முரண்களில் சிக்கிக்கொள்ளும் குடும்பம்

முரண்களில் சிக்கிக்கொள்ளும் குடும்பம்
Updated on
2 min read

கேரளத்தைச் சார்ந்த எழுத்தாளர் அனீஸ் சலீம் ஆங்கிலத்தில் எழுதிய ‘பார்வையற்றவளின் சந்ததிகள்’ நாவலுக்கு 2018-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டதன் வழியாகப் பரவலான கவனத்துக்கு வந்தது. அப்படி விருது வழங்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் இந்த நாவலுக்கு உரிய இடம் கிடைத்திருக்கும். இந்த முக்கியமான நாவலை, விலாசினியின் சிரத்தையான மொழிபெயர்ப்பில் இப்போது தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறது ‘எதிர்’ பதிப்பகம். உள்ளடக்கரீதியாகவும் எடுத்துரைக்கும் விதத்திலும் மொழிபெயர்ப்பு அம்சத்திலும் இந்த நாவலின் வரவு தமிழுக்கு மிக முக்கியமானது.

பெரிய தோட்டத்துக்கு இடையில் பங்களாவில் வாழ்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம், நாளடைவில் எப்படிச் சிதறுகிறது என்பதுதான் நாவலின் மையக் கதை. மரபான இஸ்லாமியப் பின்னணியின் திரைச்சீலையைக் கிழித்துக்கொண்டு பதின்மூன்று வயதிலேயே நாத்திகத்தைத் தழுவிய ஹம்சாவின் நினைவுகளிலிருந்து கதை சொல்லப்படுகிறது. பார்வையற்ற தாய்க்குப் பிறந்த அஸ்மாவை ஹம்சாவுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த இரு குடும்பங்களின் கதையாக விரிகிறது நாவல்.

அவ்வப்போது வியாபார நிமித்தமாக மலபார் செல்லும் ஹம்சா, அங்கும் ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவன் இறப்புக்குப் பிறகுதான் மலபார் குடும்பம் குறித்த தகவல் தெரியவருகிறது. பார்வையற்ற தாய் கொடுத்தனுப்பிய ஒவ்வொரு பொருளையும் விற்றுத்தான் அஸ்மா அந்தக் குடும்பத்தைப் பசியிலிருந்து பாதுகாக்கிறாள். அடுத்த தலைமுறையைச் சார்ந்த அக்மல், இஸ்லாம் மதத்தில் தீவிரம் காட்டுகிறான். அமர் அவனுக்கு நேரெதிராக நாத்திகம் பேசுகிறான். அந்த இருவரையும் அந்தத் தாய் ஒன்றுபோல அரவணைக்கிறாள். ஹம்சா அந்தக் குடும்பத்துக்குள் இருந்தாலும் வெளி நபரைப் போன்றே நடந்துகொள்கிறான். அவன் யாருடனும் அவ்வளவாகப் பேசுவதில்லை. இயல்பாகப் பேசுவதன் மூலம் தன் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்ற சிந்தனையின் வழிவந்தவனாக ஹம்சா இருக்கிறான்.

இந்தப் பின்னணியில், இஸ்லாமியக் குடும்ப ஆண்களின் பிரதிநிதியாக ஹம்சாவை உருவாக்கியிருக்கிறார் அனீஸ். தன் அம்மாவின் உயிரை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும் அஸ்மா (வண்ணநிலவனின் எஸ்தர் சித்தியை நினைவுபடுத்துகிறாள்), அந்தக் குடும்பத்தைக் காப்பதற்காகத் தனி நபராகப் போராடுகிறாள்; இவள் பெண்களின் பிரதிநிதியாக வலம்வருகிறாள். கதைசொல்லி அமர், மனிதனுக்குள்ள அத்தனை இழிவுகளையும் உள்ளடக்கியவனாக இருக்கிறான். ஹம்சா, அஸ்மா, ஜசிரா, அக்மல், கரீம், ஜாவி அனைவருமே வாழ்வதற்கான போராட்டத்தில் அடுத்தவர்களைப் பற்றி சிந்திக்காதவர்கள். அவரவர்களுக்கு அவரவர் நியாயம் சரியெனப் படுகிறது. அம்மாவைக் கொன்றதற்குக்கூட அஸ்மாவிடம் ஒரு நியாயம் இருக்கிறது. இந்த நியாயங்கள் முரண்களின் வழியே செயல்படுகின்றன. மரபு, நவீனம் என்று இருவேறு முரண்களை உருவாக்கிக்கொண்டே கனமான உரையாடலை ஒவ்வொரு சூழலிலும் தொடங்குகிறார் அனீஸ். 1970 முதல் 1995 வரையான காலகட்டத்தில் கதை முன்னும் பின்னுமாக நிகழ்கிறது. பாபர் மசூதி இடிப்பும் ராஜீவ் காந்தி கொலையும் இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் நடந்திருக்கின்றன. இவை பற்றிய விவாதங்களும் இயல்பாக நடக்கின்றன. மொத்தத்தில், சிறப்பான வாசிப்பனுபவம்.

பெரும் பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தின் துயரத்தைக் கூர்மையாக எழுதியிருக்கும் அனீஸ் சலீமின் மொழி உருவாக்கியிருக்கும் வாழ்க்கைச் சித்திரம் உண்மைக்கு அவ்வளவு நெருக்கமாக உணர வைக்கிறது. இன்னொரு புறம், கதாபாத்திரங்களின் உரையாடலினூடாக வெளிப்படும் தீவிரமான எள்ளலோ பிரதிக்கு வேறொரு முகத்தைத் தருகிறது. அனீஸின் பிற படைப்புகளும் தமிழுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த நாவல் ஏற்படுத்துகிறது!

- சுப்பிரமணி இரமேஷ், ‘தொடக்க காலத் தமிழ் நாவல்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: ramesh5480@gmail.com

***********************

பார்வையற்றவளின் சந்ததிகள்

அனீஸ் சலீம்

தமிழில்: விலாசினி

எதிர் வெளியீடு

நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002.

விலை: ரூ.350

தொடர்புக்கு: 99425 11302

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in