

ருக்மணி என்கிற பெண்ணைப் பற்றி ஓர் அரச மரம் பேசியதாக புனையப்பட்ட வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ என்கிற தமிழின் முதல் சிறுகதை தொடங்கி இன்று வரை பல படைப்பாளிகள் தமிழ்ச் சிறுகதைக்கு மெருகேற்றியிருக்கிறார்கள். அந்த வரிசையில் தனக்கே உரிய மொழி அலங்காரத்துடன் சிறுகதைகளைப் படைத்திருக்கிறார் வைரமுத்து. ஒவ்வொன்றும் வெவ்வேறான கதைக் களன்களைக் கொண்டவை.
‘மனிதர்கள் மீண்டும் குரங்குகள் ஆகிறார்கள்’ என்று ஒரு கதை.
“டெல்லி நகரம் முழுதும் இருக்கிற குரங்குகளை எல்லாம் டெல்லி எல்லையை விட்டு வெளியேற்றிவிடுங்கள்’’ என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கிறது.
குரங்குகளை ஏன் அப்புறப்படுத்தச் சொன்னார் நீதிபதி என்பதற்குப் பின்னால் ஒரு சுயநலப் படுதா விரிகிறது. குரங்குகளை அப்புறப்படுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்த நீதி பதியினுடைய பேத்தியின் டிஃபன் பாக்ஸை, பள்ளிப் பேருந்து ஏறும் தருணத்தில் ஒரு குரங்குக் கூட்டம் அபகரித்துவிட்டது என்பதுதான் அதற்கான காரணம்.
பதினாறாயிரம் குரங்குகளை கூண்டில் அடைத்து எடுத்துச் சென்று ஹரியானாவில் உள்ள ‘அசோலா’ சரணாலயத்தில் அடைக்கின்றனர். அந்தக் குரங்குகளைப் பராமரிக்க ஆண்டுக்கு ரூ.20 கோடி பணத்தை டெல்லி அரசு ஹரியானா அரசுக்கு வழங்குகிறது.
அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் குரங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் வாலாட்டுகிறார்கள்.
ஆண்டுகள் வேகவேகமாக நகர்கின்றன. ஓய்வுக்குப் பிறகு நியூசிலாந்துக்குச் சென்ற அந்த நீதிபதி, சில ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இந்தியா திரும்புகின்றார்.
குரங்குகள் இல்லாத தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்கிற நீதிபதியின் பேரன், பேத்திகள் ‘அசோலா’ சரணாலயத்துக்கு சென்று குரங்குகளைப் பார்க்கச் செல்கின்றனர். கூடவே, ஓய்வுபெற்ற நீதிபதியும் செல்கிறார்.
அங்கே அந்தச் சரணாலயம் - நீரின்றி, மரமின்றி, வத்தலும் தொத்தலுமாய் சில நூறு குரங்குகள்தான் இருக்கின்றன.
“இவைகளா
குரங்குகள்?’’ என்று கேட்கின்றனர் பேரனும் பேத்திகளும்.
உயிரை வாலில் பிடித்துக்கொண்டு மிச்சமிருந்த குரங்குகள் எல்லாம் அந்த நீதிபதியை உற்று நோக்குகின்றன.
அந்தப் பார்வை எப்படி இருந்தனவாம்?
‘‘நாங்கள் உங்கள் பேத்தியின் ஒரே ஒரு டிஃபன் பாக்ஸைத்தான் திருடினோம். 10 வருடங்களாய் உங்கள் மனிதர்கள் எங்கள் மொத்த உணவையும் திருடித் தின்றுவிட்டார்களே. மனிதர்களைக் கூண்டிலேற்ற எங்களுக்கு நீதிமன்றம் உண்டா மை லார்ட்!’’
‘குதிரைப் பந்தயம் போலத் தொடக்கமும் முடிவும் சுவை கொண்டவையாக இருக்க வேண்டும்’ என்று என்று சொன்னார் செட்ஜ்விக் என்கிற சிறுகதை ஆய்வாளர்.
தன்னுடைய 40 கதைகளிலும் செட்ஜ்விக் சொன்னதை சாதித்திருக்கிறார் வைரமுத்து.