Published : 10 Feb 2021 01:34 PM
Last Updated : 10 Feb 2021 01:34 PM

பிரபல எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம் காலமானார்

லட்சுமி ராஜரத்னம் | கோப்புப் படம்.

சென்னை

பல்வேறு நாவல்கள், சரித்திரச் சிறுகதைகள் எழுதிய பிரபல எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம் சென்னையில் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.

எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம், திருச்சியில் 27.3.1942இல் பிறந்தார். இதுவரை 1,500 சிறுகதைகள், 300க்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைக்காட்சி நாடகங்கள், 3 மெகா தொலைக்காட்சித் தொடர்கள், 3,500க்கும் மேற்பட்ட ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியுள்ளார். மேலும், 40 சரித்திரச் சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.

ஆன்மிகச் சொற்பொழிவுகளில் புகழ்பெற்ற லட்சுமி ராஜரத்னம், செந்தமிழ்ச் செல்வி, சொற்சுவை நாயகி என்ற பட்டங்கள் பெற்றவர். டாக்டர் பட்டமும் வாங்கியவர். நிறைய ஆன்மிக நூல்களும் எழுதியுள்ளார்.

காஞ்சி சங்கர மடத்தினால் 1991-ல் எழுத்துக்காகவும், 1993-ல் ஆன்மிகச் சொற்பொழிவுக்காகவும் கவுரவிக்கப்பட்டுள்ளார். இதுவரை 2,500 சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். இசையாற்றல் மிக்கவராகத் திகழ்ந்த அவர், திருவையாறு தியாகராஜ ஆராதனையில் கலந்துகொண்டு பாடியுள்ளார்.

'இதயக்கோயில்', 'அகலிகை காத்திருந்தாள்', 'பாட்டுடைத் தலைவி', 'அவள் வருவாளா?', 'என்னைக் கொன்றவன் நீ' ஆகியவை இவருடைய நாவல்களில் குறிப்பிடத்தகுந்தவை.

வயது முதிர்ந்தாலும், சமீபகாலமாக, தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள், ஆன்மிக இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எழுதி வந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் லட்சுமி ராஜரத்னம் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார்.

இவருடைய ஒரேயொரு மகளான ராஜஸ்யாமளா எழுத்தாளராகவும் பரத நாட்டியக் கலைஞராகவும் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x