

ஓவியர் ஜெயகுமாரின் நாற்பது ஆண்டு காலக் கலைப் படைப்புகளின் கண்காட்சி சென்னை லலித் கலா அகாடமியில் நாளை தொடங்கவுள்ளது.
இவரது ஓவியங்கள் பெரும்பாலும் இயற்கையையும் பெண்மையையும் கொண்டாடுவதாய் அமைந்திருக்கின்றன. இயந்திரத்தனமான மனித வாழ்க்கையையும் மனித உணர்வுகளையும் ஆழமாகப் பிரதிபலிக்கின்றன. நவீன ஓவியரான பாப்லோ பிக்காசோ மற்றும் போஸ்ட்- இம்ப்ரஷினிஸ ஓவியர்களின் தாக்கத்தை இவருடைய ஓவியங்களில் பார்க்க முடிகிறது.
சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், திரைப்படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். டெல்லி ஓவியக் கண்காட்சியில் இவரது ஓவியங்கள் எட்டு முறை இடம்பெற்றிருக்கின்றன. அதில், ‘டிரான்ஸ்ஃபார்மர்’, ‘மோர் தேன் மீட்ஸ் தி ஐ II (More than meets the eye)’ போன்ற ஓவியங்களுக்கு டெல்லி கண்காட்சியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, ‘அறியப்படாத ஓவியன்’ என்ற தலைப்பில் அவர் தன் ஓவியத் தொகுப்பையும் வெளியிடுகிறார்.
நூறு பக்கங்களில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் அவரது கலைப் பயணத்தை முழுமையாகப் பதிவுசெய்கிறது. நாளை 21-ம் தேதியிலிருந்து 27-ம் தேதி வரை இவரது ஓவியங்களை லலித் கலா அகாடமியில் காணலாம்.