

அக்பரின் நூலகம்
அக்பரின் நூலகத் தில் இருந்த புத்தகங் களின் எண்ணிக்கை 24 ஆயிரம் என்று அவரைப் பற்றிப் புத்தகம் எழுதிய வின்சன்ட் ஸ்மித் கூறியுள்ளார். நஜீம் என்பவர் தலைமை நூலகர். புத்தகங்கள் எண்ணிடப்பட்டு, துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியான பதிவேடுகளும் பரா மரிக்கப் பட்டுள்ளன. வானவியல், இசை, ஜோதிடம், குரான் பொழிப்புரைகள், சமயவியல் மாற்றுச் சட்டம் தொடர்பான நூல்கள் அவரது நூலகத்தில் இடம்பெற்றிருந்தன. கையெழுத்துக் கலை நிபுணர்கள், புத்தகம் கட்டுபவர்கள் மற்றும் புத்தகம் தூக்குபவர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். பட்டுத் துணியில் எழுதப்பட்ட புத்தகங்களுக்குத் தோல் அல்லது மரக்கூழால் அட்டைகள் இடப்பட்டுள்ளன. அட்டையில் செதுக்கல்கள் மற்றும் ஓவியத் தீற்றல்கள் இடம்பெற்றிருந்தன. போர்களின் போதும் நூலகத்திலிருந்து புத்தகங்கள் அக்பருடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அக்பருக்கு மிகவும் பிடித்த நூல் பாபர்நாமா. பல நூல்களை அரண்மனை வாசிப்பாளர்களைக் கொண்டு வாசிக்கச் சொல்லி தினசரி மாலைகளில் கேட்கும் பழக்கமுள்ள அக்பர் எழுத்தறிவற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தக் தக் உஜாலா
பாகிஸ்தானைச் சேர்ந்த அமெச்சூர் நாடகக் குழுவான ‘தியேட்டர் வாலே’ இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்களின் அடிப்படையில் ஒரு நாடகத்தை அமெரிக்காவில் நிகழ்த்தியுள்ளது. ‘இந்தக் கறைபடிந்த விடியல்’ என்பதுதான் தக் தக் உஜாலாவின் அர்த்தம். தேச விடுதலையையொட்டி, புகழ்பெற்ற கவிஞர் பெய்ஸ் அகமத் பெய்ஸ் எழுதிய ‘சுப் இ ஆசாதி’ கவிதையிலிருந்து இந்தத் தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லைப்புறங்களின் இரு பகுதிகளிலும் இந்தப் பாடல் பிரசித்தமானது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு காஃபி ஷாப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அரட்டையின்போது உருவான யோசனையிலிருந்துதான் இந்த நாடகத் திட்டம் பிறந்தது.