Published : 15 May 2021 05:48 AM
Last Updated : 15 May 2021 05:48 AM

அசாம் சட்டமன்றத்தில் ஓர் இளங்கவிஞர்

அசாம் சட்டமன்றத்துக்குப் புதிதாகத் தேர்ந் தெடுக்கப் பட்டிருக்கும் 126 உறுப்பினர்களில், இளங்கவிஞர் அஷ்ரபுல் ஹூசைனும் ஒருவர். வங்க முஸ்லிம்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்பட்டு அச்சுறுத்தலுக்கு ஆளாகிவரும் மியா சமூகத்தைச் சேர்ந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அசாமின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் ஹிமாந்த பிஸ்வா சர்மா, இந்தச் சமூகத்தவர்களை அசாமியர்களின் பண்பாட்டுக்கு எதிரானவர்கள் என்று தொடர்ந்து பேசிவரும் சூழலில், 27 வயதாகும் அஷ்ரபுல் ஹூசைனின் வெற்றி குறிப்பிடத்தக்க ஒன்றாக மாறியிருக்கிறது.

அசாமின் ஆற்றுத் தீவுப் பகுதிகளில் வசிக்கும் மியாக்கள் தாங்களும் அசாமியர்களே என்று தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். மியா கவிஞர்களும் அந்த உணர்வைத் தங்களது கவிதைகளில் வெளிப்படுத்திவருகின்றனர். அதே நேரத்தில், அசாமியர்களின் ஒற்றைக் கலாச்சாரத்தை மறுத்து, தற்போது வங்கதேசத்தில் இருக்கும் சில பிராந்தியங்களின் வட்டார வழக்குகளையும் அவர்கள் தங்களது கவிதைகளில் வெளிப்படுத்துகின்றனர். அதன் விளைவாக, அசாமிய அடிப்படைவாதிகளின் கோபத்தையும் வழக்குகளையும்கூட அவர்கள் எதிர்கொண்டுவருகிறார்கள்.

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்ட அஷ்ரபுல் ஹூசைன் 50,000-க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மெகா கூட்டணியில் அனைந்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி இடம்பெற்றிருந்தபோதும், செங்கா தொகுதியில் இரண்டு கட்சிகளுமே தனித்தனியாகப் போட்டியிட்டன. பாஜக கூட்டணியிலிருந்து அசாம் கண பரிஷத்தும் போட்டியிட்டது. இந்த மும்முனைப் போட்டியில் அஷ்ரபுல் ஹூசைன் பெற்றிருக்கும் வெற்றி, மியா சமூகத்தினரின் இலக்கியக் குரலுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x