Published : 16 Jan 2021 07:08 AM
Last Updated : 16 Jan 2021 07:08 AM

உரக்கப் பேசுவோம் 

உரக்கப் பேசு
சுதன்வா தேஷ்பாண்டே
தமிழில்: அ.மங்கை
பாரதி புத்தகாலயம்
தேனாம்பேட்டை, சென்னை-18.
தொடர்புக்கு:
044-24332424
விலை: ரூ.340

கலை சார்ந்த நாடகங்களைப் போலவே அரசியல் நாடகங்களுக்கும் இங்கே தனித்த வரலாறு உண்டு. அரசியல் நாடகங்கள் பெரும்பாலும் வீதி நாடகங்களாகவே இருந்திருக்கின்றன. அதன் முக்கிய நோக்கமாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது இருந்ததுதான் இதற்குக் காரணம். வீதி நாடக வடிவங்களை முன்னெடுத்த இடதுசாரி நாடகக் கலைஞரும் எழுத்தாளருமான சப்தர் ஹஷ்மியின் நெருங்கிய நண்பரான சுதன்வா தேஷ்பாண்டே எழுதிய புத்தகம் இது. சப்தர் ஹஷ்மியின் வாழ்வையும் மரணத்தையும் உடனிருந்து கண்ட சுதன்வா தேஷ்பாண்டே தன்னுடைய நினைவுகளின் மூலமும், நண்பர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும் இந்த நூலை எழுதியிருக்கிறார். நாடகத் துறையில் தொடர்ந்து இயங்கிவரும் அ.மங்கை இந்நூலைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.

ஜனவரி 1, 1989 அன்று தன் நாடக அரங்கின் அருகிலேயே குண்டர்களால் சப்தர் பலமுறை தடியால் அடித்துக் கொல்லப்படுகிறார். மக்கள் சிதறி ஓடுகிறார்கள். சப்தருடன் இன்னும் சிலரும் கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலை எப்படி எதிர்கொள்ளப்படுகிறது, கட்சிகள் எப்படி எதிர்வினையாற்றுகின்றன, சாட்சிகள் என்னவாகின்றன என்பதாக விரிகிறது இந்நூல். சப்தர் கொல்லப்பட்ட கடைசி நாளைப் பற்றி மட்டுமே முதல் எழுபது பக்கங்கள் விவரிக்கின்றன. சப்தரின் மரணத்திலிருந்து தொடங்கும் நூலானது பிற்பகுதியில் அவரின் முழு வாழ்க்கையையும் விவரிக்கிறது. ‘ஜனம்’என்ற அமைப்பை உருவாக்கி அவர் மக்களுக்காக அரங்கேற்றிய நாடகங்கள் என அவர் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிப்பு கொண்டதாகவே இருக்கிறது.

தமிழக அரசியல் வரலாற்றிலும் நாடகங்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. ஆனால், தமிழக வரலாற்றில் நாடகங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்ததில்லை என்ற பின்னணியில் தற்போது தமிழுக்கு மொழிபெயர்ப்பாகியிருக்கும் இந்தப் புத்தகத்தை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். கலை வழியாக மக்களிடம் பேசுபவர்கள் என்றும் உரக்கப் பேசப்பட வேண்டியவர்கள்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x