Published : 30 Jan 2021 03:15 am

Updated : 30 Jan 2021 07:12 am

 

Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 07:12 AM

காந்தி நூல்கள்: உன்னத வாழ்க்கையின் அற்புத அறிமுகம்

gandhi-books

காந்தி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பல உலகத் தலைவர்களுக்குக் கிடைக்காத அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. கீழை நாகரிகத்தில் பிறந்து, வளர்ந்த காந்திக்கு மேற்கத்திய நாகரிகத்தோடு பழகும் வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த நாகரிகத்தோடு இணைந்து, வாழ்ந்து பின்னர் அதிலிருந்து விலகி வருகிறார். அதேபோல் உலகில் தொன்மையான கலாச்சாரங்களுள் ஒன்றான ஆப்பிரிக்கக் கலாச்சாரம் தென்ஆப்பிரிக்காவில் காந்தி வாழ்ந்தபோது அவருக்குப் பரிச்சயமாகிறது. அங்கெல்லாம் சென்றார், வாழ்ந்தார் என்று வந்தவரில்லை காந்தி. அங்கெல்லாம் அந்தந்த நாகரிகங்களுடனான ஒரு எதிர்கொள்ளலை ஏற்படுத்திக்கொண்டு அதிலிருந்து வளர்ந்துவந்தவர். குறிப்பாக, தென்னாப்பிரிக்க அனுபவம் காந்தியைப் புடம்போட்ட தங்கமாக்கியது.

ஆகவே அவருடைய எழுத்துகளும் பேச்சுகளும் மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தன. உண்மையை உணர்ந்த அனுபவ எழுத்துக்களாய் மிளிர்ந்தன. ஆதலால்தான் ‘என் வாழ்க்கையே செய்தி’ என்று உலகுக்கே கூறினார். ஆகவேதான் அவருடைய எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும், அது தமிழ் மக்களுக்குப் பலனளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் 17 தொகுதிகளாக வெளியிட்டார்கள்.


அறிஞர்கள், தலைவர்கள் குழு

இதற்கான ஏற்பாடுகளையெல்லாம் தமிழ்நாடு காந்தி நினைவு நிதி செய்துகொடுத்தது. அன்றைய தமிழக அரசு இதற்கான எல்லா ஒத்துழைப்பையும் நல்கியதோடு, இதற்கான செலவையும் ஏற்றுக்கொண்டது. காந்தி நூல் வெளியீட்டுக் கழகத் தலைவராக தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாரும் செயலாளராக கோ.வேங்கடாசலபதியும் இருந்தார்கள். காமராஜர், சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்சலம், ம.ப.பெரியசாமி தூரன், மு.அருணாசலம், ரா.வேங்கடராஜுலு, கி.வா.ஜகந்நாதன் உள்ளிட்டோரை உறுப்பினர்களாகவும் கொண்டு இந்தத் தொகுதிகளின் முதல் நூல் 1957 செப்டம்பரில் வெளியிடப்பட்டன. இந்த முதல் தொகுப்பில் ஒரு நூலின் விலை ரூ.7.50 மட்டுமே. இக்கழகத்தின் அலுவலகம் முதலில் சென்னையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயத்தில்தான் இயங்கியது. பின்னர், இது அரசினர் தோட்டத்துக்குச் சென்றது. தொகுப்பு நூலுக்கான ஆசிரியரான ரா.வேங்கடராஜுலு இறந்த பிறகு அந்தப் பணியைச் சிரமேற்கொண்டவர் ஜெயமணி சுப்பிரமணியம்.

“அவர் அவ்வப்போது எழுதிய எழுத்துகளும் சொன்ன வார்த்தைகளும் நிறைந்த சக்தியுள்ளன. இன்றும் என்றும் அதைப் படிப்போர் மனத்தில் எழுச்சியையும் சக்தியையும் தூய்மையான கருத்துகளையும் உண்டாக்க வல்லன. இவற்றைத் தமிழில் வெளியிடுவது தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் சிறந்த சேவையாகும். காந்தி வாழ்ந்தபோதும் தமிழ்நாடும் தமிழ் மக்களும் அவர் கொள்கைகளில் பெரிதும் ஈடுபட்டுப் பின்பற்றினார்கள். அவருக்குத் தமிழ் மக்கள் பாலிருந்த அன்பு பெரிது. அவர் மறைந்த பிறகு அவர் நூல்களையெல்லாம் திரட்டி வெளியிட தமிழ்நாடே முதலில் முன்வந்திருக்கிறது’ என்ற முன்னுரையை காந்தி நூல்கள் தொகுதியில் கொடுத்திருக்கிறார்கள்.

அரசியலராகத் திகழ்ந்த காந்தி அரசியலுக்கு அப்பாற்பட்டு எப்படி உருவாகிவந்தார் என்பதை அந்தந்தப் பொருட்களின் அடிப்படையில் உள்ள தொகுப்பு நூல்கள் மூலம் நாம் அறியலாம். அவர் எவ்வாறு பொதுவெளியில் தன்னுடைய கருத்துகளை முன்வைத்து மக்களுடன் உரையாடுகிறார் என்பதைப் படிக்கும்போது, அவர் அப்படியே நம்மை ஆட்கொண்டுவிடுகிறார். அதுவும் தமிழில் படிக்கும்போது நம் உள்ளத்து உணர்ச்சிகளோடு கலந்து நம்முள் கரைந்துவிடுகிறார்.

‘தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம், இந்திய சுயராஜ்யம்’ (1957) என்ற தொகுதியில் தொடங்கி ‘சகோதரிகளுக்கு காந்திஜியின் கடிதங்கள்’ (1968) என்ற தொகுதி வரை மொத்தம் 16 தொகுதிகள். 17-வது தொகுதி அனைத்துத் தொகுதிகளுக்குமான ‘பொருட்குறிப்பு/அகரவரிசை’ (1969) ஆகும்.

ஆங்கிலத்தில் வந்துள்ள 100 தொகுதிகளின் முதல் தொகுதி 1958-ல்தான் வந்தது. தமிழகத்தைத் சேர்ந்த பேராசிரியர் கே.சுவாமிநாதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற பின்னர்தான் வேகம் பிடித்தது. இன்றும் ஆங்கிலத் தொகுதி ‘கே.எஸ். எடிசன்’ (K.S. Edition) என்றுதான் குறிப்பிடப்படுகிறது. அதேபோன்று அனைத்துத் தொகுதிகளையும் மீண்டும் இந்திய அரசு தற்போது பதிப்பித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் குஜராத்தைச் சேர்ந்த குமாரி தீனா பட்டேல்தான்.

முன்னோடித் தொகுதிகள்

தமிழ்நாட்டிலோ 1958-க்கு முன்னரே இந்தப் பணியை எடுத்துக்கொண்டு 1957-லேயே தமிழில் வெளியிட்டுவிட்டார்கள் என்பது தமிழகத்திற்குப் பெருமை. அதேபோல ஆங்கிலத் தொகுதிகள் காலவரிசைப்படி வெளியிடப்பட்டன. ஆனால், தமிழிலோ பொருள்வாரியாக உருவாக்கப்பட்டது. இது இன்னும் கடினமான பணி. ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் துணைத் தலைப்புகள் காலவரிசைப்படி தரப்பட்டுள்ளதால் காந்தியின் கருத்தாக்க வளர்ச்சியையும் நம்மால் காண இயலும். பலருடைய பக்தியோடு கலந்த 15 ஆண்டு கடுமையான உழைப்பு இந்தத் தொகுதிகளில் தெரியும். அதேபோல தமிழாக்கத்திலும் பலர் பங்கெடுத்துக்கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ஒருவரோ அல்லது பலரோ சேர்ந்து இந்தப் பணியை நிறைவுசெய்திருக்கிறார்கள். இப்பணியில் ஈடுபட்டவர்கள் அநேகமாக காந்தி காலத்தில் வாழ்ந்தவர்கள்.

இந்த நூல் தொகுதியில் வராத அதே சமயம் மிகவும் பொருத்தமாக காந்தி நூற்றாண்டு விழாவின்போது வெளியிடப்பட்டது ‘தமிழ்நாட்டில் காந்தி’. அ.இராமசாமியின் கடின உழைப்பால் உருவானது. காந்தி தமிழ்நாட்டுக்கு 20 முறை வந்துள்ளார். தமிழ்நாட்டுக்கும் காந்திக்கும் உள்ள தொடர்பை, தமிழருடன் காந்திக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆவணப்படுத்தும் தொகுதியாக ‘தமிழ்நாட்டில் காந்தி’ அமைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட இதுபோன்றதொரு ஆய்வு நூலை யாரும் எழுதவில்லை.

அ.இராமசாமி எழுதிய ‘தமிழ்நாட்டில் காந்தி’ நூலை 18-வது தொகுதியாகவும் அரங்க.சீனிவாசன் எழுதிய ‘காந்தி காதை’ நூலை 19-வது தொகுதியாகவும், ‘காந்தியடிகளின் முன்னோடிகள்’ என்ற தொகுப்பை 20-வது தொகுதியாகவும் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டது.

காந்திக்கு எழுதுவதில் ஆர்வம் அதிகம். அதேபோல் தன்னுடைய எண்ணங்களை அனைவரோடு பகிர்ந்துகொள்வதிலும் அவ்வளவு ஆனந்தம் அவருக்கு. அந்தப் பணியைத் திறம்படச் செய்திருக்கிறார்கள் அவருடைய தொகுதிகளின் வெளியீட்டுக் குழுவினர். தற்போது பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், புதுடெல்லி இந்த சிறப்பான நூல் தொகுப்பைப் பார்த்து வியந்துபோய், அதனை ஆங்கிலத்திலும் கொண்டுவந்தால் பலரும் பயனடைவார்கள் என்று முடிவுசெய்து, அப்பெரும் பணியை சென்னையில் உள்ள காந்தி கல்வி நிலையத்தாருக்குக் கொடுத்துள்ளார்கள்.

இன்னும் ஓர் ஆண்டுக்குள் இந்த 17 தொகுதிகளும் ஆங்கிலத்தில் வர இருக்கின்றன. தமிழ்த் தொகுதி 17-உடன் கூடுதலாக மூன்று தொகுதிகள் சேர்த்து வர்த்தமானன் வெளியிட்ட 20 தொகுதிகளும் தற்போது விற்பனையில் இல்லை. என்றாலும் சென்னை தியாகராய நகர் தக்கர்பாபா வித்யாலய வளாகத்தில் உள்ள காந்தி கல்வி மையத்தில் 17 தொகுதிகளையும் மின்னூல்களாகப் பெற்றுக்கொள்ளலாம். தொடர்புக்கு: 9952952686.

- அ.அண்ணாமலை, இயக்குநர், தேசிய காந்தி அருங்காட்சியகம், புது டெல்லி. தொடர்புக்கு: nationalgandhimuseum@gmail.comகாந்தி நூல்கள்:உன்னத வாழ்க்கைஉன்னத வாழ்க்கையின் அற்புத அறிமுகம்Gandhi books

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x