Published : 13 Dec 2015 13:42 pm

Updated : 13 Dec 2015 13:43 pm

 

Published : 13 Dec 2015 01:42 PM
Last Updated : 13 Dec 2015 01:43 PM

அஞ்சலி: பேராசிரியர் சே.ராமானுஜம் - போய்வாருங்கள் ராமானுஜம்!

நாடக ராமானுஜம் என்று அனைவராலும் அறியப்பட்ட பேராசிரியர் ராமானுஜம் (1935 - 07.12.2015) கடந்த டிசம்பர் 7 அன்று தஞ்சாவூர், செல்லையா நகரிலுள்ள தனது இல்லத்தில் காலமானார். கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் நவீன நாடகம் என்று அறியப்படும் நாடகச் செயல்பாடுகளின் தொடக்கப் புள்ளியாக இருந்தவர் பேராசிரியர் ராமானுஜம். தமிழ்நாட்டைத் தாண்டியும் செல்வாக்கு செலுத்திய கலை ஆளுமை என்னும் பெருமை ராமானுஜத்துக்கு மட்டுமே உண்டு.

வாழ்க்கைப் பயணம்

தொடக்கக் காலத்தில் காந்தியடிகளால் பரிந்துரைக்கப்பட்ட ‘ஆதாரக் கல்வி’த் திட்டத்தை அமலாக்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகச் செயல்பட்டவர், பின்னர் காந்தி கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவரது நாடக ஆர்வத்தைக் கண்டு, அப்போது காந்தி கிராமத்தில் பணியாற்றிய ஜி.சங்கரப்பிள்ளை, எஸ்.பி.சீனிவாசன் போன்றவர்கள் தந்த ஊக்கத்தால் டெல்லியிலுள்ள தேசிய நாடகப் பள்ளியில் 1960-களில் சேர்கிறார்.

புகழ்மிக்க இந்திய நாடக ஆளுமையான இப்ராஹிம் அல்காஜியின் கீழ் பயின்ற அவர், 1967-ல் நாடகக் கல்வியை முடிக்கிறார். பின்னர் பத்தாண்டுகள் காந்தி கிராமத்தில் ஆசிரியர் பணி. 1977 முதல் கோழிக்கோடு பல்கலைக்கழகம், திருச்சூர் நாடகப்பள்ளியின் துணை இயக்குநர். 1986 முதல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறைத் தலைவர் எனப் பணியாற்றினார்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட மிக முக்கியமான நாட கங்களைப் படைத்தளித்தவர், நூற்றுக்கணக்கான பயிலரங்குகளை நாடு முழுவதும் நடத்தியவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு, புதுவை, ஹைதராபாத் பலகலைக்கழகங்களில் நாடகக் கல்விக்கான அடிப்படையான வரைவுத் திட்டங்களை உருவாக்கியவர் என அரை நூற்றாண்டுக்கும் மேல் தென்னிந்திய நாடக உலகில் மிக நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டவர் ராமானுஜம். தற்போது அவரது பயணம் முடிவுக்கு வந்துவிட்டது.

நாடகச் செயல்பாடு

நவீன நாடக அணுகுமுறையின் பிதாமகரான அல்காஜியின் மாணவனாக இருந்தபோதிலும் அவரது அணுகுமுறையை ராமானுஜம் முழுவது மாக சுவீகரித்துக்கொள்ளவில்லை. 1960-களின் இறுதியில் கேரளாவில் ‘நாடகக்களரி’ எனும் முன்னெடுப்புகளில் ஜி.சங்கரப்பிள்ளையுடன் சேர்ந்து அவர் செயல்படத் தொடங்கியபோது, எம்.கோவிந்தனின் ‘தனது நாடக வேதி’ எனும் கோட்பாட்டில், அதாவது ஒவ்வொரு மண்ணுக்கும் தனக்கே உரித்தான ஒரு நாடக மரபைத் தேடிக் கண்டடைகிற ஒரு செல்நெறியில், தனது கவனத்தைத் திருப்பலானார்.

‘மண்ணுக்கேயுரிய நாடகங்களை’த் தேடிக் கண்டடைவது, நாடகங்களை இந்திய மயமாக்கு தல் போன்ற முயற்சிகள், மைய அரசின் சங்கீத நாடக அகாடமியால் 1980-களின் தொடக்கத்தில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் பேராசிரியர் ராமானுஜம் 1960-களின் இறுதியிலேயே இக்கோட்பாட்டை வரித்துக்கொண்டவர்.

இந்திரா பார்த்தசாரதியின் ‘கால யந்திரங்கள்’, கூத்துப் பட்டறைக்காக மாக்ஸ்முல்லர் பவனுடன் சேர்ந்து தயாரித்த ஸ்விஸ் நாடகாசிரியர் மாக்ஸ் பிரிஷ்ஷின் ‘அண்டோரா’ இவை பேராசிரியரின் முக்கியமான ஆக்கங்கள். இவை மரபான வடிவங்களின் பாதிப்பில் உருவாக்கப்பட்டவையல்ல. தெளிவான யதார்த்த பாணியில் அமைந்தவை.

யதார்த்த பாணி அல்லது மரபார்ந்த ஒயிலாக்க பாணி என்று ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் நின்றுவிடாமல் எல்லாவற்றிற்குள்ளும் பிரவேசித்தார். எந்தவொரு பாணியிலும் தனக்கென ஓர் அணுகுமுறையைக் கொண்டிருந்தார்.

அழகியல் அனுபவம்

பேராசிரியரின் நாடக அணுகுமுறை, எந்தவொன்றையும் அதன் சமூகச் சூழமைவில் மட்டும் வைத்து இனம் காணாமல் அதனை மீட்டெடுத்து ஓர் அழகியல் அனுபவமாக மாற்ற யத்தனிப்பது. உதாரணமாக, ‘ஒப்பாரி’ என்பது நீத்தார் இல்லத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வு. உண்மையிலேயே மனதார வாய்விட்டு அழுபவர்களுடன் ஒப்பாரி வைப்பதையே தொழிலாகக் கொள்வோரும் அங்கு உண்டு. அவர்கள் உண்மையிலேயே மனம்விட்டு அழுகிறார்களா என்ற கேள்வியை எழுப்ப முடியாத அளவுக்கு உங்களது அடிவயிற்றை ஊடுருவுகிற அந்த ஒப்பாரி கிளர்த்துகிற சோகத்தில் நீங்கள் ஆழ்ந்துதான் போவீர்கள்.

பேராசிரியர் ராமானுஜம் ஒப்பாரியை ஒரு கலையாகப் பார்த்தார். தொழில்முறையில் ஒப்பாரியிடுவோரைக் கலைஞர்களாகப் பார்த்தார். 1980-களின் இடையில் மேடையேறிய ‘வெறியாட்டம்’ அவரது முக்கியமான படைப்புகளிலொன்று. இது கிரேக்க நாடகமான யூரிப்பிடீஸின் ‘ட்ராய் மகளிரைத்’ [Trojan women] தழுவியது. அப்போது இலங்கையில் தமிழர்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவ ஒடுக்குமுறையை இந்நாடகம் பிரதிபலித்தது. போர்களில் முதல் பலிகளாகக் கூடிய பெண்களதும், குழந்தைகளதுமான சோகம் பீறிட்டு வரும் நிகழ்வு அது. நாடகத்தில் ‘ஒப்பாரி’ என்பது வலுவான உத்தியாகவும் நாடகத்தின் உடலாகவும் இருந்தது.

காந்தி மேரி, கூந்தலை அவிழ்த்துவிட்டு மண்டியிட்டு அமர்ந்து கைகளைத் தரையில் அறைந்து பாடும் மேடைப் படிமம், தமிழ் நாடகவுலகு மறக்க முடியாத ஓரனுபவம். ஒப்பாரி, இங்கே சோகத்தைக் கிளர்த்தும் ஒரு மனித முயற்சி மட்டுமல்ல; ஆழ்மனத்துக்குள் நுழைந்து சர்ப்பம்போல் சுருண்டு படுத்துக்கொள்ளும் ஓர் அழகியல் அனுபவம்.

1986-ம் ஆண்டு மதுரையில் ஐந்து நாள்கள் நாடகப் பட்டறை ஒன்று நடந்தது. இதில்தான் முதன்முதலாகப் பேராசிரியரைச் சந்தித்ததுப் பயிற்சி மேற்கொண்டேன். கடந்த பத்தாண்டுகளில் அவரோடு பல நாடகப் பயிலரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அவரது வகுப்புகள் திட்டமிட்டுக் கட்டமைக்காததுபோலத் தோன்றியபோதிலும் அந்தத் தருணத்தில் மேலிடும் ஒன்றை மையப்படுத்தி மிகப் பெரும் ஞானத்தைக் கடத்திவிடுவார். கடந்த 2014 ஜனவரியில், கன்னியாகுமரி மாவட்டம், முட்டத்தில் எனது ஒருங்கிணைப்பில், த.மு.எ.க.ச. சார்பில் 12 நாட்கள் நடைபெற்ற ‘அரசியல் அரங்க திறன் வளர் பயிலரங்’கில் எட்டு நாட்கள் பயிற்சியளித்தார். ஒரு நாள் அங்குள்ள ஒரு பூவரச மரத்தை வைத்துப் பயிற்சியளிக்க ஆரம்பித்துவிட்டார். சுவாரஸ்யமாக உரையாடக்கூடிய அவர், ஓய்வு நேர உரையாடல்களைக்கூட ஞானம் தோய்ந்த அனுபவமாக மாற்றிவிடக்கூடியவர்.

உரத்துச் சொல்லவில்லையெனினும், இந்திய மரபில் எல்லாம் இருக்கிறது என்று நம்பியவர் அவர். எல்லோரையும், எல்லாவித போக்குகளையும் உள்ளடக்கி அரவணைத்துச்செல்கிற போக்கு அவரிடத்தில் இருந்தது. எல்லாவற்றையும் ஒன்றுபோலல்ல எனினும் சமமமாகப் பார்த்தவர் அவர். நாடகப் பயிலரங்குகள், வகுப்புகள் என்றால் தட்டாமல் எங்கு நடந்தாலும் வந்துவிடுவார். வருகிற டிசம்பர் 15-ம் தேதியிலிருந்து பத்து நாட்கள் ‘குழந்தைகள் அரங்கப் பயிலரங்கு’ ஒன்றைக் கேரளாவில் நடத்தத் தேதி கொடுத்திருந்தார்.

மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்ட அவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது எங்களைக் கண்டதும் அவருடைய மூத்த மகள் கிரிஜா கதறினார். “சார்! நாடக ஒர்க் ஷாப் இருக்குன்னு சொல்லுங்க சார்! எழுந்து வந்துடுவார் சார்!! வகுப்பு எடுக்கணும்னு சொல்லுங்க சார்! எழுந்து வந்துடுவார் சார்!!” என்று.

அப்படிச் சொல்லிப் பார்க்கலாமா என்று எங்களுக்கு எண்ணம் வராமலில்லை. மரணம் இயற்கையானது என்று பகுத்தறிவு ஏற்றுக் கொண்டாலும் மனம் அதை ஏற்பதில்லைதானே.

கண்ணீருடன் விடைதருகிறோம், போய்வாருங்கள் ராமானுஜம் சார்! நீங்கள் நாடகக் கலையில் காட்டிய சிரத்தையை, ஆழமான அர்ப்பணிப்பை நாங்களும் தொடர முயல்வோம்! அதுவே நாங்கள் உங்களுக்குச் செய்யும் அஞ்சலி!

தொடர்புக்கு: pralayans@gmail.com

அனிதா ரத்னம், பரத நாட்டியக் கலைஞர்

பேராசிரியர் எஸ். ராமானுஜம், தேசிய விருது பெற்றவர், அரங்கக் கலையில் எனக்கு வழிகாட்டி, இப்போது பிரபலமான கைசிக நாடகத்துக்குப் புத்துயிர் கொடுக்கும் சவாலான முயற்சியில் கடந்த 20 ஆண்டுகளாக எனக்குப் பக்கபலமாக இருந்தவர்.

ஆசிரியர், குரு, கூட இருந்து உற்சாகமூட்டி யவர். உங்களின் மரணம் பலருக்கும் பேரிழப்பு. என்ன ஒரு பிரமாதமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறீர்கள்! அமைதியான முடிவு! இந்திய அரங்கவியலுக்கு 80 ஆண்டுகள் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் நிகழ்த்தியிருக்கிறீர்கள். உங்களுக்குத் தலை வணங்குகிறோம்!

- ஃபேஸ்புக் பதிவு

ந.முத்துசாமி, கூத்துப்பட்டறை

சே.ராமானுஜத்தின் மிக முக்கியமான பங்களிப்பு குழந்தை களுக்கான நாடக அரங்கத்தை உருவாக்கியதில் இருக்கிறது. கேரளத்தில் ஜி. சங்கரப் பிள்ளையுடன் சேர்ந்து நாடகங்களை இயக்கிய சே. ராமானுஜம், கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் குழந்தைகள் நாடக அரங்கம் உருவாவதற்கான முன்னோடி ஆவார். அவரது ஒட்டுமொத்தப் பங்களிப்பு என்பது திருக்குறுங்குடி ஆலயத்தில் நிகழ்த்தப்பட்ட கைசிக புராணத்தை மறு ஆக்கம் செய்ததில் இருக்கிறது. தொலைந்து போயிருந்த ‘கைசிகப் பண்’ பிரதியைச் சிரமப்பட்டுக் கண்டுபிடித்து மெலட்டூர் பாகவத மேளாவில் நடிப்பவர்களையும் தஞ்சாவூர் நட்டுவனார்களையும் அழைத்துவந்து இரண்டு தேவதாசிகளின் ஒருங்கிணைப்பில் மீண்டும் நிகழ்த்திக் காட்டியது ஒரு சாதனை. அவர் அந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்காவிட்டால் கோவிலுடன் பழம்நினைவாகப் போயிருக்கும் கைசிக நாடகம்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ராமானுஜம்வாழ்க்கைப் பயணம்நாடகச் செயல்பாடுஅழகியல் அனுபவம்பேராசிரியர் ராமானுஜம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author