Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

முடிவின்றி நீளும் ஈழத்தமிழ் அகதிகளின் துயரம்

ஆசிரியர்: வி.சூரியநாராயண் தமிழில்: பெர்னார்ட் சந்திரா வெளியீடு: காலச்சுவடு

நரசய்யா

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராக, தென்கிழக்கு ஆசியா ஆய்வு மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வி.சூரியநாராயண், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அகதிகளைப் பற்றித் தீவிரமாக ஆய்வு செய்தவர். அவருடைய ஆய்வுப் பணிக்காக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பின் பாராட்டுதலைப் பெற்றவர். அவருடைய சிறந்த நூல்களில் ஒன்றான ‘Refugee Dilemma: Sri Lankan refugees in Tamil Nadu’ என்ற ஆங்கில நூலை ‘அகதியின் துயரம்’ என்று தமிழில்பெர்னார்ட் சந்திரா மொழிபெயர்த் திருக்கிறார்.

நான்காவது ஈழப்போர் 2009ல் முடிந்துவிட்டபோதிலும், தமிழ்நாட்டில் தங்கியிருந்த அகதிகளில் மிகச் சிலரே இலங்கை திரும்பினர் என்பதையும் அப்போது அங்கிருந்த அரசியல் நிலைமையின் காரணமாக, பல ஈழத் தமிழர்கள் இலங்கைக்குச் செல்ல விரும்பவில்லை என்பதையும் தமிழகத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடிந்ததையும் இந்நூல் விளக்குகிறது.

முதல் இரண்டு அத்தியாயங்கள் அகதிகளின் பிரச்சினைகளையும் சர்வதே நிலைப்பாட்டையும் சாதாரண வாசகர்கள் கூடப் புரிந்துகொள்ளும் விதத்தில் எடுத்துச் சொல்கின்றன. ‘அதிதி தேவோபவ’ என்ற அத்தியாயத்தின் இறுதி வரிகள் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். “1991, மே 21ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள், ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தனர். தமிழ் மக்களின் மேன்மைக்குச் சான்று பகிரும் விதமாக ஒரு இலங்கைத் தமிழ் அகதி கூட துன்புறுத்தப்படவில்லை. சகிப்புத் தன்மைக்கும் நல்லெண் ணத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய அத்தருணம், நேசத்தோடு நினைவில் கொள்ளவேண்டியதாகும்.”

‘துன்பத்திலிருக்கும் தீவு’ என்ற அத்தியாயம் இலங்கையின் புலம் பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. 1971 ஏப்ரல் மாதத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்காவால் வெடித்த ஜே.வி.பி.யின் கிளர்ச்சி அந்நாட்டை உருக்குலைத்ததையும் 1987ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தம் எவ்வாறு சீர்குலைக்கப்பட்டு, இலங்கையின் பிரிவுக்கு காரணமாக அமைந்தது என்பதையும் ஆசிரியர் தெளிவாக்குகிறார்.

மூன்றாவது அத்தியாயத்தில் உள்ள ‘இலங்கை ஒரு ஒட்டுமொத்த பார்வை’, ‘ஒற்றுமை இல்லாத தமிழர்கள்’ என்ற இரண்டு பகுதிகள் மிக முக்கியமானவை. இவை இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. படிப்படியாக மாறிக்கொண்டு வந்த அரசியல் நிலைப்பாட்டை இப்பகுதிகளில் காண முடிகிறது.

‘அகதிகள் தீவு’ என்ற அத்தியாயத்தில் கூறப்படும் விவரங்கள் நமக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றன. “எனது மகன் யாழ்ப்பாணத்தில் இருக்கிறான். மனைவி கொழும்பில், தந்தை வன்னியில், வயது முதிர்ந்த நோயாளி அம்மா தமிழ்நாட்டில், உறவினர்கள் ஃபிராங்க்ஃப்ர்ட்டில், ஒரு சகோதரி பிரான்சில், நானோ அலாஸ்காவில் வழி தவறிப் போன ஒட்டகத்தைப் போல ஆஸ்லோவில் இருக்கிறேன். விதிக் குரங்கினால் சிதறடிக்கப் பட்டபஞ்சுத் தலையணைகளோ எங்கள் குடும்பங்கள்?” என்று ஜெயபாலன் என்பவர் சொல்லியுள்ள பகுதி நம் மனதைப் பிழிகிறது.

மனித உரிமைகள் மீறல் என்ற பகுதி நான்காவது ஈழப்போரின் அழிவுகளைப் பற்றிச் சொல்கிறது. “ஐக்கிய நாடுகள் சபையின் முடிவுப்படி, அப்போரின் இறுதி மாதங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000லிருந்து 70,000 வரை இருக்கலாம் எனவும் இரண்டு தரப்பினரின் அட்டூழியத்தினாலும் ஏறத்தாழ 30 வருடப் போரினாலும் 1,50,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கணக்கிடப்படுகிறது” இந்தப் பகுதி வாசகரின் இரத்தத்தை உறைய வைத்துவிடுகிறது. தேசிய அகதிகள் சட்டத்தின் தேவையைப் பற்றிய அத்தியாயமும் முக்கியமான ஒன்றாகும். அந்த அத்தியாயத்தில் ஆசிரியர் சூரியநாராயண் தீர்மானமான கருத்துகளை முன்வைக்கிறார். எப்போது ஈழத்தழிழ் அகதிகள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்புவார்கள் என்று அவர் எழுப்பும் கேள்வி, நூலைப் படித்து முடித்த பின்னரும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

- நரசய்யா

’கடலோடி’ நூலின் ஆசிரியர்

narasiah267@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x