

வெகுஜன தளங்களில் செயல்பட்டுவந்தாலும் தீவிரமான படைப்புகளை உருவாக்குவதற்கான பிரயத்தனத்தைக் கொண்டிருந்த வெகுசிலரில் வாஸந்தியும் ஒருவர். 'முத்துக்கள் பத்து' தொகுப்பில் உள்ள கதைகளே அதற்குச் சான்று.
வாஸந்தியின் கதைகள் தமிழ்ப் புனைவுலகில் அதிகம் அறிமுகமாகியிராத விஷயங்களைப் பேசுகின்றன. புதிதாகச் சில மனிதர்களை, அவர்கள் வாழ்வை, உணர்வுகளைக் காட்டுகின்றன. வாஸந்தியின் கவனம் வாழ்வின் வெவ்வேறு நிலைகளையும் நாடிச் செல்கிறது. அவரது படைப்பூக்கம் அவரது பின்னணி வரையறுக்கும் எல்லைகளை மீறிச் செல்கிறது. சாதி, மதம், பால் அடையாளம், புவியியல் எல்லைகள் ஆகியவற்றைத் தாண்டி அவரது அக்கறைகள் பயணப்படுகின்றன. இந்தப் பயணம் அவர் புனைவுலகை விரிவாக்குகிறது. பன்முகத் தன்மை கொண்டதாக்குகிறது. புதிய வாசக அனுபவங்களைச் சாத்தியமாக்குகிறது.
பத்துக் கதைகள், பத்துக் களங்கள்
பத்துக் கதைகள். கிட்டத்தட்டப் பத்துக் களங்கள். பத்துவிதமான பின்புலங்கள், ஒவ்வொரு கதையிலும் பல்வேறு விதமான மனிதர்கள். கதைகளைப் படிக்கும்போது உண்மையிலேயே அவர்களைப் பார்த்துப்பழகிய உணர்வை வாஸந்தியின் எழுத்து ஏற்படுத்திவிடுகிறது. இயல்பானதும் வலுவானதுமான சித்தரிப்பால் தன் புனைவுலகின் களங்களையும் மனிதர்களையும் நமக்கு மிக நெருக்கத்தில் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார் வாஸந்தி.
வாஸந்திக்குக் கோபம் இருக்கிறது. நியாயமான கோபம் அது. பெண்களைத் தங்களைப் போன்ற ஓர் உயிரினமாக மதிக்காத ஆண்கள் மீது. பிறப்பை அடிப்படையாகக் கொண்டு மரியாதையை வரையறுக்கும் சமூக அமைப்பின் மீது, மரபுச் செல்வங்கள், இயற்கை வளங்கள் ஆகியவற்றின் மீதான உதாசீனத்தின் மீது... பலவிதமான நியாயமான கோபங்கள் இருக்கின்றன.
ஆனால் அவருடைய கலை உணர்வு அந்தக் கோபங்களின் எல்லைகளை மீறிச்செல்லவைக்கிறது. அனைத்து மனிதர்களையும் அவரவர் நிலைகளில் வைத்துப் பார்க்க உதவுகிறது. பெண்குழந்தையைக் கொல்ல முனைபவர்களும் காப்பாற்ற முனைபவர்களும் அநீதிக்குப் பழிவாங்க நினைப்பவரும் தத்தமது நியாயங்களுடன் நமக்கு தரிசனமாகிறார்கள். எல்லாக் கதைகளிலும் வாஸந்தி மன நெருக்கடியை ஏற்படுத்திவிடுகிறார். ஒரு கணமேனும், மனம் கசிய வைத்துவிடுகிறார்.
ரசனையும் அழகியலும் சித்தரிப்பில் இழையோடினாலும் மன நெருக்கடியே இவரது சித்தரிப்பில் முனைப்பு கொள்கிறது. வெளிப்படையான விமர்சனமோ கண்டனமோ புலம்பலோ போதனைகளோ இன்றி அவரால் இதைச் சாதிக்க முடிகிறது.
வாஸந்தியின் பார்வையில் ஒரு தரப்புக்கும் தனி மரியாதை இல்லை. பல கதைகளில் குறிப்பிட்ட ஒரு விஷயம் குறித்துப் பல தரப்புகள் பிரதிநிதித்துவம் பெறுகின்றன. ‘சின்னம்’ கதை இதற்கு நல்ல உதாரணம் இதில் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு தரப்பு. கதாசிரியரின் மனச்சாய்வு ஒரு சில தரப்புகளின் மீது கூடுதலாக விழுந்தாலும் கதையின் சமநிலையைக் குறைக்கும் அளவுக்குப் போகவில்லை.
வாஸந்தியின் கதையுலகில் மரபுக்கு உள்ள இடம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவப் பார்வையும் பெண்ணிய நோக்கும் ஜனநாயக, சமத்துவ உணர்வும் வாஸந்தியின் கதைகளில் பிரதிபலிக்கவே செல்கின்றன. மரபின் மீது அவருக்கு விமர்சனம் இருக்கிறது. உதாசீனம் இல்லை. சங்கீதம், நடனம் எனக் கலை சார்ந்த மரபின் மீது மட்டுமல்ல. துளசிச் செடியுடனான உறவு சார்ந்த மரபின் மீதும் அவருக்கு மதிப்பு இருக்கிறது. கதையுலகில் ஒவ்வொரு அம்சமும் பிரதிபலிக்கும் விதம் கருத்து நிலைக்கு உட்பட்டிருந்தால் அது பிரச்சாரம். அதைத் தாண்டிச் செல்வது கலை. வாஸந்தியின் கலை, மரபு, மத நம்பிக்கை முதலான விஷயங்களை கருத்துகளின் சட்டகத்தில் அடைத்துப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுகிறது. இது மனிதர்களை அவர்களது பின்னணிகளோடும் உளவியலோடும் புரிந்துகொள்ள உதவுகிறது. கடவுள், சம்பிரதாயம், சமூக நம்பிக்கைகள் ஆகியவை குறித்த தனது கருத்துகளைச் சொல்லக் கதைகளைப் பயன்படுத்தும் விபத்து வாஸந்திக்கு நேரவில்லை.
வாசக அனுபவமாகும் கதை யதார்த்தம்
சமூகப் பிரச்சினைகள் சார்ந்த கோபம் கலையுணர்வின்றி வெளிப்படும்போது அங்கே அழகுணர்ச்சிக்கு இடம் இருக்காது. இந்த விபத்தும் வாஸந்தியின் கதைகளுக்கு நேரவில்லை. காட்சிகளின் அழகில் லயிக்க அவரது கலை அவருக்கு இடமளிக்கிறது.
வாஸந்தியின் கதைகளில் மாற்றங்கள் பெரும்பாலும் பின்னோக்கில் நினைவுகூரப்படுகின்றன. மாற்றத்தின் போக்கு அது நிகழும் விதத்தில் அனுபவமாவதில்லை. பாத்திரங்களின் நினைவினூடே அது சொல்லப்படுகிறது. சில சமயம் நினைவுகளாக சிலசமயம் பின்னூட்டக் காட்சிகளாக.
இந்தப் பொதுவான போக்கிற்கு விதிவிலக்காக இருப்பது 'மறதி' என்னும் கதை. கூன் விழுந்த முதுகு கொண்ட கிழவர் கண்களைக் கட்டிய நிலையில் ஸ்பரிசத்தை வைத்துத் தன் மனைவியை அடையாளம் காண வேண்டிய சவாலை எதிர்கொள்கிறார். நீட்டப்படும் கரங்களில் ஆக மென்மையான, இளமையான கரங்களைத் தன் மனைவியினுடையது என்று சொல்கிறார். தன் நிஜ மனைவியின் கைகளில் உணரும் சுருக்கமும் முதுமையும் அவருக்கு அறிமுகமாகாதவை.
மனைவியின் "மல்லிப்பூ” போன்ற கைகள்தாம் அவர் மனதில் இருக்கின்றன. அந்தப் “பூக்கை”தான் அவர் நினைவில் இருக்கிறது. 59 வருடத் தாம்பத்ய வாழ்வில் அந்தப் பூக்கைகளை அதிகபட்சம் 20, 25 ஆண்டுகளுக்கு உணர்ந்திருப்பாரா? மீதியிருந்த ஆண்டுகளில் அந்தக் கைகளுக்கு நேர்ந்த மாறுதல் அவர் கண்களுக்கோ கைகளுக்கோ ஏன் தெரியவில்லை? இளமை நீங்கியதும் ஸ்பரிசமும் காணாமல் போய்விடுவது ஏன்? கணவன் - மனைவி ஸ்பரிசம் என்பது காமம் - இளமை சம்பந்தப்பட்டது மட்டும்தானா? ஒரு கட்டத்திற்குப் பிறகு ஸ்பரிசத்தின் எல்லா விதமான தேவைகளையும் வாய்ப்புகளையும் அவர்கள் துறந்துவிட்டார்களா? வாழ்க்கை அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவே இல்லையா? எனில் 59 ஆண்டு வாழ்வுக்கு என்ன பொருள்? இருவரையும் இணைத்துவைத்த கண்ணி எது? உடல் ஸ்பரிசம் மட்டுமின்றிக் கண்களின் ஸ்பரிசம்கூட அற்றுப்போன தாம்பத்யம் என்றால் அது எப்படிப்பட்ட தாம்பத்யம்? 59 ஆண்டுக்கால தாம்பத்யம் என்று சொல்லும்போது ஆழமான தளத்தில் அதன் பொருள் என்ன?
ஒரே ஒரு ஸ்பரிசமும் அது சார்ந்த மனப்பதிவும் இப்படிப் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. இந்திய வாழ்வில் தாம்பத்திய உறவின் தன்மைகள், வெவ்வேறு கட்டங்களில் மாறிவரும் அதன் இயல்புகள், அதில் பெண்களின் நிலை ஆகியவை பற்றிப் பல உண்மைகளை உணர உதவுகின்றன. மிகவும் நுட்பமாக எழுதப்பட்டுள்ள கதை இது.
சமூக யதார்த்தங்களைச் சித்தரிக்கும்போதும் இந்த நுட்பம் வெளிப்படுகிறது. மாபெரும் மேள வாத்தியக் கலைஞர் மேட்டுக்குடியினரால் இழிவுபடுத்தப்படும் காட்சி மிகவும் அடங்கிய தொனியில் அழுத்தமாக வெளிப்படுகிறது. மேளம் வாசிப்பவருக்கு உணவு வழங்கப்படும் காட்சியின் எளிய சித்தரிப்பு எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. முழக்கங்களோ உணர்ச்சிப் பிசுக்கேறிய வெளிப்பாடுகளோ இல்லாமல் சித்தரிக்கப்படும் இந்த யதார்த்தம் வாசக அனுபவப் பரப்பின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.
பத்துக் கதைகளையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு அலசும்போது அவற்றின் நிறைகுறைகளை மேலும் விரிவாகப் பேசலாம். இந்தக் கதைகள் அனைத்தும் வாழ்வுடன் ஒரு கலைஞர் கொண்டுள்ள தீவிரமான உறவின் வெளிப்பாடாக அமைந்துள்ளது இந்தக் கதைகளைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. உத்தி சார்ந்த பரிசோதனைகளோ கலை சார்ந்த பாவனைகளோ இல்லாத இந்தக் கதைகள் வாசகரோடு இயல்பாகவும் நேரடியாகவும் உறவாடுகின்றன. மேலெழுந்தவாரியாக எளிய தோற்றம் கொண்டிருந்தாலும் இயல்பான சித்தரிப்பு, கருத்து நிலைகளை முன்னிறுத்தாத அணுகுமுறை, பல்வேறு தரப்புகளிடையே பேணும் சமநிலை, மரபுடனான உறவு, சரளமான கதை கூறும் முறை, நுட்பங்கள் ஆகியவற்றால் இந்தக் கதைகள் நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன.
- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in