Published : 06 Feb 2021 06:57 AM
Last Updated : 06 Feb 2021 06:57 AM

நூல்நோக்கு: பாவலர்களின் வரலாறு

பாவலர் சரித்திர தீபகம்
அ.சதாசிவம் பிள்ளை
ஏஷியன் எஜுகேஷனல் சர்வீஸஸ்
சென்னை-600014.
தொடர்புக்கு:
044-28131391
விலை: ரூ.295

தமிழ் தனது 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இலக்கிய மரபில் ஏராளமான புலவர்களையும் கவிஞர்களையும் கொண்ட மொழி. உலக அளவில் இவ்வளவு நெடிய மரபும் அதிக அளவிலான கவிஞர்களையும் கொண்ட மொழிகள் சிலவே. எனினும், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு முறையாகப் பதிவுசெய்யப்படாதது ஒரு பெருங்குறை. ஆங்கிலக் கவிஞர்களின் வாழ்க்கையைப் பற்றி சாமுவேல் ஜான்ஸன் எழுதிய ‘தி லைவ்ஸ் ஆஃப் பொயட்ஸ்’ மிகவும் பிரபலம். தனித்தனியாக ஏனைய கவிஞர்களைப் பற்றியும் ஆங்கிலத்தில் நூல்கள் ஏராளம். தமிழில் அத்தகைய முயற்சிகள் மிகவும் குறைவு. இலங்கையைச் சேர்ந்த சைமன் காசி செட்டி ஆங்கிலத்தில் எழுதிய ‘தி டமில் ப்ளூட்டார்ச்’ ஒரு தொடக்கப் புள்ளி என்றால், அதன் அடுத்த கட்டம் ஜே.ஆர்.ஆணல்ட் என்று அழைக்கப்பட்டவரும், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்தவருமான அ.சதாசிவம் பிள்ளை எழுதிய ‘பாவலர் சரித்திர தீபகம்’ (1886). தமிழ் இலக்கியத்தின் முக்கியமான சில நூல்கள் இன்னும் கண்டெடுக்கப்பட்டிராத நிலையில் எழுதப்பட்ட வரலாற்றுத் தொகுப்பு இது. சங்கப் புலவர்களில் ஆரம்பித்து பக்தி இலக்கிய காலகட்டம், காப்பியக் காலம், சிற்றிலக்கியக் காலம், 19-ம் நூற்றாண்டு வரையிலான 410 பாவலர்களின் வாழ்க்கை வரலாறு இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் அகச்சான்றுகள், செவிவழிச் செய்திகள் உள்ளிட்ட பிற சான்றுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் இது. எனினும், இலக்கியத்தினுள் ஊடாடிக்கொண்டிருக்கும் தொன்மங்களை நீக்கி, கூடுமானவரை உண்மை வரலாற்றைக் கொடுக்க முயன்றிருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். 19-ம் நூற்றாண்டு வரையிலான தமிழ்க் கவிஞர்கள் வரலாற்றை அறிந்துகொள்ள குறிப்பிட்ட அளவுக்கு உதவக்கூடிய நூல்.

- தம்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x