Published : 17 Apr 2021 05:37 AM
Last Updated : 17 Apr 2021 05:37 AM
தமிழ் வாசகர்களுக்கு, ‘உப்புவேலி’ புத்தகம் வழியாக ஏற்கெனவே பரிச்சயமான ராய் மாக்ஸம் எழுதிய ‘தே: ஒரு இலையின் வரலாறு’, ‘இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு: ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498 – 1765)’ எனும் இரண்டு முக்கியமான புத்தகங்கள் இப்போது தமிழுக்கு வந்திருக்கின்றன. இந்த மூன்று புத்தகங்களுமே ஒருவகையில் இந்தியாவின் காலனிய வரலாற்றை வெவ்வேறு கோணங்களில் பேசுபவை. இன்னொரு வகையில், ஒரு ஆங்கிலேயரான ராய் மாக்ஸமின் காலனிய வரலாற்றுத் தேடலைப் புரிந்துகொள்வதற்கானவையாக இருக்கின்றன. ஒரு நாவலாசிரியராகத் தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கிய ராய் மாக்ஸம், பின்னாளில் வரலாற்றாசிரியராகப் பரிணமித்தது என்பது அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நகர்வாகத்தான் இருந்திருக்க வேண்டும். இந்த நகர்வை, வரலாற்றுச் சுமை மிகுந்த அவருடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் நடவடிக்கையாக வாசிக்கவும் இடமிருக்கிறது.
இந்தியாவையே இரண்டாகப் பிளக்கும் அளவுக்குப் பிரம்மாண்டமான புதர்வேலியை அறிய நேர்வதிலிருந்து ராய் மாக்ஸமின் தேடல் தொடங்குகிறது. சீனப் பெருஞ்சுவருக்கு இணையாக வர்ணிக்கப்படும் இந்த வேலி குறித்துப் போதிய தகவல்கள் கிடைக்கவில்லை என்பதும், இந்தியப் பயணத்தின்போது அது யாருடைய நினைவிலும் இல்லை, நேரில் தடயங்களும் இல்லை என்பதும் அவருடைய தேடலுக்கு உரமூட்டுகின்றன. இதில் இருக்கக்கூடிய மர்மத்தன்மை அவருடைய கதையாடலில் சிறப்பாக வெளிப்படுகிறது. அதனால்தான், வேலியைத் தேடி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லும் ராய் மாக்ஸமின் பயணம் ஒரு பெரும் சாகசத்தை அதனுள்ளே கொண்டிருக்கிறது.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, நம் அன்றாடத்தோடு தொடர்புடைய உப்புக்குக் காலனியர்கள் விதித்த வரியின் விரிவான, நுணுக்கமான வரலாற்றுத் தகவல்களை சுவாரஸ்யமாக அடுக்கிக்கொண்டே போகிறார். உப்பின் வழியான இந்த வரலாறு என்பது தன்னகத்தே வேறுபட்ட பல வரலாறுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. அதனால்தான், பல அடுக்குகளைக் கொண்ட இந்த வரலாற்றுப் பின்னலானது ராய் மாக்ஸமின் சாகசப் பயணம்போல வாசகர்களுக்கும் சாகச அனுபவமாகிறது. இந்த சாகசத் தேடலின் ஊடாக ராய் தனது அழுத்தமான விமர்சனங்களையும் முன்வைக்கிறார். இவ்வளவு நீண்ட உப்புவேலியை ஆங்கிலேய மடமையின் ஆதாரமாக முதலில் நினைக்கும் அவர், தேடலின் முடிவில் அதை ஆங்கிலேய அடக்குமுறையின் அசுரமுகமாகக் கண்டடைகிறார்.
இந்த அசுரமுகத்தின் அடுத்த கட்டத் தேடலே தேயிலையின் வரலாற்றை அறிந்துகொள்ளும் அவருடைய பயணம். தேயிலை ஒரு ஆடம்பர பானமாக சீனாவிலிருந்து ஐரோப்பாவுக்கு வந்த கதை, காலனிய காலத்துத் தேயிலை வாணிபம், அதற்காகக் கொடுக்கப்பட்ட உயிர்ப்பலிகள் இதோடு, தேயிலை வளர்ப்பு முறையும் தேநீர் குணங்களும் என அரிதான தகவல்களோடு எழுதப்பட்ட புத்தகம் ‘தே: ஒரு இலையின் வரலாறு’. ஆப்பிரிக்கத் தேயிலைத் தோட்டத்தில் ராய் மாக்ஸம் வேலைபார்த்த பின்னணியிலிருந்து தேயிலையின் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை அலசியது என்பது அவருடைய ஆரம்ப காலத் தொழில் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதாகிறது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவை ஐரோப்பிய நாடுகள் ஆக்கிரமித்த வரலாற்றைத் தேடியது என்பது அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையும் கடந்த காலத்தின் நீட்சியாகத் தொடர்வதன் பின்னணியில் நடப்பதாகிறது. அந்த வகையில், ‘இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு’ புத்தகம் அவருடைய வாழ்க்கையையே அர்த்தமுள்ளதாக்கும் தேடல் எனலாம். இந்தப் புத்தகத்தில், இந்தியாவில் ஐரோப்பிய நாடுகளின் வாணிப ஆக்கிரமிப்புகளை மட்டுமே விவரிக்கிறார். வாணிபம் எப்படி ஒரு பெரும் அதிகாரமாக உருமாறுகிறது என்ற இடத்தில் புத்தகம் நிறைவடைகிறது. உப்பைப் போல, தேயிலையைப் போல இந்த நீண்ட வரலாற்றைப் பேசுவதற்கும் அவர் வாணிபம் என்ற புள்ளியை மட்டும் எடுத்துக்கொள்கிறார். அதனால்தான், மூன்று புத்தகங்களுமே அடர்த்திகூடியவையாக இருக்கின்றன. மேலும், மூன்று புத்தகங்களுமே தகவல்களால் நிரம்பியவை. ராய் மாக்ஸம் ஒரு நாவலாசிரியராகவும் இருப்பதால் தகவல்களை எழுதும்போதும் விருவிருப்பான கதையாடலை அவரால் கைக்கொள்ள முடிகிறது. பிரம்மாண்டமான ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் பிரமிப்பை அவருடைய விவரிப்புகள் உருவாக்குகின்றன.
காலனிய வரலாற்றைப் பேசுவதும், ஒரு சமூகம் தன்னுடைய கடந்த கால வரலாற்றுப் பெருமிதங்களைப் பேசுவதும் உலகம் முழுவதும் இப்போது ஒரு வழக்கமாகவே இருந்துவருகிறது. ஆனால், அந்த இடத்தில் ராய் மாக்ஸமை நாம் பொருத்திவிட முடியாது. காலனியப்பட்டவர்களே காலனிய ஆட்சியைப் பெருமைமிக்கதாகப் பார்ப்பதற்கான நியாயங்களை வரலாற்றிலிருந்து எடுத்துக்கொள்ளும்போது இவரோ அதற்கு எதிர்த் திசையில் சென்று கடந்த காலம் ஏற்படுத்திய வடுக்களைப் பேச முற்படுகிறார். அதுவும் அவருடைய மூதாதையர்கள் ஏற்படுத்திய வடுக்கள். அந்த வகையில், வரலாற்றைப் பார்ப்பதற்கு அவருக்கு விசேஷமான கண்கள் வாய்த்துவிடுகின்றன.
உண்மையில், இந்தியாவைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகங்களெல்லாம் ஐரோப்பியர்களுக்காக எழுதப்பட்ட தொனியையும் கொண்டிருக்கின்றன. அவர்களோடு உள் உரையாடலை நிகழ்த்துவதற்கான நிதானமும் அவருக்கு வாய்த்திருக்கிறது. கூடவே, அவருடைய வாழ்க்கை எழுப்பிய கேள்விகளுக்கான விடை தேடலாகவும் இந்தப் புத்தகங்கள் அமைந்திருக்கின்றன. அதனாலேயே, தகவல்களெல்லாம் உணர்வுபூர்வமாக வெளிப்படுகின்றன. மொத்தத்தில், காலனிய ஆக்கிரமிப்புக்கு ராய் மாக்ஸம் ஒரு சாட்சியம்போல தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார் எனலாம்!
- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT