Published : 13 Feb 2021 08:25 AM
Last Updated : 13 Feb 2021 08:25 AM

நூல்நோக்கு - அஷேரா: நினைவுகளில் தொடரும் போர்

பிரதீப்

சயந்தனின் முதல் இரண்டு நாவல்களும் ஈழத்தில் நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்த போரைச் சித்தரிப்பவை. ‘ஆறாவடு’ நாவலானது அய்யாத்துரை பரந்தாமனிடம் நிகழும் மாற்றத்தின் வழியாக மட்டும் போரைச் சொல்லியது. ‘ஆதிரை’ நாவலின் களம் விரிவானது. அது சில தமிழ்க் குடும்பங்களின் தேசத்துக்கு உள்ளேயான தொடர் புலப்பெயர்வுகள், வீழ்ச்சிகள் வழியாக மிக விரிவாகப் போர் நிகழ்த்தும் அழிவுகளை அணுகியது.

‘ஆறாவடு’ நேர்க்கோடற்ற பாணியிலான நாவல். ஆதிரை காலவரிசைப்படி சீராகச் சம்பவங்களைச் சொல்லும் ஆக்கம். ‘அஷேரா’ நாவலைக் கட்டமைப்பின் அடிப்படையில் ‘ஆறாவடு’ நாவலின் தொடர்ச்சியாக வாசிக்கலாம். ‘ஆறாவடு’, போர் உக்கிரம்கொள்ளும்போது அகதியாகப் படகில் தப்பிச்செல்லும் கூட்டத்தில் ஒருவனைப் பற்றிய கதை.

‘அஷேரா’, அகதியாக சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்த அருள்குமரன், அற்புதம், அபர்ணா எனச் சிலரைச் சுற்றி நடக்கும் கதை. அருள்குமரன், அற்புதம் இருவரும் அகதி வாழ்வில் சந்திக்கும் மனிதர்களும் அவர்களுடைய கடந்த கால வாழ்வுமாக நாவல் முன்னும் பின்னுமாக முடையப்பட்டுள்ளது.

பொதுவாக, ஈழம் சார்ந்து எழுதப்படும் படைப்புகளைப் புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்று வகைப்படுத்திப் பார்க்கும் ஒரு வழமை உண்டு. அரை நூற்றாண்டு காலமாக ஈழத்தின் வாழ்க்கையைத் தீர்மானித்ததில் ஈழ அரசியல் இயக்கங்களுக்குத் தொடர்புண்டு என்பதால், ஒரு படைப்பின் அரசியல் சார்பு கேள்விக்கு உள்ளாக்கப்படுவது இயல்பானதும்கூட. ஈழத்தின் போர்ச்சூழலை எழுதத் தொடங்கிய முதல் வரிசைப் படைப்பாளிகள் பலரிடமும் வன்முறைக்கு எதிராக நிலைகொள்ளும் ஒரு எத்தனம் வெளிப்படுவதைக் காணலாம்.

படைப்பு வெளியாகும் காலத்தில், அது சார்ந்து வைக்கப்படும் ‘அரசியல் விமர்சனங்க’ளைத் தாண்டி, அன்றாடத்தின் அரசியல் கொதிப்புகள் அடங்கிய பின்பும் ஒரு படைப்பில் பெற்றுக்கொள்ள ஏதும் இருக்கும் என்றால்தான் அது கலைப் படைப்பாகிறது. ‘அஷேரா’ நாவலின் முதல் பக்கத்திலேயே ஈழ அரசியல் இயக்கங்கள் மீதான மெல்லிய எள்ளலும் விமர்சனமும் தொனிக்கும் ஒரு குறிப்பு உள்ளது. நாவலின் போக்கில் அது மறுக்க முடியாத விமர்சனமாக உருப்பெறுகிறது.

விமர்சனம் என்பதைத் தாண்டி தன்னுடைய கட்டமைப்பின் வழியாக ஒரு அடிப்படையான கேள்வியை நாவல் எழுப்புவதாலேயே ‘அஷேரா’ முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கமாகிறது. அற்புதத்தை ஒரு தலைமுறையாகவும், அருள்குமரனை அவருக்கு அடுத்த தலைமுறையாகவும் வாசிக்கலாம்.

தலைமுறை இடைவெளி என்பது மட்டுமல்லாமல், நாவல் முழுக்கவே அற்புதத்துக்கும் அருள்குமரனுக்குமான முரண் வெளிப்படுகிறது. அற்புதம் பெண்ணையே தீண்டியிருக்காதவர். அருள்குமரன் இளம் வயது முதலே காமத்தை வெறுப்புடனும் குற்றவுணர்வுடனும் பெற்றுக்கொண்டே இருப்பவன். அற்புதம் இயக்கத் தோழர்களாலேயே கொலைசெய்யப்படுவதற்காகத் தேடப்படுகிறார். அருள்குமரன் ஒவ்வொரு செயலிலும் தடயமில்லாமல் தப்பிக்கிறான்.

நாவலில் அனைத்துச் சம்பவங்களும் ஏற்கெனவே நிகழ்ந்து முடிந்துவிட்டன. நாவலுக்குள் நிகழ்வது நினைவுமீட்டல்கள் மட்டுமே. இந்தக் கட்டமைப்பு நாவலுக்கு ஒரு நோக்கத்தைக் கொடுக்கிறது. சயந்தனின் முந்தைய நாவல்களுடன் ‘அஷேரா’வைப் பொருத்தி வாசிக்கச் செய்கிறது. சயந்தனின் நாவல்கள், சிறுகதைகள் எவற்றிலுமே தீர்மானமான அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படுவது இல்லை. தொடர்ச்சியான அழுத்தமான தனித்தனிக் கதைகள் வழியாக உருவாகும் ஒரு முழுச் சித்திரத்தைக் கொண்டே நாவலின் தரிசனம் நோக்கிப் போக முடிகிறது.

போரால் பாதிக்கப்படாத ஒரு மனிதனையாவது சந்திக்க விழையும் அருள்குமரனின் விழைவு நாவலின் முக்கியமானதொரு இழை. போரால் தன்னுடைய நீண்ட வாழ்விலிருந்து எந்த அர்த்தத்தையும் திரட்டிக்கொள்ள இயலாத, வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் பிறரின் கருணையை எதிர்பார்த்தே நிற்க வேண்டிய நிலையில் இருக்கும் அற்புதத்தின் வாழ்க்கைச் சூழல் மற்றொரு இழை.

இதற்கிடையில் இன்னும் பலரும் தங்களுடைய நினைவுகளை மீட்டிச் செல்கின்றனர். ஆப்கானிஸ்தான், சுவிட்சர்லாந்த் என ஈழம் கடந்த போர் பற்றிய சித்தரிப்புகளும் நாவலுக்குள்ளேயே இடம்பெறுகின்றன. அவ்வகையில், கடந்துபோன ஒரு போரை விசாரணை செய்யும் ஒரு பிரதியாக ‘அஷேரா’வை வாசிக்க முடிகிறது. நாவலுடைய உணர்வுநிலையை வகுத்துக்கொள்ளும்படியான ஒரு தருணத்தை இங்கே குறிப்பிடுகிறேன். அற்புதம், முதல் தலைமுறை ஈழப் போராளி. ப்ளோட், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களைப் பகைத்துக்கொண்டவர்.

ஒவ்வொரு தருணமாகத் தப்பித் தப்பி சுவிட்சர்லாந்துக்கு வந்துசேர்கிறார். அங்கு பல வருடங்கள் கழித்து தன்னுடைய அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அருள்குமரனைச் சந்திக்கிறார். தொடக்கத்தில் அது ஒரு நல்ல நட்பாக அமைந்தாலும் ஒரு தருணத்தில் அருள்குமரன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவன் என்று அறிந்த பிறகு, அவனே தன்னைக் கொலை செய்ய அனுப்பப்பட்டவன் என்று எண்ணிவிடுகிறார். தன்னைக் கொன்றுவிட வேண்டாம் என்று அவனிடம் கெஞ்சுகிறார்.

அருள்குமரனும் இயக்கத்திலிருந்து விலகியே சுவிட்சர்லாந்துக்கு வருகிறான். ஆனால், அவனையும் அவன் செய்தே இருக்காத ஒரு தவறின் நினைவு துரத்துகிறது. அருள்குமரனிடம் அற்புதமும் அபர்ணாவிடம் அருள்குமரனும் அடைக்கலமாக முயல்கின்றனர். இறுதிப் போர் முடிந்த பிறகு அல்லது போர்ச் சூழலிலிருந்து அதில் ஈடுபட்டவர்கள் தப்பிய பிறகும்கூட நினைவுகளில் போர்ச் சூழல் உருவாக்கிய பதற்றமும் நிச்சயமின்மையும் தொடரவே செய்கிறது.

‘ஆதிரை’ நாவலின் இறுதி அத்தியாயங்களிலும் இறுதிப் போருக்குப் பிறகான தமிழ்க் குடும்பங்களின் வாழ்க்கைச் சித்தரிப்புகள் உண்டென்றாலும் ‘அஷேரா’வில் அந்தச் சித்தரிப்புகள் மேலும் உக்கிரம் கொள்கின்றன.
‘ஆறாவடு’ நாவலின் பகடித் தொனியும், ‘ஆதிரை’யின் விரிவும் ‘அஷேரா’வில் குறைவது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது. ஆனால், நாவல் தேர்ந்துகொண்ட வடிவத்துக்கும் எடுத்துக்கொண்ட பேசுபொருளுக்கும் இறுக்கமான இவ்வடிவம் பொருந்திப்போகவே செய்கிறது. ‘அஷேரா’ சயந்தனின் மற்றொரு நல்ல நாவல். ஈழ நாவல்களில் குறிப்பிட்டாக வேண்டிய மற்றொரு முக்கியமான ஆக்கம்.

- சுரேஷ் பிரதீப், ‘ஒளிர்நிழல்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: sureshpradheep@gmail.com

அஷேரா
சயந்தன்
ஆதிரை வெளியீடு
விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ்
தொடர்புக்கு: 87545 07070
விலை: ரூ.190

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x