

21-ம் நூற்றாண்டில் புத்தகங்களை வாங்குவது என்பது எளிதானதொரு செயல். புத்தகங்களை விற்பதற் கென்றே பல்வேறு இணையதளங்கள் இயங்கிவருகின்றன. இது தவிர முக்கிய மான இடங்களிலெல்லாம் புத்தக வி்ற்பனை நிலையங்களும் உள்ளன. இதனால் உலகத்தின் மூலை முடுக்குகளில் வெளியாகும் புத்தகங்கள் அனைத்தும் சர்வசாதாரணமாக நம் பார்வைக்குக் கிடைப்பதோடு வீடு தேடியும் வந்து சேர்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் இந்த நிலை இல்லை.
சுவடிகளிலிருந்து அச்சடிக்கப்பட்ட வடிவங்களாக நூல்கள் மாறியபடி வந்த காலகட்டம் அது. சுவடிகளில் பரிசிலுக்காக எழுதுவோரே அன்றிருந்தனர். சுவடிகளில் நூல்களை எழுதிப் படிகளாக விற்றவர்களை அறிய முடியவில்லை. சுவடியிலிருந்து அச்சடிக்கப்பட்ட நூல்களாக மாறிய கால கட்டமான பத்தொன்பதாம் நூற்றாண்டில் நூல்களை அவர்கள் எவ்வாறு விற்பனை செய்திருப்பர் என்று பார்க்கும்போது சில சான்றுகள் அக்காலகட்டப் பதிப்புகளின் பின்பக்கங்களிலும் முன்பக்கங்களிலும் காணக் கிடைக்கின்றன. தனியான புத்தக விற்பனை நிலையங்கள் என்று எதுவும் தோன்றாத காலகட்டத்தில் அப்புத்தகங்களை விற்பனை செய்வதற்கு அச்சகத்தார் பல ஊர்களில் உள்ள வீடுகளையும் அச்சுக் கூடங்களையுமே புத்தக விற்பனை நிலையங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
பின்னர் படிப்படியாகப் புத்த கங்களை விற்பனை செய்யும் புத்தகக் கடைகளும், புத்தக விற்பனையாளர்களும் உருவாகிப் புத்தகங்களை விற்பனை செய்த முறைமையினையும் அறிய முடிகிறது. பின்வரும் குறிப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புத்தகங்களை விற்பனை செய்த முறைமையின் வளர்ச்சிப் படிநிலைகளைக் காட்டுகின்றன.