Published : 07 Nov 2015 12:58 PM
Last Updated : 07 Nov 2015 12:58 PM

எப்போதும் பெரியாரும் பாரதிதாசனும்

வழக்கமாய் அப்பாக்கள் மட்டும் செய்தித்தாள் படிக்கிற குடும்பங்களி லிருந்து மாறுபட்டு, அம்மாவும் செய்தித்தாள் படிக்கிற குடும்பம் என்னுடையது. அம்மா, அப்பாவின் வழியேதான் கதை கேட்பதும், புத்தகம் வாசிப்பதும் எனக்கு வாய்க்கப்பெற்றன.

அணில், முயல், சிறுவர் காமிக்ஸ் நூல்களை விரும்பிப் படிப்பேன். முத்து காமிக்ஸ், மாயாவி கதைகள், ராணிமுத்து இவற்றைக் கையிலெடுத் தால், ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பேன். 11-ம் வகுப்பு படிக்கும்போதுதான் மக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைப் படித்தேன். பிறகு, ஜெயகாந்தன், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ், பாலகுமாரனின் எழுத்துகளைப் படித்தேன். ஜெயகாந்தனின் சிறுகதைகளும் அவரது கதாமாந்தர்களும் வாசிக்கும்போதே நம்மோடு கலந்துவிடுவார்கள்.

பெரியாரின் எழுத்துகள் என்னை வெகுவாய் ஈர்த்தன. பெரியாரின் நூலில் பத்து வரி படித்தால், ஒரு கூட்டத்தில் பேசுவதற்கான விஷயங்கள் அதில் கிடைத்துவிடும் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். 1930-களில் திருமண விழாவொன்றில் பேசிய பெரியாரின் உரையைக் குறிப்பெடுத்து அண்ணா எழுதிய ‘இனிவரும் உலகம்’ எனும் சிறுநூல் நான் மீண்டும் மீண்டும் பலமுறை எடுத்துப் படிக்கிற மிகச் சிறந்த நூலாகும். பாரதிதாசனின் கவிதைகளையும் அடிக்கடி படிப்பேன்.தி.ஜானகிராமன், லா.ச.ரா.வின் படைப்புகளையும் படித்திருக்கிறேன்.

நூல்களில் எதையும் ஒதுக்குவதில்லை. கருத்துரீதியாக எதிர்நிலையில் இருப்பவர்களின் நூல்களையும் படிப்பேன். புரியாத தன்மையிலான தீவிர அறிவியல் நூல்கள் தவிர, அனைத்தும் படிக்கிற பழக்கம் எனக்கு உண்டு.

பெண்கள் எழுதும் கதைகளை விடாமல் வாசித்துவிடுவேன். உமாமகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை’ நாவல் என்னை மிகவும் ஈர்த்தது.

சமீபத்தில் படித்ததில், நலங்கிள்ளி எழுதிய ‘ஆங்கில மாயை’ எனும் நூல் குறிப்பிடத்தக்கத்து. ஆங்கிலம் என்பது அறிவு மொழியா, சட்ட மொழியா என்கிற கேள்விகளை எழுப்பி, அதற்குச் சரியான விடையையும் தருகிறார் நலங்கிள்ளி. பிரேம்நாத் பசாஸ் எழுதி கே.சுப்ரமணியன் மொழிபெயர்த்திருக்கும் ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ நூலையும் படித்தேன். என்ன நோக்கத்துக்காக பகவத் கீதை எழுதப்பட்டது, மீண்டும் மீண்டும் பகவத் கீதையை முன்னிறுத்துவதன் பின்னணியிலுள்ள அரசியல் என்ன என்பதையெல்லாம் துருவி ஆராயும் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது.

- கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x