நூல்நோக்கு: நினைவுகளில் ஊடாடும் நிலம்

நூல்நோக்கு: நினைவுகளில் ஊடாடும் நிலம்
Updated on
1 min read

இது கா.சிவாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. கிராமத்திலிருந்து இளம் வயதிலேயே நகரத்துக்குக் குடிபெயர்ந்த ஒருவர், தன் பதின்பருவ நினைவுகளுடன் உரையாடுவதற்கான மொழி சாத்தியப்படும் சூழலில் எழுதப்பட்ட கதைகளாக இவற்றைக் கூறலாம். சொந்த நிலத்திலும் புலம்பெயர்ந்த நிலத்திலும் தன் இருப்பு என்னவாக இருந்திருக்கிறது என்பதைப் பின்னோக்கிப் பார்த்திருக்கும் புனைவுகளாகவும் இதைக் கருத வாய்ப்புள்ளது. தன் சொந்த உறவுகளால் ஏமாற்றப்படுகிறான் வேலன்; நண்பனால் ஏமாற்றப்படுகிறான் பிரபா; வாடிக்கையாளரால் ஏமாற்றப்படுகிறான் சங்கர். ஏமாற்றுவதும் ஏமாறுவதும் வாழ்க்கையின் ஒரு பகுதி. சங்கர் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதைத் தெரிந்தேதான் அதை ஏற்றுக்கொள்கிறான். பிரபாவுக்கு நண்பனின் துரோகம் அதிர்ச்சியைத் தருகிறது. தான் ஏமாற்றப்பட்டதை வேலன் உணரும் தருணத்தில், வாழ்க்கை பாதியைக் கடந்துவிடுகிறது. தொகுப்பில் இந்த ஏமாற்றங்களைப் பேசும் கதைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. காதலித்த பெண்களை மணக்க முடியாமல் போவதன் துயரங்களும், அத்தை மகள்களை மணக்க வாய்ப்பிருந்தும் நழுவவிட்டவர்களின் துயரங்களும் இந்தத் தொகுப்பின் பல கதைகளில் பிரதிபலித்திருக்கின்றன. இந்தக் கதைகளில் வரும் பெண்கள் எல்லோருமே சொல்லிவைத்தாற்போல ஒரு வாக்கியத்தைச் சொல்கிறார்கள்: “வீட்டு ஆளுங்க ஒத்துக்கிட்டாதான் கல்யாணம்!”

விரிசல்
கா.சிவா
வாசகசாலை பதிப்பகம்
ராஜ கீழ்ப்பாக்கம், சென்னை-73.
விலை: ரூ.150
தொடர்புக்கு:
99426 33833

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in