

கடந்த 50 ஆண்டுகளாகக் கவிதை, அபுனைவு, புனைவு என்று படைப்புலகில் இடையறாது இயங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளி கலாப்ரியா. கவிதைப் பரப்பில் கலாப்ரியாவின் இடம் தனித்துவமானது. 18 கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. கூடவே, 12 கட்டுரைத் தொகுப்புகளும். இவ்வளவுக்குப் பிறகும் அவரிடம் சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. அதற்குக் கவிதைகள் போதாதபோது அவர் தேர்ந்தெடுக்கும் களம் புனைவாக அமைகிறது. குறிப்பாக, நாவல் என்னும் வடிவம்.
‘வேனல்’, ‘பெயரிடப்படாத படம்’ நாவல்களின் வரிசையில் இப்போது மூன்றாவது நாவலாக வந்திருக்கிறது ‘பேரருவி’. அருவிகளின் ஸ்தலமாகிய குற்றாலம்தான் நாவலின் களம். அது கலாப்ரியாவுக்கு நன்கு அறிமுகமான நிலப்பகுதியும்கூட. குற்றாலத்தின் குளிர்ச்சியான அருவிகளும், மந்திகள் கொஞ்சி விளையாடும் மலை சூழ்ந்த நிலக்காட்சிகளும் நாவலில் மிக அழகாகப் பதிவாகியுள்ளன. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு சார்ந்த வாழ்க்கையும், உணவு வகைகளும், கூடவே கண்ணதாசனின் கவிதை வரிகளும் கலாப்ரியாவுக்கே உரிய ரசனையின் வெளிப்பாடாக நாவல் முழுதும் விரவிக்கிடக்கின்றன.
திரைக்கதை எழுத அமைதியான சூழலை நாடி குற்றாலத்தில் இருக்கும் நண்பன் நாகராஜனின் மாளிகையில் தங்கவருகின்றனர் முத்துக்குமார், சிவக்குமார், இளங்கோ. நான்கு நண்பர்களில் நாவலின் குவிமையம் கவிஞர் முத்துக்குமார்தான். தனக்குள்ளே ஒடுங்கிக்கொள்ளும் கூச்ச சுபாவி, நத்தையோடுபோல சுருண்டுகொள்ளும் தொட்டாற்சிணுங்கி, டைரியில் தன் மனதைக் கொட்டுபவன், பொதுஇடங்களில் சாமர்த்தியமாகப் பேசத் தெரியாதவன். இப்படிப்பட்டவன் பேரருவி போன்ற ஒரு பெண்ணின் அன்பாலும், இன்னொரு பெண்ணின் விடுதலை பெற்ற காமவுணர்வாலும் தன்னை எவ்வாறு சுயபரிசீலனை செய்துகொள்கிறான் என்பதும், தன்னிடமிருந்தே எவ்வாறு விடுதலை அடைகிறான் என்பதுமே நாவலின் மையம்.
முத்துக்குமார் ஊடாகவே கதை சொல்லப்படுகிறது. எளிதில் சுருங்கிப்போகும் தொட்டாற்சிணுங்கி மனம் கொண்ட கவிஞன் இறுதியில் தனது சுபாவத்தை முற்றிலும் மாற்றிக்கொள்ளும்படியான தரிசனத்தைக் குற்றால நாட்கள் அளிக்கின்றன. இதுவே நாவலின் ஆதார சுருதி. தன் காதலியின் தற்கொலையால் பிளவுண்டிருக்கும் முத்துக்குமார், ஆனந்தியின் வடிவத்தில் அவளை மீளுருவாக்கிக்கொள்கிறான். ஆனந்திக்கும் அவனது காதலிக்கும் இருக்கும் அபூர்வமான உருவ ஒற்றுமையும் அவளின் புத்திசாலித்தனமும் அவனை மனம் என்னும் ஆமை ஓட்டிலிருந்து மெல்ல வெளிக்கொண்டுவருகிறது. இந்த ரசவாதம் ஆனந்திக்கும் புரிந்தே இருக்கிறது. பெயரிட முடியாத ஒரு உறவுப் பிணைப்பு அவர்களிடையே அரும்பி மலர்கிறது.
அதே நேரம், நடிக்க வரும் சைலேந்திரிக்கும் முத்துக்குமாருக்கும் உடல்ரீதியான பிணைப்பு நிகழ்கிறது. அனைத்துமே உடல்சார்ந்தவைதான் என்று வாதிடும் நவீன பிம்பமாகப் படைக்கப்பட்டிருக்கும் சைலேந்திரியும் ஒருகட்டத்தில் முத்துக்குமாரைக் காதலிக்கிறாள். ஆனால், அதைக் கடந்துபோக அவளால் முடிகிறது. ஆனந்தியுடன் மனரீதியாக இணையும் முத்துக்குமாரின் மனதில் வாணியின் பிம்பம் முதன்முறையாகக் கலையத் தொடங்குகிறது.
சொல்வதற்கு ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன கலாப்ரியாவுக்கு. குறிப்பாக, சீசன் சமயத்தில் குற்றாலத்தில் கடைகளுக்கான ஏலத்தில் நடக்கும் தகிடுதத்தங்கள், அருவிகளில் ஏற்படும் உயிர்ப்பலிகள், அப்படி நிகழ்ந்தால் சீசன் நன்றாக இருக்கும் என்பது போன்ற குரூர நம்பிக்கைகள், சீசனில் மழை பெய்யாவிட்டால் ஏலம் எடுத்தவர்கள் மேற்கொள்ளும் மூடநடவடிக்கைகள் இப்படி. நாவலில் வெளிப்படும் நிலக்காட்சிகளின் வர்ணனைகளையும், உணவு வகையறாக்களின் வர்ணனைகளையும் இனவரைவியல் கூறுகள் கொண்ட அங்கமாகக் காண்கிறேன். நாவலின் இரு முக்கியப் பெண் பாத்திரங்களான ஆனந்தியும் சைலேந்திரியும் சிந்தனை மரபில் இருவேறு துருவங்களாக இருப்பினும் இலக்கியம், கவிதை, இசை, ஓவியம் என்ற பரந்துபட்ட ரசனை கொண்ட பெண்மணிகளாக இருக்கிறார்கள். ஆனந்தி அறிவார்த்தமான, பண்பாட்டை மீறாத, அதே சமயம் அதன் எல்லையைத் தொடும் துடுக்குத்தனமுள்ள பெண்ணாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். சைலேந்திரியோ கட்டுப்பாடுகளற்ற, காதல் என்பதே ஒரு பித்தலாட்டம், எல்லாமே காமம்தான் என்கிற கோட்பாடு உடையவளாகப் படைக்கப்பட்டிருக்கிறாள்.
இழந்த காதலின் வெறுமையில் உழன்றுகொண்டிருக்கும் முத்துக்குமாருக்கு சைலேந்திரியின் உறவு ஒரு புதுப் பாதையைக் காட்டுகிறது; ஆனந்தியின் அன்பு அவனது உலகை மேலும் அழகாக்குகிறது. சாகசங்கள் நிறைந்த ஒரு மாதக் குற்றால வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் மேன்ஷன் வாழ்க்கைக்குத் திரும்பும் முத்துக்குமார், மனதளவில் பெரும் மாற்றம் கொண்டவனாக முதிர்ச்சி அடைந்திருக்கிறான். அதை அவனுக்கு வழங்கியது அன்பும் காமமும் குறித்த விடுதலை உணர்வுதான் என்பது நாவலின் செய்தி.
நாவலின் இறுதியில் பேரருவி என பாணதீர்த்தத்தை வியக்கும் சைலேந்திரியை இடைமறிக்கும் முத்துக்குமார், “பாணதீர்த்தம் மட்டுமல்ல; நாம் பார்த்துப் பழகிய அனைத்து மாந்தர்களுமே பேரருவிதான்” என்கிறான். மனிதர்களின் எண்ணங்கள், அன்பு, விசுவாசம், முரண்பாடுகள் எல்லாம் பேரருவிதானே!
பேரருவி
கலாப்ரியா
சந்தியா பதிப்பகம்
அசோக் நகர், சென்னை-83.
தொடர்புக்கு: 044–24896979
விலை: ரூ.270