Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM

இயற்கை வரலாற்றில் செந்தடம் பதித்த ரோமுலஸ்!

‘பாம்பு மனிதன்’ ரோமுலஸ் விட்டேகர் வாழ்க்கைப் பயணம்

ஸை விட்டேகர்

தமிழில்: கமலாலயன்

வானதி பதிப்பகம்

தி.நகர், சென்னை-17.

தொடர்புக்கு: 044-24310769/ 2434 2810

விலை: ரூ.500

உயிரின வகைகளிலேயே பாம்புகளும், பிற ஊர்வன வகை உயிரினங்களும்தான் பொதுவாக மக்களிடம் அச்சத்தையும் விலக்கத்தையும் வெறுப்பையும் அதிகம் பெற்றவை. அதனாலேயே அவை அவர்களது அன்றாட எதார்த்தத்தில் இருந்தாலும் கட்டுக்கதைகளாகவும் புராணிகமாகவும் கடவுளர்களாகவும் இன்னொரு தளத்திலும் புழங்குபவை. புனிதமாகவும் தொன்ம அடையாளமாகவும் இருக்கும் அதே வேளையில் அவை மனிதர்களின் வேட்டைக்கும் வன்முறைக்கும் தொடர்ந்து இலக்காகுபவை. பாம்புகள் மீது படிந்திருக்கும் அச்சத்தையும் அமானுஷத்தையும் தகர்த்து அவையும் நம்மைப் போன்ற உயிர்கள்தான் என்ற எண்ணத்தை உருவாக்கியவரே இந்தியாவின் பாம்பு மனிதன் என்றழைக்கப்படும் ரோமுலஸ் விட்டேகர். ஏராளமான முறை பாம்புக்கடி பட்டு, ஒரு கட்டைவிரலின் செயல்பாட்டையே இழந்த ரோமுலஸ் விட்டேகர், தனது உடலையே நஞ்சு எதிர்ப்பு மண்டலமாகப் படிப்படியாக மாற்றிக்கொண்டவர். உலகிலேயே அதிக பயத்தை அளிக்கும் பாம்புகளின் கண்களைப் பார்த்துப் பழகி அதை அன்றாடம் ஆக்கிக்கொண்டிருக்கும் சுவாரசியமான மனிதரின் கதை இந்தப் புத்தகம் வழியாக நம் முன் விரிகிறது.

தனது நான்கு வயதிலேயே பாம்புகள் மீது ஈடுபாடு கொண்ட அந்த அமெரிக்கச் சிறுவன் ரோமுலஸின் ஆர்வத்தை அவனது அம்மாவும் அத்தையும் தடை சொல்லாமல், அவன் கொத்துக்கொத்தாக வீட்டுக்குப் பாம்புகளைக் கொண்டுவந்து வளர்க்க ஊக்குவித்தனர். பாம்புகள் உள்ளிட்ட பல ஊர்வனவற்றின் மீதான ஈடுபாடு பரந்து வளர்ந்தது. சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள முதலைப் பண்ணை, ராஜ நாகங்களை ஆராயும் ஆகும்பே மழைக்காடுகள் ஆராய்ச்சி மையம், இருளர் கூட்டுறவு அமைப்பு போன்ற முக்கியமான அமைப்புகளை உருவாக்கிய ரோமுலஸ் விட்டேகரின் வாழ்க்கைப் பயணமாக எழுதப்பட்டிருக்கும் இந்நூல், கவித்துவமும் விந்தைகளும் கொண்ட இந்தியாவின் அரிய இயற்கை வரலாற்று ஆவணமாகவும் ஆகியுள்ளது. இதை எழுதியிருப்பவர் இந்தியாவின் புகழ்பெற்ற பறவையியலாளர் சாலிம் அலியின் மருமகளும், இயற்கையிலாளர் ஜாஃபர் ப்யூதேஹல்லியின் மகளும், ரோமுலஸ் விட்டேகரின் முன்னாள் மனைவியுமான இயற்கையியல் எழுத்தாளர் ஸை விட்டேகர்.

ரோமுலஸ் விட்டேகர் தனது எட்டு வயதில், அம்மா டோரிஸ், அவரது இரண்டாவது கணவரான ராமாவுடன் இந்தியாவுக்கு வந்தார். நீலகிரி மலையில் இருந்த லவ்டேல் உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஏற்கெனவே அமெரிக்காவில் பாம்புகளுடன் தோழமையைத் தொடங்கியிருந்த ரோமுலஸுக்கு அவர் பள்ளிக்கு அருகில் இருந்த பசுமை மாறாக் காடுகளின் பாம்புகள், அவர் விட்ட கல்வியைத் தொடர்ந்து போதிக்கும் பணியை ஏற்றுக்கொண்டன. அவருடைய உறைவிடத்தின் படுக்கைக்குக் கீழேயே பாம்புகள், பல்லிகள், பூச்சிகள் தாராளமாக உலாவந்திருக்கின்றன.

சகோதரரின் குண்டாபுரம் பண்ணையில் வேலை பார்த்ததன் மூலம் காடு, காட்டுயிர் சார்ந்த அனுபவ அறிவு வலுப்பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்ற அவர், பல்கலைக்கழக வகுப்புக்குச் செல்லாமல் மீன்பிடிப்பதிலும் சங்கிலிக் கறுப்பன் பாம்புகளை ஆராய்வதிலுமே ஈடுபட்டிருக்கிறார். அப்போதுதான் மியாமியில் உள்ள ஒரு பாம்புப் பண்ணையில் நஞ்சு சேகரிக்கும் முக்கியமான பணியை 1963-ல் ரோமுலஸ் விட்டேகர் ஏற்கிறார். பல வகைகளையும் குணங்களையும் நடத்தைகளையும் கொண்ட பாம்புகளின் உலகத்தைப் படிப்பதற்கும் அறிவதற்கும் கையாள்வதற்கும் அவற்றுடனேயே வாழ்வதற்குமான மிகப் பெரிய பயணச் சீட்டைப் பெற்றுவிட்டார் ரோமுலஸ்.

பின்னர் வியட்நாம் போர்க்காலத்தில் டெக்ஸாஸிலிருந்து ராணுவச் சேவையாற்றியபோது கறுப்பு வால் கிலுக்குப் பாம்பு, மொஜாவே ராட்லெர் போன்றவற்றைப் பிடித்து ஆராய்ந்திருக்கிறார். படைமுகாம்களுக்குள் பாம்புகளைப் பராமரிக்கும் ஆபத்தான காரியங்களைச் செய்திருக்கிறார். வியட்நாம் போரில் ஆற்றிய ராணுவச் சேவையின் காரணமாக தோற்றத்திலும் மனநிலையிலும் ஒரு ஹிப்பியாகி, பம்பாய்க்குத் திரும்பிய ரோமுலஸ் விட்டேகர் கொண்டுவந்த உடைமைகளில் ராட்டில் பாம்புகளும் சில மொக்காசின் பாம்புகளும் அடக்கம். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகான அக்காலகட்டத்தில் இந்தியாவின் நான்கு அபாயகரமான நச்சுப் பாம்புகளான நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் நஞ்சிலிருந்து புற்றுநோய், ரத்த உறைவு சார்ந்து மருந்துகளைத் தயாரிக்கும் முதல்கட்ட ஆராய்ச்சிகள் தொடங்கியிருந்தன. இந்தப் பின்னணியில் தனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் முதலீடாகக் கொண்டு தனது ஆய்வுக்கான தொடர் வாய்ப்பாகவும் வாழ்வாதாரமாகவும் ஆக்கிக்கொள்ள நஞ்சு சேகரிப்பு மையத்தைத் தொடங்கினார். இங்கிருந்து இந்தியாவின் மூலைமுடுக்குகளெங்கும் பாம்புகளையும் முதலைகளையும் தேடும் அவரது பயணத்தைத் தொடங்குகிறார் ரோமுலஸ் விட்டேகர்.

நஞ்சைப் பிரித்தெடுப்பது, விற்பது, பாம்புகள் சேகரிப்பு, பாம்புகள் தொடர்பில் பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் கல்வி, அருகிவரும் ஊர்வன வகைகளைப் பாதுகாத்து அவற்றைப் பெருக்கி மீண்டும் அவற்றின் வாழிடத்திலேயே விடுதல், ஊர்வன உயிர்களைச் சார்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை வைத்திருக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது என ரோமுலஸின் பயணங்களை இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.

சதீஸ் பாஸ்கர், சேகர் தத்தாத்ரி, திராவிட மணி என அடுத்த தலைமுறை ஆர்வலர்களையும் வல்லுனர்களையும் கிண்டி பாம்புப் பண்ணையிலிருந்து ரோமுலஸ் உருவாக்கியுள்ளார். கிண்டி பாம்புப் பண்ணை, முதலைப் பண்ணை வழியாக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வருகைபுரியும் பார்வையாளர்களுக்குப் பாம்புகள் தொடர்பிலான அச்சங்களையும் கட்டுக்கதைகளையும் தீர்க்கும் கல்வியை அளிக்கும் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். இந்தியாவிலும் இலங்கையிலும் பாம்புகள், முதலைகள் தொடர்பான ஆய்வுகள், கணக்கெடுப்புகள், கட்டுரைகள், நூல்கள், சிறுவெளியீடுகள் என இவரது பங்களிப்பு நீண்டது.

ரோமுலஸ் விட்டேகரின் அன்புக்கு அடுத்தபடியாக ஆமைகளும் இலக்காகின்றன. பங்குனி ஆமைகள் (ஆலிவர் ரிட்லி டர்ட்ல்) பராமரிப்பு ஒரு இயக்கமாகவே சென்னையில் இன்று உருவாகி நிலைத்துவிட்டதற்குக் காரணகர்த்தாக்களில் அவரும் ஒருவர். சென்னையைச் சுற்றி பாம்பு உள்ளிட்ட ஊர்வனவற்றைப் பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட இருளர் பழங்குடிகளுடன் தோழமை பூண்டு அவர்கள் வாழ்க்கை மேம்பாடு அடைவதற்காக ஒரு கூட்டுறவு அமைப்பையும் உருவாக்கியிருக்கிறார் ரோமுலஸ். இருளர் மக்களுடன் கொண்ட அவரது பிணைப்பும் ஆத்மார்த்தமும் நடேசனுடன் கொண்ட வாழ்நாள் முழுவதுமான நட்பின் கதையின் மூலம் தெரியவருகிறது.

ஓர் இயற்கை வரலாற்றியல் ஆவணமாக மட்டுமில்லாமல் காட்டுச்சூழலில் அனுபவிக்கும் நிலக்காட்சிகளின் கவித்துவத்தையும், கணம்தோறும் நிகழும் விந்தைகளையும் அதன் ஈர உணர்வு குன்றாமல், ரோமுலஸ் விட்டேகருடன் தான் மேற்கொண்ட பயணங்களை விவரிப்பதன் வழியாக ஸை விட்டேகர் பதிவுசெய்கிறார். பறவையியலாளர்களின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஸை விட்டேகர், காடுகளுக்குள் இருக்கும் பறவைகளைத் தேடி ஆராய்ந்த அனுபவம் கொண்டவர்.

ரோமுலஸ் விட்டேகருடனான காதல் வாழ்க்கையில், காட்டின் உயிர்ச் சங்கிலியைப் பராமரிக்கும் இன்னொரு உயிர் மண்டலத்தின் மீது கவனம்கொள்ள வேண்டி தரையை உற்று உற்றுப் பார்த்து ஆராய வேண்டிய புதிய முறைமைக்குள் அவர் செல்ல வேண்டியிருக்கிறது. ரோமுலஸ் விட்டேகர், ஸை விட்டேகரின் காதல் வாழ்க்கையாக இல்லாமல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் உறவில் பரிமாறிக் கொள்ள வேண்டிய மகத்தான அனுபவத்தின் படிமமாகவும் அந்தக் காட்சி நமக்குத் திகழ்கிறது.

பத்து கோடி ஆண்டுகள் இந்தப் பூமியில் வெற்றிகரமாக வாழ்ந்துவந்த முதலை இனங்களில் பலவும் வாழிட நெருக்கடி, வேட்டை காரணமாக அருகிப்போகும் சூழ்நிலையில் தெற்காசியாவில் பல முதலை இனங்களைப் பாதுகாத்து அவற்றைத் தனது முதலைப் பண்ணையில் வைத்துப் பெருக்கிய சூழலையும் அதுசார்ந்து அவர் சந்தித்த நிதி, நிர்வாகரீதியான நெருக்கடிகளையும் இந்த நூல் சொல்கிறது. 1989-ல் ஆங்கிலத்தில் வெளியான இந்நூல், ப்ரூஸ் பெக் வரைந்த உயிர்த்துவம் கொண்ட சித்திரங்களுடன் கமலாலயன் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது தமிழில் மிக முக்கியமான நிகழ்வு. பெருந்தொற்று காலத்தில் மூடப்பட்டு, பார்வையாளர்கள் வராமல், உணவு, பராமரிப்புக்கு மெட்ராஸ் முதலைப் பண்ணையில் உள்ள முதலைகளும் ஆமைகளும் இன்னபிற உயிர்களும் சிரமத்துக்குள்ளாகியுள்ள நிலையில் இந்தப் புத்தகத்தை வாங்குவதும் வாசிப்பதும் தமிழர் அனைவரின் கடமையுமாகும்!

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x