

கேரள மாநிலம் கண்ணனூர் அருகே பெடையன்னூர் கிராமத் தில் தேனீர் கடை நடத்தி வரும் அப்துல் ஷூக்கூர், மாதம் தோறும் தனது கடையில் இலக்கியக் கூட்டங்களை நடத்திவரு கிறார். பத்தாண்டுகளாக எழுத்தாளர்களை அழைத்து நடத்திவரும் இலக்கியக் கூட்டத்தில், நாளை (ஞாயிற்றுக்கி ழமை) தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் பங்கேற்கிறார்.
ஜெயமோகனின் மலையாள நூல்களைப் பற்றி இந்தக் கூட்டத்தில் பேசப்படவுள்ளது. இந்தக் கூட்டங்களில் பங்கேற்கும் எழுத்தாளர்களுக்குப் பயணப்படியோ தங்குமிட வசதியோ கொடுக்கப்படுவதில்லை என்றாலும் உணவு மட்டும் அப்துல் ஷூக்கூரால் தரப்படுகிறது.
டீக்கடையில் இலக்கியக் கூட்டம் நடத்துவது மட்டுமல்ல, இந்தக் கூட்டத்தில் விற்கப்படும் புத்தகங்களிலிருந்து வரும் தொகையைச் சேமித்து நோயால் பாதிக்கப்படும் எழுத்தாளர்களின் மருத்துவச் செலவுக்கு அப்துல் கொடுத்துவிடுகிறார் என்பதும் மற்ற இலக்கியக் கூட்டங்களிலிருந்து இந்தக் கூட்டத்தை வேறுபடுத்துகிறது. தமிழ்நாட்டில் டீக்கடையில் அல்ல, பொதுநூலகங்களிலாவது இப்படிப்பட்ட கூட்டங்களை முன்னெடுத்தாலே பெரும் மாற்றத்தை நாம் ஏற்படுத்த முடியும்.