

மனிதகுல வரலாற்றை ஒரு தத்துவப் பார்வையில் அருணன் இந்த நூலில் வழங்கியுள்ளார். வரலாறு வட்டமடிக்கிறதா அல்லது மேல்நோக்கி வளர்ந்து செல்கிறதா? யுகங்கள் என்று இந்திய மரபு எதைக் கூறியது? ஆதிமனிதன் யுகம், ஆண்டான் யுகம், நிலப்பிரபு யுகம், முதலாளித்துவ யுகம் என்று செல்கிற மனிதச் சமூகத்தின் வரலாற்றில் இந்தியாவில் ஏன் முதலாளித்துவம் மற்ற நாடுகளில் வளர்ந்த பாணியில் வளரவில்லை? இந்தியாவில் அடிமை முறை இருந்ததா, இல்லையா? என்ற தேடுதலில் எழுந்த கேள்விகள் என ஒரு கால இயந்திரத்துக்குள் நம்மை அருணன் அழைத்துச் செல்கிறார். கடந்த காலம் பற்றிய புரிதலில்தான் எதிர்காலத்தைச் செதுக்கும் திறமை சிக்கிக் கிடக்கிறது என்பது அருணனின் முக்கியமான பார்வைகளுள் ஒன்றாக இந்தப் புத்தகத்தில் நமக்குக் கிடைக்கிறது.
- பிரம்மி
யுகங்களின் தத்துவம்
ஆசிரியர்- அருணன்
வெளியீடு- வசந்தம் வெளியீட்டகம்,
மதுரை- 625 001, விலை- 170.
தொலைபேசி: 94422 61555,
மின்னஞ்சல்: vasanthamtamil@yahoo.in