

‘வலி’, ‘இரவு’, ‘சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது,’ ‘மாயநதி’ என அடுத்தடுத்து சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுக் குறுகிய காலத்தில் தனக்கென ஓர் இடத்தைத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் உருவாக்கிக்கொண்டவர் கலைச்செல்வி. இவரது ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு ‘கூடு’. எழுத முடியாமல் மனதில் அசைபோட மட்டுமே சாத்தியமுள்ள பெண்களின் அகப்பிரச்சினைகள் சார்ந்து தொடர்ந்து எழுதிவருகிறார். இரண்டு விஷயங்களில் இவரது எழுத்து தனித்துவமானவை. ஒன்று, பகடி; மற்றொன்று, சூழலியல்.
நிலத்தைப் பெண்களின் உடலாகக் கருதி, அதன் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். இந்தப் புள்ளியிலிருந்துதான் இவரது பெரும்பான்மைக் கதைகள் உருப்பெறுகின்றன. எந்த வரியிலும் கதையின் தடம் மாறக்கூடும் மொழிச் சிக்கனம் இந்தத் தொகுப்பில் இன்னும் கூடியிருக்கிறது. காடு மீது அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் நிகழ்த்தும் வன்முறையினூடாக அலைவுக் குடிகளாக மாறும் பழங்குடிகளின் துயரம் குறித்தும் வனவிலங்குகளின் அழிவு குறித்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார். இவரது தொகுப்புகள் ஒவ்வொன்றிலும் இரண்டு மூன்று கதைகளாவது இயற்கை மீதான மனிதனின் சுரண்டலைப் பேசக்கூடியதாக இருக்கும்.
எந்த வாழ்க்கையையும் வாழப் பழகிக்கொள்ளும் பெண்களைத்தான் கலைச்செல்வி தம் புனைவுகளில் தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறார். இவருடைய சிறுகதைகள் மொழியின் மீது மௌனத்தை ஏற்றுபவை. சமூக அறத்தை மீறும் நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாகவும் இவரது புனைவுகளை உள்வாங்கிக்கொள்ளலாம். எல்லாக் கதைகளின் மீதும் ஒரு மெல்லிய மூடுபனி படர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. தொடக்க காலக் கதைகளில் இந்தத் தன்மை இல்லை; ஒரு தெளிவான நிலமும் கதையும் இருந்தன. இந்தத் தொகுப்பில் தன்னையே அவர் கடந்திருக்கிறார்.
கூடு
கலைச்செல்வி
யாவரும் பதிப்பகம்
வேளச்சேரி,
சென்னை- 42.
விலை: ரூ.190
தொடர்புக்கு:
90424 61472