Last Updated : 20 Mar, 2021 03:14 AM

 

Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

தொலைத்துவிட்ட கனவுகள்தான் என்னை எழுதத் தூண்டின!- ஷக்தி பேட்டி

சாகித்ய அகாடமி வழங்கும் யுவபுரஸ்கார்-2020-க்கான விருதானது கவிஞர் ஷக்தியின் ‘மரநாய்’ கவிதைத் தொகுப்புக்காக வழங்கப்பட்டிருக்கிறது. ‘அபோர்ஷனில் நழுவிய காரிகை’ கவிதைத் தொகுப்பும், ‘கொண்டல்’ நாவலும் வெளிவந்திருக்கின்றன. விருது அறிவிக்கப்பட்ட தருணத்தையொட்டி அவருடன் உரையாடியதிலிருந்து...

உங்கள் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

பிறந்தது வளர்ந்தது யாவும் தஞ்சை திருத்துறைப்பூண்டியில்தான். தாத்தாவுக்கு உப்பளங்களில் உப்பு காய்ச்சும் நிலங்கள் இருந்தன. அப்பா பிறந்த காலகட்டத்தில் அவர் சமவெளிப் பகுதிக்கு இடம்பெயர்ந்தார். வறுமை காரணமாக அப்பா அவரது இளம் பிராயத்திலேயே ஓட்டுநர் தொழிலுக்கு மாறிய பின்னர் எனது இடப்பெயர்வும் அவ்வப்போது நடக்கத் தொடங்கியது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ மேல் படிப்பு முடித்த பிறகும் நிலையான வேலைவாய்ப்புகளுக்கு சமரசம் செய்துகொள்ளாத காரணத்தால் இடப்பெயர்வு இன்னும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நான் எழுதத் தொடங்கிய காலத்தில் பெரும் உதவியாக இருந்தது அம்மா சிறு வயதில் அறிமுகப்படுத்திய வாசிப்புதான். என் பிராயத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் எதிர்கொண்ட வாழ்க்கைப் போராட்டங்களும், என்னைப் பக்குவப்படுத்திய வாசிப்புகளும் கவிஞனாக என்னை மாற்றியிருக்கின்றன எனலாம்.

யுவபுரஸ்கார் விருது பெற்ற உங்கள் ‘மரநாய்’ தொகுப்பானது கீழத் தஞ்சை வாழ்வை, முக்கியமாக விவசாயம் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களையெல்லாம் பேசுகிறதல்லவா?

திருவாரூர், நாகை மாவட்டத்தில் எண்ணெய் வளங்களுக்காக முப்போகம் நடந்த விவசாயமானது இரண்டாக மாறி பின்பு ஒரு போகமாக ஆனது. என் சிறு வயதில்கூட மூன்று போகம் விளைந்ததைப் பார்த்ததுண்டு. இப்போது ஒரு போகம் என்பதுகூட உத்தரவாதமற்றதாக ஆகிப்போனது. இதுவும் எண்ணெய் அரசியலும் ஒன்றாக நெருக்கியதைப் பார்க்கத் தொடங்கினேன். இங்கு நிறைந்திருக்கும் சாதி அரசியல், எண்ணெய் அரசியல், விவசாயப் பிரச்சினைகள், தொலையக் கொடுத்த கனவுகள் இவை யாவும் நான் எழுதுவதற்கான காரணிகளாக இருந்தன.

கிராமத்து வாழ்வைச் சொல்ல நவீனமான மொழி வெளிப்பாட்டைத் தேர்ந்துகொண்டது ஏன்?

திட்டமிட்டு அவ்வாறு கட்டமைக்கவில்லை. நெல் வாசமும், பாறை வண்டிச் சுவடுகளும், பசும் நாற்று மீது கடந்துவரும் காற்றின் வாசமும், நீர் நிரம்பிப் பாயும் ஆறுகளின் மண் வாசமும், கெண்டைகள் கடந்து ஓடும் சேற்றின் வாசமும், முதுகில் வியர்வையும் சேருமாக நாற்றுகளைச் சுமந்துபோகும் கால்தடங்களும் எனக்குள் காட்சிகளாக விரியும்போது நான் எழுதுவதற்கு உறுதுணையாகவும் அவசியமாகவும் கவிதைகளே இருந்தன. கைவந்த ஒரு மொழியில் எழுதிப் பார்த்தேன். அவ்வளவுதான்.

உங்களுடைய இரண்டாவது தொகுப்பான ‘அபோர்ஷனில் நழுவிய காரிகை’க்கு முற்றிலும் வேறொரு களத்தை, அதாவது மருத்துவம் சார்ந்த களத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது ஏன்?

அடிப்படையில், இன்னமும் முழுமையடையாத குணாதிசயங்களைக் கொண்ட மனிதனாகவே என்னை உணர்கிறேன். சிறு தவறு என்றாலும் என்னுள் பதற்றங்கள் கூடிவிடும். புற்றுநோய் கதிரியக்க மருத்துவத் துறையில் இதுவரையிலான எட்டு ஆண்டுகளில் ஆறு மருத்துவமனைகளைக் கடந்துவந்திருந்தேன். அரைகுறையான விஷயங்களைச் செய்து பார்க்கக்கூட எனக்குப் பெரும் அச்சம் வரும். வெறுமையாக்கப்பட்ட வெளியில் நிற்பவனாகவே என்னை எப்போதும் உணர்கிறேன். ‘அபோர்ஷனில் நழுவிய காரிகை’யை அந்த வெளியில் நின்றுதான் எழுதிப் பார்த்தேன். அது ஆழ்ந்த புரிதல் உள்ள வலிகளின் தொகுப்பா அல்லது இயலாதவர்களின் வலியா என்று யோசித்தபோது இரண்டாவதுதான் சரியாகப் பட்டது. என் ஆற்றாமையை இந்த எழுத்துகள் தத்தெடுத்துக்கொண்டு என்னை ஆசுவாசப்படுத்தின.

நாவலிலும் தடம் பதித்திருக்கிறீர்கள். ‘கொண்டல்’ நாவல் எழுதுவதற்கான தாக்கம் எங்கே பெற்றீர்கள்?

அரசுகள் பல வழிகளில் மக்களிடமிருந்து அபகரித்துக்கொள்ள தங்கள் அதிகாரத்தை அவர்கள் மீது திணித்தவண்ணம் இருப்பதை உங்களால் எப்படிக் கடக்க முடியும்? ஒரு பெரும் புயலானது கரையைக் கடந்த காலத்தில் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிய இளைஞர்கள் மீது அரசு நிகழ்த்திய அதிகார வன்முறையில் பாதிக்கப்பட்ட ஒருவனின் வாழ்க்கைதான் ‘கொண்டல்’. இது தஞ்சை மாவட்டங்களில் நிகழும் சாதிய அடக்குமுறைக்கான சாட்சியமும்கூட.

இரண்டு கவிதைத் தொகுப்புகளும் இரண்டு பாடுபொருளைப் பற்றிப் பேசுகின்றன. அடுத்தது என்ன மாதிரியான களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?

மீனவர்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்யும் விதமாக ‘மீன்பிடித் தடைக்காலம்’ கவிதைத் தொகுப்பு முடிந்திருக்கிறது. ‘மரநாய்’ வந்த காலத்தில் தொகுத்த ‘மணல் கொழி’ கவிதைத் தொகுப்பையும் முடித்து வைத்திருக்கிறேன். ஒரு திருநம்பியின் வாழ்க்கை அலைக்கழிப்புகளை ‘ஹிஜ்ரா’ என்ற பெயரில் நாவலாகப் பதிவுசெய்துகொண்டிருக்கிறேன்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

------------------------

மரநாய்

ஷக்தி

சால்ட் வெளியீடு

தொடர்புக்கு: 90940 05600

விலை: ரூ.80

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x