

மந்திரம் போல் வேண்டுமடா சொல்லினம் என்றான் பாரதி. மந்திரம் போல் கோடுகள் வாய்க்கப்பெற்ற மாயக்கார ஓவியர் மனோகர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக மனோகரின் கோடுகளை, ஓவியங்களைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். அவை ஒரு நாளும் சலிப்பு தந்ததில்லை. அவரது ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு புதிய அனுபவத்தைத் தந்த வண்ணமே இருக்கிறது.
மீடியங்களில் மாறி மாறி விளையாடும் துணிச்சல் வெகு சில ஓவியர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. மீடியங்கள் மாறினாலும் அதற்குரிய சவால்களைச் சாகசமாக எதிர்கொண்டு அதிலும் தன்னை ஸ்தாபித்துக்கொண்டவர் மனோகர். சிறந்த ஓவியர்கள் நல்ல ஆசிரியர்களாகவும் இருப்பது எப்போதாவது நிகழ்கிற ஒன்று. ஆனால் சிறந்த ஆசிரியராக, தேர்ந்த ஓவியராக இவர் வாழ்கிறார்.
ஓவிய உள்ளடக்கம்
மனோகரது ஓவியங்களின் உள்ளடக்கங்கள், மாணவர்களை அவரைப் போலவே வரையத் தூண்டி ஆளுமை செலுத்திக்கொண்டிருக்கின்றன. இவரது மாணவர்கள் பலர், தனித்திறன் வாய்ந்த சிறந்த ஓவியர்களாக உருவான பின்னும், இவரது உள்ளடக்கங்களும் இவர் ஓவியத்தைக் கையாளும் திறனும் இன்னும் அவர்களைத் தொடர்ந்தபடியே இருக்கின்றன. தகப்பனின் ஏதோ ஒரு சாயல் குழந்தைகளிடம் எப்படி இல்லாது போகும்? தன் கலையின் மூலமும் போதனையின் மூலமும் இவரைப் போல அதிகபட்ச மாணவர்களை அடைந்த ஓவிய ஆசிரியரைக் காண்பது அரிது. பெருமிதங்கள் ஏதுமின்றி இயல்பாகக் கற்றுக் கொடுப்பதில் பெரும் மோகம் கொண்டவர் மனோகர். கற்பிப்பதில் அவர் கொண்டிருந்த சத்தியபூர்வமான பிணைப்பே இவ்வளவு மாணவர்களைச் சிறந்த ஓவியர்களாக்கியிருக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில், குறிப்பாக கும்பகோணத்தில் மனோகர் கண்டதும் வாழ்ந்ததுமே அவரது ஓவியங்களின் உள்ளடக்கங்கள். வயல்வெளிகள், தோப்பு துரவுகள், ஆறு குளங்கள், ஆடுமாடுகள், பறவைகள், வாகனங்கள், மனிதர்கள், தேர்கள், கடவுள்கள், கதவுகள் என இப்படி எந்த ஓவியமும் அவர் கண்ட காட்சிகளிலிருந்து, பெற்ற அனுபவங்களிலிருந்து வந்தவை. ஒரு வகையில் மனோகரின் ஓவிய உலகம் தஞ்சை மாவட்டத்தைத் தாண்டவில்லை. நவீன உள்ளடக்கங்களுக்கோ அரூபத்துக்கோ அவர் போய்விடவில்லை. தன் மாவட்டத்தில் உள்ளவற்றைச் சொல்லவே ஆயுள் போதாதென்று அவர் அபிப்ராயப்படுகிறார். அவருடைய ஓவியங்களைப் பார்க்கையில் அது உண்மைதான் என்றும் படுகிறது.
உள்ளதை உள்ளபடி வரைய ஓவியன் எதற்கு? ஒளிப்படக் கலைஞன் போதுமே. மனோகர் உள்ளதைச் சொல்லியபடியே அதற்குள் ஒரு வெளியைக் கட்டமைக்கிறார். அது உணர்வு களால் ஆனது. உணர்வுகளைச் சொல்லும் வண்ணங்களால் ஆனது. நீங்கள் கண்ட உருவத்திலிருந்து, காட்சிகளிலிருந்து சற்றே சிதைந்து மாறுபட்டது. அந்த சிதைக்கப்பட்ட செமி அப்ஸ்ட்ராக்ஷன் வழியேதான் அவர் மிகச் சிறந்த ஓவியராக நம்மை வந்தடைகிறார். அடக்கமான தொனியில் வெளிப்பட்ட வாறே ஆச்சரியங்களை நிகழ்த்திக்காட்டுகிறார். அபூர்வ சேகரங் களை முன்வைக்கிறார். பிரமிப்பூட்டுகிறார். கல்மிஷமற்ற கிராமத்துச் சிறுவனாக நம்மைப் பல இடங்களுக்கும் கூட்டிச் செல்கிறார். அவர் உலகத்தைப் படைப்பின் வழியே அவர் காட்டும்போது, சில சமயம் நாம் வாயடைத்து, திகைத்துப்போய் நிற்கிறோம். அந்தத் திகைப்பு அவர் படைப்பின் கட்டுமானம் தந்த திகைப்பு. வண்ணங்கள் எனும் அடங்காக் குதிரைகளைக் கட்டி ஆண்டு அவர் பயணப்பட்டுவந்ததால் ஏற்படும் திகைப்பு. சிறு சட்டகங்களுக்குள் அசாத்தியங்களை நிகழ்த்திக் காட்டியதால் வந்த திகைப்பு.
புதிய ஓவிய மொழி
சந்தானராஜ், ஆதிமூலம், ஆ.பி. பாஸ்கரன், டிராட்ஸ்கி மருது போன்ற தடம் பதித்த தமிழக ஓவியர்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் மனோகர். அவர்கள் கோட்டோவியங்களிலும் தைல வண்ண ஓவியங்களிலும் வல்லவர்கள் என்றால் மனோகர் அவற்றோடு நீர்வண்ண ஓவியங்களிலும் வல்லவர். அவரது நீர்வண்ண ஓவியங்கள் பிரத்யேக அழகு கொண்டவை. நீர்வண்ணங்கள் சற்றுப் பிசகினாலும் தளும்பி விரவி வேறொரு பொருள் தந்து நிற்பவை. அதன் தளும்பலும் பரவலும் அடர்த்தியும் நீர்மையும் மனோகர் பயன்படுத்துகையில் புதியதொரு ஓவிய மொழியை உச்சரித்து நிற்கின்றன. வண்ண இடறல்களைக்கூட வேறொன்றாய் மொழிபெயர்த்துவிடுகிறது அவர் ஓவிய மொழி. அது பெரிய கலைஞர்களுக்கே வசப்படுகிற வித்தை. அதை நீர்வண்ண ஓவியங்களில் அனாயாசமாகக் கையாண்டுவிடுகிறார் மனோகர்.
தனிநபர் கண்காட்சிகளில் இன்னும் போதிய கவனம் செலுத்தியிருந்தால், அப்ஸ்ட்ராக்ஷன் பாணி ஓவியங்கள் வழியேவும் கொஞ்சம் போயிருந்தால் மனோகர் இன்னும் கூடுதலான தளங்களில் சென்று சேர்ந்திருப்பார்.
உணர்ச்சிவசப்படுவன்தான் கலைஞன். மனோகர் சதா உணர்ச்சிவசப்படுவது அவர் படைப்புகளில் வெளிப்படுவ துண்டு. அவர் படைப்புக்கும் வாழ்வுக்குமான பிணைப்பு அது. அதுபோலவே யதார்த்த வாழ்வில் மனோகர் உணர்ச்சி வசப்பட்டுப் பல வாக்குறுதிகளைக் கொடுப்பார். அதைப் பல சமயங்களில் அவரால் நிறைவேற்ற முடியாது. அப்படி நிறை வேறாமல்போனதுதான் இதுவரையிலான அவரது ஓவிய மாதிரிகள் அடங்கிய முழுமையான கேட்லாக் வெளியீடும்.
தன் ஓவியங்களை ஆண்டுவாரியாக வரிசைப்படுத்திப் பார்வையாளரின் பார்வைக்கு முன்வைக்காத ஓவியர்களில் ஒருவராகவே அவர் இன்னும் இருக்கிறார். இதைக் கலைஞனின் விச்ராந்தியான போக்கு என்பதா, அசட்டை என்பதா? இவர் படைப்புகள் பற்றி நிறைய விவாதிக்கப்பட வேண்டும். அதற்கு அவரது காத்திரமான படைப்புகள் அதிக அளவில் பார்வைக்கு வர வேண்டும். கால வெளியில் தன் படைப்புகளை முன் வைத்து அபிப்ராயங்களை உருவாக்கும் முனைப்பும் ஒரு கலைஞனுக்கு அவசியமான ஒன்று.
சரியான அர்த்தத்தில் நல்ல ஆசிரியனாகவும் தமிழகத்தின் சிறந்த ஓவியர்களில் ஒருவராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட மனோகர் இப்போது, ஆசிரியராகப் பணி ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்டாலும் ஒரு கலைஞனாக அவர் செய்ய வேண்டிய பங்களிப்புகள் கணிசமாகக் காத்திருக்கின்றன.
- ரவி சுப்பிரமணியன், கவிஞர், ஆவணப்பட இயக்குநர். தொடர்புக்கு: ravisubramaniyan@gmail.com