Last Updated : 14 Feb, 2021 03:17 AM

Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM

கன்னி: காதல் ஏற்றிய சிலுவை

காலை, பகல், கையறு மாலை, எல்லோரும் தூங்கும் யாமம், விடியல் என்றெல்லாம் பொழுதைப் பகுத்துப் பார்க்க முடிந்தால் அந்தக் காதல் பொய்யே என்கிறார் குறுந்தொகையில் அள்ளூர் நன்முல்லையார். காலம் சட்டென்று ஓடிவிடுவதும் அது நித்தியத்துவமாக நீடிப்பதும் என்று இரண்டு முரண்பட்ட நிலைகளை ஒரே சமயத்தில் கொண்டிருப்பது காதல். நிறை மிகுந்த ஒரு பொருள் தன்னைச் சுற்றியுள்ள வெளியை மட்டுமல்ல காலத்தையும் வளைக்கிறது என்றது ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாடு. அதன்படி பார்த்தால் காதலும் காலத்தை வளைக்கும் அளவிலான ஒரு நிறையைக் கொண்டதே. அதைத்தான் ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ நாவல் உணர்த்துகிறது.

தமிழில் ரொமாண்டிக் நாவல்கள் என்றால் பெரும்பாலும் உடனடியாக நினைவுக்குவருவது தி.ஜானகிராமனின் ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய இரண்டு நாவல்கள்தான். இரண்டாயிரத்துக்குப் பின்னால் வந்த நாவல்களில் ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’, பா.வெங்கடேசனின் ‘பாகீரதியின் மதியம்’ ஆகிய நாவல்களையும் சொல்ல வேண்டும். ரொமாண்டிக் நாவலுக்குரிய முதன்மைப் பண்பு, அந்த நாவலில் சொல்லப்படும் காதல் உணர்வுகள் படிப்பவர்களின் உணர்வுகளையும் நினைவுகளையும் கிளர்ந்தெழச் செய்வன. அந்த வகையில், ‘கன்னி’ நாவல் தன் கடமையைச் செவ்வனே செய்கிறது. அத்துடன் நின்றுவிடவில்லை. உயிரைப் பிடித்துத் திருகவும் செய்கிறது. அப்படியொரு காதல்... அப்படியொரு வலி!

நாவல் நேர்க்கோட்டில் சொல்லப்படவில்லை. ஒருவேளை நேர்க்கோட்டில் எழுதப்பட்டு, அது முன்னும் பின்னுமாகக் கலைத்துப்போடப்பட்டிருக்கும் வாய்ப்புகளும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது. நாவல் தொடங்குவதற்கு முன்பே பின்னிணைப்பு கொடுக்கப்படுகிறது. எழுத்தில் கனம் இல்லாமல் போயிருந்தால் இது வெறும் உத்தியாகவே எஞ்சியிருக்கும். கதையை நேர்க்கோட்டில் சொல்வதென்றால் தென்மாவட்டத்தின் கடலோர ஊரின் இளைஞனான பிரான்சிஸ் சந்தனப்பாண்டியின் சிறுபிராயத்திலிருந்து தொடங்கி இளமைப் பருவத்தில் காதல் கொண்டு, ‘சத்ராதி’யால் பீடிக்கப்படுவதில் நாவல் முடிகிறது. நாவல் மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது. ‘சத்ராதி’ என்று குடும்பத்தினரும் ஊர்க்காரர்களும் நம்பும் ஒன்றால், பித்துநிலை அடைந்த பாண்டியின் மனவுலகம் அதன் தீவிர நிலையில் முதல் பகுதியில் சித்தரிக்கப்படுகிறது. மனநிலை பாதிப்பு கொண்ட ஒருவரின் உலகத்தை இந்த அளவுக்கு நுட்பமாகவும் தீவிரமாகவும் விவரித்த தமிழ் நாவல் வேறு இல்லை.

இரண்டாவது பகுதியில் சிறு வயதிலிருந்து பாண்டி எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும், அவனைவிட ஒரு வயது மூத்தவளான அமலா அக்காவுடனான (ஒன்றுவிட்ட அக்கா) வாஞ்சையும் தாய்மையும் காதலும் கலந்த அவனது உறவு சொல்லப்படுகிறது. சிறு வயதிலிருந்தே எதார்த்தத்தில் அமலாதாசனாக இருக்கும் பாண்டி, கல்லூரியில் கவிதை எழுதும்போது ‘அமலாதாசன்’ என்ற பெயரை வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவள் மேல் அவனுக்குப் பித்து. எங்கேயும் இது காதல் என்று சொல்லப்படவில்லை. அப்படிப் போயிருந்தால் அங்கே பிறழ்வுதான் முதன்மையாக நமக்குப் பட்டிருக்கும். மாறாக, பாண்டி ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும் அதனை ஏந்தியிருக்கும் கன்னி மேரி போல் அமலாவும் தோன்றுகிறார்கள். இந்தப் பகுதியானது ‘கமிங் ஆஃப் ஏஜ்’ நாவலைப் போல எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதி முடியும்போது நாவலின் முக்கால்வாசியைத் தாண்டிவிட்டோம். அப்போதும் பாண்டியின் பித்துநிலைக்குக் காரணம் என்னவென்பது தெரியவில்லை. ஒருவேளை அமலா அக்காதான் காரணமாக இருப்பாளோ என்ற ஐயத்துடன் அடுத்த பகுதிக்குச் செல்கிறோம்.

இறுதிப் பகுதியில் இதற்கு விடை கிடைக்கிறது. (புத்தகத்தைப் படிக்க விரும்புபவர்களுக்கு இங்கே சில ஸ்பாய்லர்கள் காத்திருக்கின்றன). திருவிழாவுக்குப் பெரியம்மா வீட்டுக்குச் சென்றிருக்கும் பாண்டி, அங்கே சாரா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். முதல் பார்வையிலேயே காதல். அவனுடைய பார்வைக்கு அவளும் பதிலளிக்கிறாள். பார்வைகளை ஏற்றல் தொடர்பாக, இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பிக்காதபோதே பிணக்கு ஏற்படுகிறது. பாண்டி அவளுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தில் சாணியை உருட்டிப் பயன்படுத்தி, அவன் மேல் அந்தக் கடிதத்தைத் தூக்கிப்போடுகிறாள் சாரா. பாண்டிக்குச் செத்துப்போய்விடலாம் போல் இருக்கிறது. ஆனால், ஒருசில நாட்களுக்குள்ளேயே சாராவிடமிருந்து பாண்டிக்குச் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்கின்றன.

சாரா என்ற தன்னைத் தானே ‘கட்டிப்போட்டுக்கொண்டு’ திமிறும் பெண்மைக்கும், அது தன்னைத்தானே கட்டிப்போட்டுக்கொண்டதை அறியாத பாண்டியின் தவிப்புற்ற ஆண்மைக்கும் இடையில் இறுதியில் ஒரு மகத்தான சந்திப்பு நிகழ்கிறது. அந்தச் சந்திப்பு, பாண்டியின் ஒவ்வொரு உணர்வு நரம்பையும் உழுதுபோடுகிறது. சாராவும் தன் தளைகளை அறுத்துக்கொண்டு, வெடித்துவந்த உணர்ச்சிகளை ஆரத் தழுவிக்கொண்டு திளைக்கிறாள். இறுதிப் பகுதியில் இந்த அத்தியாயம் மட்டும் வரிசையாக வராமல், தனியாக வெட்டி நாவலின் முடிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் அத்தியாயம் இது. அவசியம் எல்லோரும் காதலில் விழுந்தாக வேண்டும் என்று தூண்டும் அத்தியாயமும்கூட.

இறுதியாகக் கொடுக்கப்பட்டிருக்கும் அத்தியாயம் ‘15அ’ மட்டும் இல்லையென்றால், ஒட்டுமொத்த நாவலும் ஒரு பக்கம் மட்டும் எடை வைத்திருக்கும் தராசுபோல சமனின்றிப் போயிருக்கும். முந்தைய நானூற்றிச் சொச்சம் பக்கங்களும் கடைசி 18 பக்கங்களால் மோட்சம் பெறுகின்றன. இதன் அர்த்தம் ஏனைய பக்கங்கள் வலுவற்று இருக்கின்றன என்பதல்ல. அவற்றின் வலுவுக்குக் கடைசி 18 பக்கங்கள்தான் நிரூபணம் என்பதே இதன் அர்த்தம். காலம் நானோ விநாடிகளாக வெட்டப்பட்டு, ஒவ்வொன்றும் உணர்வு நிலையின் ஏற்ற இறக்கத்தால் துள்ளிக்கொண்டிருக்கின்றன. அங்கே காதலும் காலமும் வேறுவேறு அல்ல என்று தோற்றுவிக்கும் மகத்தான நாடகம் நிகழ்கிறது. ‘காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு/ இக்கணத்தைப் போல இன்பமுண்டோ சொல்லு’ (‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல்) என்ற வாலியின் வரிகளுக்கு ஏற்ப வாசகர் மனமும் கணத்தின் நூறு கூறிட்ட பகுதியை ஒவ்வொன்றாக மெதுமெதுவாக விழுங்குகிறது. பாண்டியின் பார்வையை முன்வைத்தே நாவல் சொல்லப்பட்டிருப்பதால், இறுதிப் பகுதியில் சாராவின் உலகத்தில் என்ன நிகழ்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற தவிப்பு வாசகருக்குக் கூடிக்கொண்டே போகிறது. காதல், காமம் போன்ற உணர்வுகளெல்லாம் கூடாது என்று சொல்லப்பட்ட ஒருத்தி வெடித்துத் துடிக்கிறாள், அல்லது துடித்து வெடிக்கிறாள். அவளது உலகத்தைச் சொல்ல நீங்கள் சாராவாகப் பிறந்திருக்கலாமே பிரான்சிஸ்!

காதலில் ஒவ்வொன்றும் நுண்மையாகவே உள்வாங்கிக் கொள்ளப்படும். திட்டமிட்ட சமிக்ஞைகள், எதேச்சையான சமிக்ஞைகள் என்று காதல் முழுவதும் சமிக்ஞைகளால் நிறைந்தது. இவற்றைத் தருவதிலோ பெறுவதிலோ சிறு தடுமாற்றம் இருந்தாலும் நம் அடிவயிற்றிலிருந்து ஒரு செடியை வேரோடு பிடுங்குவதுபோல் வேதனை ஏற்படும். இன்பம், துன்பம் இரண்டுமே காதலில் ஒன்றாகின்றன. அதற்குப் பெயர்தான் மரண அவஸ்தை. ‘அவள் பார்த்தாலும் அவஸ்தை, பார்க்கவில்லை என்றாலும் அவஸ்தை’ என்பதை ஒவ்வொரு காதலரும், ஒருதலைக் காதலரும் உணர்ந்திருப்பார்கள். இந்த நிலையை அழகாகவும் தீவிரமாகவும் முன்வைத்திருக்கிறார் பிரான்சிஸ் கிருபா.

நாவலுக்கான மொழி பிரான்சிஸ் கிருபாவிடம் சகஜமாக வந்திருக்கிறது. கூடுதலாக, கவிதையாகவே பல இடங்களில் எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கிய மாணவர், கவிஞர் என்ற அடையாளங்கள் கொண்டிருப்பதால், நாவலில் இழையோடும் கவித்துவம் உறுத்தாமல் பலம் சேர்த்திருக்கிறது. காதல்தான் களம் என்றாலும் முழுக்க அக உலகிலேயே சஞ்சரிக்காமல் அந்தக் காதல் நிகழும் களத்தையும் கச்சிதமாகச் சித்தரித்திருக்கிறார். கிறிஸ்தவம் இந்த நாவலின் களத்துக்கு கூடுதல் அழகைத் தருகிறது. கிறிஸ்தவம் சார்ந்த சொற்கள், சடங்குகள் மட்டுமல்லாமல் அதன் கருப்பொருள்களும் நாவலுக்கு அழகும் ஆழமும் சேர்க்கின்றன. குறிப்பாக, வழிதவறிய ஆட்டுக்குட்டி, கன்னி மரியின் மடியில் ஏசு போன்ற கருப்பொருள்கள். நாவலின் தொடக்கத்திலேயே மிகவும் பழுத்த கிழவராக பாண்டியின் மனவுலகச் சஞ்சாரத்தில் ஏசு வருகிறார். சிலுவையைச் சுமந்த ஏசு எங்கே என்று நம் மனம் திகைக்கும்போது, சிலுவையை பாண்டிதான் சுமக்கப்போகிறான் என்பதை உணர்த்துவதற்காக அவர் வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

இந்த நாவலில் மூன்று கன்னிகள் வருகிறார்கள். கன்னியாஸ்திரியாக ஆக வேண்டுமென சிறு வயதிலேயே தீர்மானிக்கப்பட்ட அமலா, அமலாவின் குணப் பிரதிமையோ என்று சந்தேகிக்க வைக்கும் சாரா, நாவலில் நேரடியாக இடம்பெறாமல் நினைவுகூரப்படும் பாண்டியின் அத்தை. இந்த மூன்று கன்னிகளும் பின்னிப் பிணைந்துதான் பாண்டியின் மனதின் ஆழத்தில் கொந்தளிப்பை உருவாக்குகிறார்கள். இறுதியில், பாண்டி சிலுவை சுமக்கும் நேரத்தில் எல்லாக் கன்னியர்களும் காணாமல் போகிறார்கள். அதனால்தான், பாண்டி சிலுவையை விட்டு இறங்க மறுக்கிறான்.

கிட்டத்தட்ட 10 நாட்கள் பழக்கம் ஒருவனைப் பித்தடையச் செய்வது எப்படி என்ற கேள்வி சிலருக்கு எழலாம். எவ்வளவு ஆழமாக அந்தக் காதல் அனுபவம் ஒருவர் மனதில் நிகழ்கிறது என்பதைப் பொறுத்தது அது. அந்த வகையில் நாவலின் இறுதியில் நிகழும் சம்பவங்கள் பாண்டியின் பித்துநிலைக்குச் சாட்சியமாகின்றன. கூடுதலாக, பாண்டி கவிஞன் வேறு.

2006-ல் வெளியிடப்பட்ட ‘கன்னி’ நாவலைக் குறுகிய வாசகர் வட்டம் கொண்டாடினாலும் அது விரிந்த பரப்புக்குப் போய்ச்சேரவில்லை என்றே தோன்றுகிறது. இது தரும் மகத்தான வாசிப்பனுபவத்துக்கும் காதல் அனுபவத்துக்கும் வாசகர் நம்பி தங்களை ஒப்படைக்கலாம். வாசகர்கள் தரும் ஊக்கம் பிரான்சிஸ் கிருபா என்ற எழுத்துக் கலைஞனை மேலும் தீவிரமாகச் செயல்பட வைக்கட்டும்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x