

கன்னியாகுமரி மாவட்டத்தின் அரசியல் அதிகாரப் பகிர்வில் சாதி மற்றும் சமயங்களின் பரிமாணங்களைக் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார், ஆலஞ்சியைச் சேர்ந்த குரூஸ் டேனியல். பெருந்தொற்றுக் காலத்தில் நூலகங்கள் மூடப்பட்ட நிலையிலும் ஆய்வைத் தொடர்ந்த அவர், அந்த மாவட்டத்தின் அரசியல் வரலாற்றுத் தகவல்களைப் பெறுவதற்காக கொடிக்கால் ஷேக் அப்துல்லாவைச் சந்தித்திருக்கிறார். தெற்கெல்லைப் போராட்ட வீரர், பொதுவுடைமை இயக்கத் தலைவர், சமூக நீதிச் செயல்பாட்டாளர் என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கொடிக்காலுடனான சந்திப்பு, அவரது ஆய்வுப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது. தனது ஆய்வைத் தொடர்வதற்கு முன்பு, கொடிக்காலின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி முடித்துவிட்டார் குரூஸ் டேனியல். ‘என்சிபிஹெச்’ வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. அதே நூலைத் தற்போது தமிழிலும் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார். சமூக நீதிக்கான பெரும் போராட்டத்தின் வாழும் சாட்சியமாக இருக்கும் கொடிக்காலின் வாழ்க்கை உலகம் முழுவதும் உடனடியாகக் கொண்டுசேர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணமே அவரது வாழ்க்கை வரலாறு முதலில் ஆங்கிலத்தில் வெளிவருவதற்குக் காரணம் என்கிறார் குரூஸ் டேனியல்.