இவர்களுக்கு விருது எப்போது?

இவர்களுக்கு விருது எப்போது?
Updated on
1 min read

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் ஆ. மாதவனுக்கு வாழ்த்துக்கள். அவரது ‘கிருஷ்ணப்பருந்து’ ஒரு ஃபிராய்டிய புதினம். சொல்லப்போனால் அந்த நாவல் வயதான ஒருவரின் ‘மோகமுள்’. இளம் வயது பாபுவுக்கு பதில் ஒரு முதிர்ந்த மனிதர். கச்சிதமான வடிவில், மென்மையான அங்கதத்துடன் கூடிய எண்பதுகளுக்கே உரித்தான பாணியில் சில நல்ல சிறுகதைகளையும் அவர் எழுதி இருக்கிறார்.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் ஜெயமோகனுக்கும் ‘நரைகூடிக் கிழப்பருவம் எய்தும்’ முன் சாகித்ய அகாதமி விருது கொடுத்துவிட வேண்டும். அதேபோல் நாம் போதுமான அளவு அங்கீகரிக்காத சாதனையாளர்கள் நம் கவிஞர்கள். தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன், எம்.யுவன் (யவனிகா ஸ்ரீராம், என்.டி ராஜ்குமார், குட்டிரேவதி என இப்பட்டியல் நீள்கிறது) போன்றோரும் இவ்விருதைப் பெறத் தகுதியானவர்களே. பொதுவாய் விருது கொடுப்பதில் புனைவுக்கு மட்டும் கொடுக்கப்படும் மிகை கவனத்தை அ. ராமசாமி சமீபத்தில் கண்டித்து எழுதியிருந்தது கவனிக்கத்தக்கது.

பல அற்புதமான கோட்பாட்டு மற்றும் ஆய்வுக் கட்டுரைகள், சமூகவியல், மொழியியல் நோக்கிலான அலசல் நூல்களை எழுதியவர்களையும் எத்தனைக் காலம் இருட்டிலே வைத்திருக்கப் போகிறோம்? ராஜ் கௌதமன், ரவிக்குமார், தமிழவன், அ.கா பெருமாள் போன்றவர்களை என்றைக்கு கவுரவிக்க போகிறோம்? பொத்தாம்பொதுவாய் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு விருது என்றில்லாமல் புனைவு, கவிதை, உரைநடை என பிரித்து மூன்று சாகித்ய அகாதமி விருதுகள் கொடுத்தால் இந்த சாதனையாளர்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஓரளவுக்கு கவர் செய்ய முடியும். நடக்கும் என நம்புவோம்!

- ஆர். அபிலாஷ் எழுதிய ஃபேஸ்புக் பதிவிலிருந்து சுருக்கமாக…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in