியைப் பற்றி எழுதி இலக்கியம் படைத்தவர்களுக்கிடையில் எழுத்தறிவில்லாத உழைக்கும் எளிய உழவுக்குடி கிராமத்து மக்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே படைப்புகளாக்கியவர் கி.ரா.

அது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வியலோடு கலந்து உறவாடுகின்ற நாட்டுப்புறக் கதைகளையும், விடுகதைகளையும் அலைந்து தேடிப்பிடித்து பதிவு செய்து ஆவணமாகவும் இலக்கியப் படைப்புகளாகவும் மாற்றியவர்.

கி.ரா.

கி.ரா.வின் நாட்டுப்புற சொல்லகராதியை இனி எவராலும் உருவாக்கிவிட முடியுமா அல்லது அதை அழித்துவிட முடியுமா? அவருடைய எழுத்துகள்தான் நகரம் நோக்கி ஓடி வந்த என்னை மீண்டும் கிராமத்திற்கே இழுத்துக்கொண்டு போனது.

நாடக வடிவிலான சொல்லாடல்களையும் உரையாடல்களையும் கொண்டு இலக்கியம் படைத்த வேளையில் மக்களின் இயல்பான சொற்களால் தமிழின் தற்கால இலக்கியத்தை மக்களின் மனதுக்கு மிக நெருக்கமாக்கியவர்.

கொண்டாடித் தீர்த்த எழுத்தாளர்களெல்லாம் காலப்போக்கில் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களெல்லாம் எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக எழுதியவர்கள். வெறும் நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் சென்ற கி.ராஜநாராயணன் 'மழைக்காகத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். அப்பொழுதுகூட மழையையே பார்த்துக்கொண்டிருந்து விட்டேன்' எனக் கூறினார். மழையும் மண்ணும் மக்களும் ஆடு, மாடுகளும்தான் அவரை எழுத்தாளனாக்கியது.

அசல் வாழ்க்கையையும், தன் மொழியையும் இழந்துகொண்டிருக்கும் இத்தலைமுறையும், எதிர்காலத் தலைமுறைகளையும் இழுத்துக்கொண்டுபோய் கி.ரா போன்றவர்களின் படைப்புகளிடம் சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆண்டுகொண்டிருக்கும், இனி எதிர்காலங்களில் ஆளப்போகும் ஆட்சியாளர்களுக்கும் உண்டு.

நான் இயக்கிய கி.ராஜநாராயணன் குறித்த ஆவணப் படத்தைப் பார்க்க:

- தங்கர் பச்சான்.தவறவிடாதீர்!

கி.ராஜநாராயணன்தங்கர் பச்சான்கி.ராஜநாராயணன் மறைவுகோபல்ல கிராமம்Ki rajanarayananThangar bachchanKi rajanarayanan deathGopalla kiramam

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x