திறனாய்வுக்கான 2020 'பஞ்சு பரிசில்' விருது: எழுத்தாளர் ஜமாலன் தேர்வு

திறனாய்வுக்கான 2020 'பஞ்சு பரிசில்' விருது: எழுத்தாளர் ஜமாலன் தேர்வு
Updated on
1 min read

2020-ம் ஆண்டுக்கான 'பஞ்சு பரிசில்' விருதுக்கு 'உடலரசியல்' என்னும் திறனாய்வு நூலை எழுதிய எழுத்தாளர் ஜமாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலக்கியமும் திறனாய்வும் பிரிக்க முடியாதவை. ஆனால், இலக்கியத்திற்குப் பரிசு கொடுக்கும் அமைப்புகள் ஏராளம் உள்ளன. திறனாய்வு எழுத்திற்கென்று பரிசு கொடுக்கும் அமைப்பு இல்லையே என்று உணர்ந்த பிரபல திறனாய்வாளரும், பேராசிரியருமான க.பஞ்சாங்கத்தின் நண்பர்கள் சிலர் ஒன்றுகூடி அவர் பெயரிலேயே 'பஞ்சு பரிசில்' என்ற பெயரில் விருது தர முடிவு எடுத்தனர்.

இதனால் ஆண்டுதோறும் அவர் பிறந்த பிப்ரவரி மாதத்தில் சிறந்த திறனாய்வு நூலுக்கு ரூ.10,000 தொகையும் கேடயமும் பரிசாகக் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2019-ம் ஆண்டு முதல், பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான சிறந்த திறனாய்வு நூலாக எழுத்தாளர் ஜமாலன் எழுதியுள்ள 'உடலரசியல்' என்ற திறனாய்வு நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பரிசு வழங்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 5-ம் தேதி புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது.

புதுச்சேரி பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழா

அதைத் தொடர்ந்து புதுச்சேரி பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழாவும் நடக்கிறது. பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் திறனாய்வுப் பணியினைப் பாராட்டி, அண்மையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் புதுமைப்பித்தன் நினைவு விருது அளிக்கப்பட்டது. அத்துடன் ஒரு லட்ச ரூபாயும், பட்டயமும் வழங்கப்பட்டன.

இதேபோல், பிரெஞ்சுப் பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகருக்கு பிரெஞ்சு அரசின் ரோமன் ரோலன் மொழியாக்கப் பரிசு கொல்கத்தா இலக்கிய விழாவில் வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர் மே மாதம் நடைபெறவுள்ள பாரீஸ் புத்தக விழாவில் கலந்து கொள்ளவும், ஒரு மாதம் பிரான்சில் தங்கி வரவும் அழைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மும்பை ஸ்பேரோ இலக்கிய விருதினையும் பெற்றுள்ளார்.

விருது பெற்ற பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழா பிப்ரவரி 5-ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழ் அறிஞர்கள் பலரும் பங்கேற்கின்றனர். விழாவைப் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும், நட்புக் குயில்கள் அமைப்பும் இணைந்து நடத்துகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in