எஸ்.பால்வண்ணம்: ஒரு வாசக இயக்கம்

எஸ்.பால்வண்ணம்: ஒரு வாசக இயக்கம்
Updated on
2 min read

பழுப்பு நிற வேட்டியும் சட்டையும் அணிந்தபடி, தோளில் ஜோல்னா பை சகிதம் ஒரு பழைய ஹெர்குலஸ் சைக்கிளில் பெடல் உரசும் சப்தத்துடன் வலம்வந்துகொண்டிருந்தவர் பால்வண்ணம். அவருடைய ஜோல்னா பையைத் திறந்து பார்த்தீர்களென்றால் சமீபத்தில் வாங்கிய புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்கள், ‘கணையாழி’, ‘கொல்லிப்பாவை’, ‘நிகழ்’, ‘கல்குதிரை’ இதழ்கள், குட்டி டார்ச்லைட், பேனா கத்தி, ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட கவர்கள் இருக்கும். பணத்தைக் குப்பை மாதிரிதான் பையினுள் போடுவார்; ஆனால், அதிலிருந்து புத்தகத்தை எடுக்கும்போது தொட்டிலிலிருந்து குழந்தையைத் தூக்குவதுபோல் கவனமாக எடுப்பார்.
அவர் வாங்கும் சம்பளம் பெரும்பாலும் புத்தகங்கள் வாங்குவதிலேயே கழிந்துவிடும். வங்கி ஊழியரான பால்வண்ணம், தனக்கென சொந்த வீடு கட்டிக்கொண்டதில்லை. காரோ, ஸ்கூட்டரோ, தொலைக்காட்சியோ, ஏசியோ, குளிர்சாதனப்பெட்டியோ எதுவும் கிடையாது. தனது இணையருக்கு ஒரு தோடுகூட வாங்கித்தந்ததில்லை. எழுத்தாளர் கி.ரா.வை ஒருமுறை பாம்பு கடித்தபோது, மருத்துவச் செலவுக்காகத் தன்னுடைய கல்யாண மோதிரத்தைக்கூட அடமானம் வைத்துவிட்டார். மனிதர்களே அவருக்குப் பிரதானம்.

அதனால்தான், அவரைச் சுற்றி இளைஞர் கூட்டம் எப்போதும் இருக்கும். புத்தகத்தை அவர்களுக்கு வாசிக்கத் தருவார். புத்தகங்கள் குறித்துப் பேசுவார். புதிதாய் வந்த இளைஞர்களிடம் ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலையோ, ‘தாய்’ நாவலையோ கொடுத்துப் படிக்கச் சொல்வார். புத்தகக் கண்காட்சிகளில் மனதுக்குப் பிடித்த நூல்கள் என்றால் இரண்டு பிரதிகள் வாங்குவார். ஒன்று, தனக்காக; மற்றொன்று, நண்பர்களுக்காக. அதில் முதல் பக்கத்தில் ‘ந’ என்று எழுதியிருப்பார். ‘ந’ புத்தகங்கள் நண்பர்கள் மத்தியில் சுற்றிக்கொண்டிருக்கும்.

அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்கள் என்று பெரும் படையே இருந்தது. ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, உதயசங்கர், அப்பணசாமி, வித்யாசங்கர் எனப் பலரைச் சொல்ல முடியும். பூமணியோடு நெருக்கமான நட்பைப் பேணியவர். வங்கிக்குள் சோ.தர்மன் நுழைந்துவிட்டால் அவரது கண்கள் பால்வண்ணத்தைத்தான் தேடும்.

எல்லா நாளிதழ்களையும் காசுகொடுத்து வாங்கிப் படிக்கும் வழக்கம்கொண்டவர் பால்வண்ணம். ‘தி இந்து’, ‘பிசினஸ்லைன்’ உள்ளிட்ட ஆங்கில இதழ்களையும் வாசித்து, அதில் வரும் வங்கி சார்ந்த முக்கியத் தகவல்களை அடிக்கோடிட்டு அதை நகல் எடுத்து சக தோழர்களிடம் படிக்கத் தருவார். தொழிற்சங்க மாநிலத் தலைவர்களுக்கு அவற்றைத் தபாலில் தவறாமல் அனுப்பவும் செய்வார்.
வாசிப்பைப் போலவே சினிமா மீதும் அவருக்குக் காதல் இருந்தது. நல்ல சினிமாவை நம் மக்கள் ரசித்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. 1974-ல், கோவில்பட்டியில் ‘ஆதர்ச’ என்றொரு திரைப்படக் கழகத்தை ஆர்.எஸ்.மணி, தேவபிரகாஷ், ஜவகர், கோபாலசாமி, இசக்கிமுத்து போன்ற நண்பர்களோடு இணைந்து உருவாக்கினார். சர்வதேச அளவில், தேசிய அளவில் விருது பெற்ற திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கோவில்பட்டியிலேயே எங்களுக்குக் கிடைத்தது. பள்ளிக் காலத்திலேயே ‘பதேர் பாஞ்சாலி’யைப் பார்த்துவிட்டு, காந்தி மைதானத்தில் அலசி ஆராய்ந்ததை நினைத்தால் இப்போதுகூட வியப்பாய் இருக்கிறது.
அவர் எந்தெந்தத் திருமணங்களுக்குச் செல்கிறார் என்பது சுவாரஸ்யமானது. நெருக்கமானவர்களாகவே இருந்தாலும் எல்லாத் திருமணங்களுக்கும் செல்வதில்லை. மணமகன் வரதட்சணை வாங்கியிருக்கக் கூடாது, சாதி மறுப்புத் திருமணமாக இருக்க வேண்டும், சடங்கு சம்பிரதாயங்கள் தவிர்த்த திருமணமாக இருக்க வேண்டும். இந்த மூன்றில் முதல் நிபந்தனை கட்டாயம். மற்ற இரண்டில் ஏதேனும் ஒன்றாவது இருக்க வேண்டும். இதை ரொம்பவும் கறாராகக் கடைப்பிடித்தார்.

ஒருமுறை எழுத்தாளர் வண்ணதாசன் பேசும்போது, “கம்யூனிஸ்ட்டுகள் என்றால் என்னோட நினைவுக்கு வருபவர்கள் இரண்டு பேர். ஒருவர், தோழர் நல்லகண்ணு; மற்றொருவர், நான் அருகிலிருந்து பழகிய தோழர் பால்வண்ணம்” என்றார். உண்மைதான். மார்க்ஸிய இயக்கத்தில் பால்வண்ணம் தன்னை முழுமூச்சோடு ஈடுபடுத்திக்கொண்டவர். வங்கியில் பணிபுரிந்த காலத்தில் மிகச் சிறந்த தொழிற்சங்கவாதியாகத் திகழ்ந்தவர். காதல் திருமணங்கள் பல நடத்தி வைத்த பெருமையும் இவருக்கு உண்டு. நெருக்கடிநிலை காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர்கள் சிறையில் இருந்தார்கள். அவர்களின் குடும்பம் நிராதரவாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக. மத்தியதர தோழர்கள் சிலரிடம் வாராவாரம் குறிப்பிட்ட தொகையை வாங்கி, அந்தக் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகள், பலசரக்குப் பொருட்கள் வாங்கிக்கொடுத்தார். அவருடைய ஜோல்னா பையும் மணிமேகலையின் அட்சயபாத்திரம்போல் தாராளமாக வழங்கிக்கொண்டிருந்தது. இந்த அதிசய மனிதரைப் புத்தகக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். புத்தகங்களின் நடுவே கம்பீரமாக அமர்ந்திருப்பார். உங்கள் புத்தக ரசனையைப் பத்தே வினாடிகளில் புரிந்துகொண்டு, உங்களின் விருப்பப் புத்தகங்களை எடுத்துத்தருவார். உங்களின் ரசனையையொத்த புத்தகங்களைப் புன்னகையோடு நீட்டுவது இவரது இயல்பு.

2001-ல் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு, திருநெல்வேலியிலிருந்து சென்னைக்குக் கிளம்பிவிட்டார். லாரியில் கார்க்கி, டால்ஸ்டாய், துர்கனேவ், செகாவ், மாப்பஸான், ராகுல சாங்கிருத்தியாயன், வெ.சாமிநாத சர்மா, பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், கி.ரா., சுந்தர ராமசாமி ஆகியோர் ஏறிக்கொண்டிருந்தனர். ஏறத்தாழ 75,000 புத்தகங்கள். கொஞ்சம்போல வீட்டுச் சாமான்கள். ஊரே வேடிக்கை பார்த்தது.

எளிய மக்கள் மூச்சுத்திணறும்போதெல்லாம் கண்ணின் மணிபோல் பாதுகாத்துவந்த பால்வண்ணத்தின் இறுதிக் காலம் கொடுமையானது. கடந்த வாரம் அவர் மூச்சுத்திணறிப் பரிதவித்தபோது, சுயவுணர்வின்றி இருந்த பால்வண்ணத்தை ஆம்புலன்ஸில் சுமந்துகொண்டு, வென்டிலேட்டர் வசதி கொண்ட மருத்துவமனைக்காக அவரது ஒரே மகள் ராணி, சென்னையில் நான்கு மணி நேரம் அலைந்து பரிதவித்ததைச் சொன்னாள்.

இறுதியில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இடம் கிடைத்தது. கரோனா தொற்று இல்லையென்றாலும் உயிர் பிரிந்துவிட்டது. தேர்தல் முடிவுகளைத் தமிழக மக்கள் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், 70 லட்சம் ஜனத்திரள் கொண்ட சென்னை மாநகரத்தின் ஒரு மூலையில், நெருக்கமான 20 தோழர்கள் மட்டும் கண்ணீருடன் தோழர் பால்வண்ணத்தை செவ்வணக்கம் கூறி வழியனுப்பிக்கொண்டிருந்தனர்!

- இரா.நாறும்பூநாதன், எழுத்தாளர். தொடர்புக்கு: narumpu@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in