Published : 16 Jan 2021 07:11 AM
Last Updated : 16 Jan 2021 07:11 AM

சென்னையில் புத்தகத் திருவிழா

லட்சக்கணக்கான வாசகர்கள் பங்கேற்கும் சென்னைப் புத்தகத் திருவிழா இம்முறை கரோனா காரணமாகத் தள்ளிப்போயிருக்கிறது. “சென்னைப் புத்தகக்காட்சி நடத்துவதற்காக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பம் பேரிடர் மேலாண்மைத் துறையின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. அரசு அனுமதி கிடைத்தவுடன் பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் 44-வது சென்னைப் புத்தகக்காட்சி 2021 நடைபெறும்” என்று தெரிவித்திருக்கிறார் பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம். இந்நிலையில், 60 அரங்குகளுடன் பொங்கல் புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தது சென்னை வாசகர் வட்டம். அரசின் விதிகளுக்கு உட்பட்டு, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் புத்தகக்காட்சி நடந்துகொண்டிருக்கிறது.

குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே நடந்துவந்த புத்தகக்காட்சி, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவடைந்தது. ஆனால், கரோனா எல்லாவற்றையும் முடக்கிவிட்டது. ஈரோடு, கோவை, மதுரை என எந்தப் புத்தகக்காட்சியும் நடக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் சரிந்து விழுந்த புத்தக விற்பனையை மீட்டெடுப்பதற்காகச் சிறிய அளவில் ஆங்காங்கே புத்தகக்காட்சிகள் நடந்தன என்றாலும் நிறைய பதிப்பக வெளியீடுகளை ஒன்றாகப் பார்க்கும் வாய்ப்பு இல்லை. இப்போது நடக்கும் பொங்கல் புத்தகத் திருவிழாவானது சிறிய அளவிலேனும் அந்தக் குறையைப் போக்கியிருக்கிறது. 60 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 40 பதிப்பகங்கள் பங்கேற்கின்றன. இடமில்லாத காரணத்தால், கலந்துகொள்ள இயலாத பதிப்பாளர்களின் புத்தகங்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாசகர்களுக்கு நுழைவுக் கட்டணமோ, வாகன நிறுத்தக் கட்டணமோ கிடையாது. நான்கு சக்கர வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு ஓட்டுனர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 வரை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்கு எதிரே உள்ள ‘பிமேக் எஸ்போ ஹாலில்’ ஜனவரி 18 வரை புத்தக்காட்சி நடக்கிறது. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகளை அரங்கு எண் ‘12ஏ’-ல் வாங்கிக்கொள்ளலாம். எல்லாப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.

கலாப்ரியா, க.பஞ்சாங்கத்துக்கு ‘விளக்கு விருது’

அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24-வது (2019) ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருதுகள் கவிஞர் கலாப்ரியாவுக்கும், பேராசிரியர் க.பஞ்சாங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுகள் ஒவ்வொன்றும் ரூ.1 லட்சம் மதிப்பு கொண்டவை. மதுரை அழகர்கோயில் சாலையிலுள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ஜனவரி 23 அன்று மாலை 5.30 மணியளவில் விருது வழங்கும் விழா நடக்கவிருக்கிறது. கவிதை மொழி, அழகியல், நவீனம் நோக்கிய பலவகையான திறப்புகளைத் தமிழ்க் கவிதைப் போக்கில் ஏற்படுத்திய முதன்மைக் கவியான கலாப்ரியாவுக்கு அவரது கவிதைச் செயல்பாட்டையும் அண்மைக் கால உரைநடைகள், புனைவு முயற்சிகளையும் கௌரவிக்கும் வகையில் இவ்விருது அளிக்கப்படுகிறது. பண்டைய இலக்கிய இலக்கணங்களிலிருந்து சமகாலம் வரையிலான பிரதிகளில் ஆழ்ந்த புலமையைச் சமூகவியல் மற்றும் நவீனக் கலை இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகளில் திறனாய்வு செய்து, தமிழில் தெளிவான திறனாய்வுப் பார்வைகளை உருவாக்கியமைக்காகப் பேராசிரியர் க.பஞ்சாங்கத்துக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதாளர்களுக்கு வாழ்த்துகள்!

பொ.வேல்சாமி தந்த புத்தகப் பரிசு

தமிழ்நாட்டு வரலாறு தொடர்பான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபாடு கொண்டவரும் தமிழறிஞருமான பொ.வேல்சாமி தன்னுடைய புத்தக சேகரிப்பில் இருந்த 3,000-க்கும் மேற்பட்ட நூல்களை ‘தமிழ் இணைய கல்விக் கழக’த்துக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார். அவருடைய சேகரிப்பில் பல அரிய நூல்கள் உள்ளன. அவையெல்லாம் மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்கிற உயரிய நோக்கம் இதற்குப் பின்னால் இருக்கிறது. இந்தச் சேகரிப்புகளெல்லாம் ‘தமிழ் இணையக் கல்விக் கழகம்’வழியாக இனி மின்நூல்களாகப் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x