Published : 16 Jan 2021 07:05 AM
Last Updated : 16 Jan 2021 07:05 AM

இருத்தலின் பதைபதைப்பைச் சொல்லும் கவிதைகள்

அந்த விளக்கின் ஒளி பரவாதது
அகச்சேரன்
புது எழுத்து
காவேரிபட்டிணம் – 635112
தொடர்புக்கு: 98426 47101
விலை: ரூ.50

குறைவாகவே எழுதினாலும் அதில் ஒரு திருப்தி காண்பவர் அகச்சேரன். அவருடைய ‘அன்பின் நடுநரம்பு’ கவிதைத் தொகுப்பு வெளியாகி 7 ஆண்டுகள் கழித்து இந்த நூல் வெளியாகியிருக்கிறது. மொத்தம் 29 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ‘சிறியதே அழகு’ என்பதற்கொப்ப தொகுப்பும் சிறியது, கவிதைகளும் சிறியவை. காலத்துக்கேற்ப கவிதைகளில் பல்வேறு போக்குகள் ஏற்பட்டாலும் சில விஷயங்கள் மட்டும் கவிதைகளுக்கு என்றும் மாறாதவை. அவற்றுள் இருத்தலின் பதைபதைப்பும் ஒன்று. நவீன மனிதனுக்கு ஒவ்வொரு பொழுதின் விடியலும் நம்பிக்கையை அல்ல, அச்சத்தையே கொண்டுவருகிறது. இன்றைய நாள் என்ன துயரத்தைக் கொண்டுவருமோ, எப்படிப்பட்ட அதிர்ச்சிகளைக் கொண்டுவருமோ என்ற அச்சத்துடனே நாளைத் தொடங்க வேண்டியிருக்கிறது. ‘நாளின் துவக்கம் என்னை/ நான்கு எட்டாக மடித்து/ பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறது’ என்ற வரிகளில் இதைத்தான் பார்க்க முடிகிறது. அதுவும் நாள் தனது பிருஷ்ட பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மூச்சடைக்கச் செய்வது போன்ற அனுபவம்தான் கவிஞரைப் போலவே பலருக்கும் ஏற்படுகிறது. இதையேதான் ‘எப்போதும் இல்லாத அளவுக்கு/ வாழ்தலின் பயம் மிகுந்திருப்பதை/ தெருமுகங்களில் காண்கிறேன்’ என்று வேறொரு கவிதை கூறுகிறது.

மறைந்த கவிஞர் வே.பாபுவுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட ‘உனது நினைவுச்சின்னம் – உனது மௌனம் – உனது பிணம்’ இந்தத் தொகுப்பின் சிறந்த கவிதைகளுள் ஒன்று. நவீன வாழ்வில் காவல் துறை, நீதித் துறை, அரசு போன்ற நிறுவனங்கள் எப்படித் தலையிடுகின்றன என்பதைக் கூறுவதுடன் ‘எதிர்காலத்துக்கு மிகச் சமீபத்தில்/ மெய்யாகவே மதுவருந்திக்கொண்டிருக்கும்’ பாபுவைப் பற்றிய அழகான சித்திரத்தையும் இந்தக் கவிதை முன்வைக்கிறது. ஒட்டுமொத்தத் தொகுப்புமே எளிய நடையில் எழுதப்பட்டிருக்கும் வேளையில் ‘காபித் தோட்டத்தினூடே…’ கவிதையில் ‘புறந்தள்ளி எம்பும்/ சிறுகால் உதைப்பில் ஆடும்/ குருவி எனப்படாததின்/ வானுயர்ந்த பொன்னூசல்’ வெளிப்படும் அகச்சந்தம் ஈர்க்கிறது.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x