Published : 21 Feb 2021 19:16 pm

Updated : 21 Feb 2021 19:37 pm

 

Published : 21 Feb 2021 07:16 PM
Last Updated : 21 Feb 2021 07:37 PM

ஐரோப்பாவை வரலாறு, இலக்கியங்களுடன் சேர்த்துத் தரும் ஒரு பயணநூல்; ச.சுப்பாராவ் எழுதிய சில இடங்கள்... சில புத்தகங்கள்: நூல் மதிப்புரை

europe-travel-experience-by-s-subbarao

ச. சுப்பாராவ், நெதர்லாந்து நாட்டிற்கு எதிர்பாராத பயணத்தை மேற்கொண்டதைப் பற்றி சரளமான தமிழ்நடையில் விவரிக்கும் நூல் இது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு ஐரோப்பாவின் முக்கியமான நகரங்கரளையெல்லாம் அவர் சுற்றிப் பார்த்துள்ளார்.

இந்தமாதிரி புத்தகம் எழுதுபவர்களுக்கு அடிப்படையில் உலக வரலாறுகளும் ஓரளவுக்காவது ஐரோப்பா சார்ந்த புரிதலும் கூடுதலாக தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு இடத்தைப் பற்றி சொல்லத் தொடங்கும்போதே அவ்விடத்தைப் பற்றிய சரித்திர, வாழ்வியல், அரசியல், இலக்கியம், மானுடவியல், புவியியல் சார்ந்த மேலதிக தகவல்களையும் கூறும் நூலாசிரியர் அதை மிகச் சிறப்பாகவே வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு இடத்திற்கு செல்லும்போதும் அவர் தனது நினைவிலிருக்கும் தொடர்புடைய புத்தகங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வதும் இந்நூலின் கூடுதல் சிறப்பு.

நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ரோட்டர்டாமில் நூலாசிரியர் சென்று தங்குகிறார். இன்றுள்ள ரோட்டர்டாம் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஒரு புதிய நகரமாகும். பழைமைவாய்ந்த தேவாலயம் மட்டும் அப்படியே உள்ளது. அக்கால ரோட்டர்டாம் நகரம் தரைமட்டமாக்கப்பட்டபோது இரண்டே மணிநேரத்தில் 86,000 பேர் மரணமடைந்தனர் என்ற இருவரி தகவலே கூட மனதை பிசைகிறது.

தமிழில் எடுக்கப்பட்ட அந்நியன் படத்தின் சுகுமாரி பாடலில் இடம்பெற்ற ரோட்டர்டாம் நகரைப் பற்றித்தான் இந்நூலில் எவ்வளவு தகவல்கள். அப்பாடலில் ரோட்டர்டாம் தெருவில் நடிகர் விக்ரம் பாடியபடி வர ஏதோ நம்ம ஊர்மாதிரி தெருவில் கோலம்போடுவதுபோலவே ரோட்டர்டாம் தெரு ஒன்றில் கோலம்போட்டுக்கொண்டிருக்கும் நாயகி தனது நாயகனை காதலோடு பார்ப்பதும் இருவரும் அந்நகரைச் சேர்ந்த துலிப் மலர்களின் தோட்டத்தில் டூயட் பாடி ஆடுவதும் பற்றியும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். அதாவது புத்தகங்கள் மட்டுமல்ல, வாசகனின் ரசனையோடு எளிதாக இணைவதற்கான பிரபல சினிமாவையும் சேர்த்து பேசும் லாவகமும் நூலுக்கு சுவாரஸ்யத்தை சேர்த்துவிடுகிறது.

ஒரு முக்கியமான தகவல், நெதர்லாந்தில் மருந்துகடைகளே இல்லையாம். குழந்தைக்கு தும்மல் என்றால்கூட தைலம்வாங்கக் கூட ஒரு மருந்துகடைகளும் அவ்வூரில் இல்லை. அப்படியெனில் குழந்தையை மருத்துவமனைக்குத்தான் எடுத்துச் செல்லவேண்டும். சரி அங்கு அருகிலேயே ஏதாவது தனியார் மருத்துவமனை இருக்கிறதா? அதுவுமில்லை, அந்த ஊரில் நம் நகரங்களைப் போல தெருவுக்கு தெரு தனியார் மருத்துவமனைகள் ஏதும் இல்லை, அங்கு அரசு பொது மருத்துவமனை மட்டும்தானாம். அதுவும் அந்த நகரத்தில் எங்கோ ஒரு மூலையில் அரசு பொது மருத்துவமனை இருக்கிறது. சரி அங்கு குழந்தையை எடுத்துச்சென்றால் மருத்துவர்கள் குழந்தையைப் பார்த்தவுடன் சிகிச்சையை தொடங்கிவிடுவார்களா என்ன? அதுவும் இல்லை, அவர்கள் சொல்லும் எளிதான பதில், ''தைலமோ மாத்திரைகளோ குழந்தைகளுக்குத் தந்து பழக்கப்படுத்தக்கூடாது, குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள், போய் சுடுநீர் வைத்துக் கொடுங்கள் சரியாகிவிடும்'' என்பதுதான்.

ரோட்டர்டாம் ஒரு சைக்கிள் நகரம் என்பதைப் பற்றி ஆசிரியரின் வார்த்தைகளிலேயே தெரிந்துகொள்ளலாம், ''அந்த ஊரின் முக்கிய வாகனம் சைக்கிள், விமான நிலையத்திலிருந்து காரில் ரோட்டர்டாம் செல்லும்போதே ஆச்சரியங்கள் ஆரம்பித்துவிட்டன. வாகனங்கள் அனைத்துமே பத்தடி இடைவெளி விட்டே நிற்கின்றன. சிக்னல் மஞ்சள் விழுந்ததும் யாரும் சீறிப் பாய்வதில்லை. பொதுவாகன வாகனங்களே சாலையில் குறைவு. சைக்கிள்கள் செல்ல தனிப் பாதை. உண்மையில் நெதர்லாந்தில் சைக்கிள்தான் முக்கியமான வாகனம். ஒரு குழந்தை, இரு குழந்தைகள், ஒரு நாய், இரு நாய்கள், சாமான்கள் வைத்துச் செல்வது போல விதவிதமான கேரியர்கள் வைத்த விதவிதமான சைக்கிள்கள், ஊரே சைக்கிள் சரிதாக்களால் நிறைந்திருப்பதால் அனைவருமே மிக திடகாத்திரமானவர்களாக இருக்கிறார்கள்'' என்கிறார்.

ஐரோப்பாவின் புகழ்மிக்க நகரங்களான பாரிஸ், ரோம், பிஸா, வெனிஸ், வாடிகன், தி ஹேக், பிரஸ்ஸல்ஸ் போன்ற பழைமைவாய்ந்த அழகிய நகரங்களின் சிறப்புகள் யாவும் சுப்பாராவ்வின் கைவண்ணத்தில் நம் கண்முன் விரிகின்றன.

ஹேக் நகரத்திற்கு செல்வதற்கு முன்பாக அந்நகரத்தில் வாழ்ந்த ஓவியர் வான்கோ வாழ்க்கையைப் பற்றி இர்வின் ஸ்டோன் எழுதிய ய லஸ்ட் பார் லைஃப் புத்தகத்தை கிண்டிலில் வேகமாக வாசித்துவிட்டுத்தான் அங்கு செல்கிறார் சுப்பாராவ். அதற்குமுன்னதாக தான் ஏற்கெனவே இர்வின் ஸ்டோன் எழுதியிருந்த பல்வேறு வாழ்க்கை வரலாற்றுநூல்களை படித்ததையெல்லாம் போகிறபோக்கில் சொல்லிவிடுகிறார். வரலாற்றுப் புனைவுகளை எழுதுவதில் இர்வின் ஸ்டோன்தான் முன்னோடி. டார்வின், மைக்கேல் ஏஞ்சலோ பற்றியெல்லாம் இர்வின் எழுதியவை மகத்தான காவியங்கள் என்கிறார் சுப்பாராவ். ஹேக் பற்றி நேரடி விவரணைகள் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே நம்மை அக்காலத்தில் வாழ்ந்த ஓவியர் வான்கோவோடும் சம்பந்தப்படுத்திவிடுகிறார். அவர் வாழ்ந்த 138 ஷென்விக் தெருவுக்கு அழைத்துச்செல்லும் நூலாசிரியர் மோகமுள் யமுனாவின் வீடுதேடி கும்பகோணத்தில் அலைந்ததையும் பாபுவின் வீடுதேடி திருவல்லிக்கேணி வெங்கடரங்கம்பிள்ளை தெருவில் அலைந்ததையும் சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர். புனைவில் எழுதப்பட்ட வீடுகள் எப்படி கண்டுபிடிக்க முடியும்?

பாரிஸ் நகரத்திற்கு செல்வதற்கு முன் அந்நகரை பல புத்தகங்களோடு தொடர்புபடுத்துகிறார். இர்விங் வாலஸ் எழுதிய தி பிளாட் நாவலை சில்வியா, டேவிட், ஆர்மி மற்றும் பாரீஸ் நகரத்திற்கு சமர்ப்பணம் என்று எழுதியிருப்பாராம். அதுவே பாரீஸ் நகரைக் காணும் ஆவலைக் காண தனி ஈர்ப்பை ஏற்படுத்தியதாக சுப்பாராவ் சொல்கிறார். ஒரு இடத்தில் ''தமிழ்வாணன் பாணியில் சொல்வதென்றால் ஆரவாரமான நகரம்'' என்கிறார். இன்னொரு இடத்தில் தி டே ஆஃப் தி ஜகால் (நாவல்) காலத்தில் பயணிப்பதுபோன்ற உணர்வு என்கிறார்.

பாரீஸ் நகரைப் பற்றி சொல்லும்போது ஹிட்லரின் முக்கியமான தளபதியான கோல்டிட்ஸ் நினைவுக்கு வருவதை சுப்பாராவால் தவிர்க்கமுடியவில்லை. காரணம் கோல்டிட்ஸ்தான் இன்று உலகமே வியந்து ரசிக்கும் பாரிஸை இரண்டாம்உலகப்போரில் அழிக்காமல் காப்பாற்றி கொடுத்தவர். இத்தனைக்கும் ஹிட்லர் அவருக்கு அடிக்கடி போன் செய்து என்ன பாரீஸை எரிகிறதா? என்று கேட்பாராம். கோல்டிட்டிஸும் சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழித்திருக்கிறார்.

ஹிட்லரிடம் சில மனசாட்சி உள்ள அதிகாரிகளும் இருந்ததால் பாரீஸ் தப்பித்தது. இதனால் முடிவாக என்ன நடந்தது என்றால் கோல்டிட்டிஸ் பாரிஸ் விடுதலைப்படையினருடன் சிறைவைக்கப்பட்டதுதான்.

லூவர் அருங்காட்சியகத்தைப் பற்றி சொல்லும்போது இதற்காகவே டான் பிரவுனின் டாவின்சி கோட்டை மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன் என்று கூறும் சுப்பாராவ் சேவிங் மோனாலிசா, தி பேடடில் டு புரொடெக் தி லூவர் அண்ட் இட்ஸ் டிரெஷர்ஸ் டயூரிங் வேல்ர்ட் வார் 2, அலெக்சாண்டர் டூமாஸ், விக்டர் ஹியூகோ, ஷேக்ஸ்பியர அண்ட் கம்பெனி, த்ரீ ஸ்டோரீஸ் அன்ட் டென் நாவல்ஸ், தி ஜங்கிள், ஃபிரேம் தி மவுண்டைன், ஏஞ்சல்ஸ் அன்ட் டெமன்ஸ், அகனி அண்ட் எகடஸி, ஜேம்ஸ் மக்லாச்செலன் எழுதிய கலிலியோ தி பஸ்ட் பிஸிசிஸ்ட், டான் பிரவுனின் இன்ஃபர்னோ நாவல் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களையும் உலக சினிமாக்களையும் தொடர்பான இடங்களில் அதன் முக்கியத்துவங்களோடு இணைவதை சுப்பாராவ் விறுவிறுப்பாக சொல்லிச் செல்கிறார்.

மொத்தத்தில் சில இடங்கள்... சில புத்தகங்கள் புத்தகம் ஐரோப்பா அல்லது உலக இலக்கியங்கள், சினிமாக்கள் பற்றி அள்ள அள்ள குறையாத தகவல்களை வாசகர்களுக்கு அள்ளி வழங்கும் மினி தகவல் களஞ்சியமாக அமைந்துள்ளது.

அத்தனை அத்தியாயங்களுக்கும் தொடர்புடைய அற்புதமான படங்களையும் நூலுக்கு அணிசேர்க்கும்விதமாக பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தார் அழகாக பதிப்பித்து வெளியிட்டுள்ளனர்.


சில இடங்கள்... சில புத்தகங்கள்...
நூலாசிரியர்: ச.சுப்பாராவ்

பக்.138, விலை ரூ.140
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை 600 018


தவறவிடாதீர்!ஐரோப்பாச.சுப்பாராவ்பாரதி புத்தகாலயம்பாரீஸ்ரோட்டர்டாம்நெதர்லாந்து

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x