Published : 13 Jan 2021 09:25 PM
Last Updated : 13 Jan 2021 09:25 PM

‘படைப்பு மொழி நவீனப்படவேண்டும்!’ - எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாளின் கடைசி நேர்காணல் 

கீழ தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரிசல் இலக்கியத்தைப் போல தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய பரப்பளவில் வண்டல் இலக்கியம் எனும் மரபு சார்ந்த வகைமையை நிறுவ வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து எழுதி வந்த இடதுசாரி படைப்பாளி ஆவார். அவரை சமீபத்தில் பத்திரிகையாளர் ஆர்.கே.அருள்செல்வன் சந்தித்து நேர்காணல் செய்துள்ளார். எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது கடைசி நேர்காணலை ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் வெளியிடுகிறோம்.

***
வண்டல் மண் சார்ந்த இலக்கியப் படைப்புகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சோலை சுந்தரபெருமாள். இவரது ‘செந்நெல்’, ‘அகமும் புறமும்’, ‘நஞ்சை மனிதர்கள்’, ‘மருத நிலமும் பட்டாம் பூச்சிகளும்’, ‘ஒரே ஒருஊர்ல’, ‘தப்பாட்டம்’, ‘பெருந்திணை,’ ‘குருமார்கள்’, ‘அடிக்கல்’, ‘மரக்கால்’, ‘கப்பல்காரர் வீடு’, ‘பால்கட்டு’ போன்ற பல படைப்புகளில் வேளாண் குடிமக்களின் மண் சார்ந்த வாழ்வும், போராட்டமும் ஊடாடும் பேசுபொருளாக இருக்கும்.

கீழ்வெண்மணியின் பின்னணியில் இவர் எழுதிய ‘செந்நெல்’ மற்றும் ஞானசம்பந்தரை நினைவூட்டிய் ‘தாண்டவபுரம்’ நூல்கள் இலக்கிய உலகில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியவை. ஊரும், உறவும் புடை சூழ எளிய கிராம வாழ்க்கை வாழும் அவரை அவரது சொந்த மண்ணில் சமீபத்தில் சந்தித்தோம்.

உங்கள் எழுத்தார்வம் வளர்ந்த பின்னணி குறித்துச் சொல்லுங்களேன்?

நான் திருவாரூர் மாவட்டத்தில் அம்மையப்பனுக்கு அருகில் உள்ள காவனூர் என்னும் இந்த ஊரில்தான் பிறந்தேன். இந்த ஊரின் முன்னாள் பெயர் சோலை. வறுமைசூழ் குடும்பப் பின்னணி. அப்பா ஸ்தபதி வேலைக்குச் செல்பவர். சிறு வயதில் நானும் உடன் ஒரு சித்தாள் போல உதவிக்குச் செல்வது உண்டு. பாடசாலை வகுப்புகள் முடிந்த பிறகு ஜவுளிக் கடை, மளிகைக் கடை ஆகியவற்றில் வேலை பார்த்து வந்தேன். அங்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் படித்ததால் படிப்பார்வம் வந்தது. அதுவும் வளர்ந்தது. அது பின்னர் எழுத்தார்வமாக மாறியது. வேலை பார்த்துக் கொண்டே சில இதழ்களுக்கு எழுதி அனுப்பினேன். பிரசுரமாகவில்லை. எனவே நானே என் குறுநாவல்களைச் சிறுசிறு நூல்களாக வெளியிட்டேன். இந்நிலையில் 1987-ம் ஆண்டில் ‘கலைமகள்’ இதழில் குறுநாவல் போட்டிக்கு என்னுடைய ‘மனசு’ என்ற கதையை அனுப்பினேன். அதற்கு முதல் பரிசு கிடைத்தது. பிறகு தாமரைக்கு ‘பொதி’ என்ற குறுநாவல் எழுதினேன். அதைத் தொடர்ந்து நாவல் பக்கம் என் கவனம் சென்றது.

உங்களை எழுதத் தூண்டியவர்கள்..?

நான் எழுத ஆரம்பித்த நாட்களில் திருவாரூரில் ஐந்தாறு எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் வெகுஜன இதழ்களுக்கு எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர்கள். நான் அவர்களை அணுகியபோது, என்னை எழுத்தாளராக மட்டுமல்ல ஒரு வாசகனாகக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போதெல்லாம் தஞ்சை மண்ணின் எழுத்தாளர்கள் என்று அறியப்பட்ட தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, க.நா.சு, கு.ப.ரா போன்ற பலரையும் அவர்கள் கொண்டாடினார்கள். அவர்களைத் திருவாரூர் எழுத்தாளர்கள் உயர்த்திப் பிடித்தார்கள். எனக்கு இதில் முரண்பாடு ஏற்பட்டது.

தி. ஜா. போன்றவர்கள் படைப்புகளை எல்லாம் தேடித்தேடி வாசித்தேன். அவர்களின் எழுத்து தஞ்சை மண் சார்ந்த மக்களின் வாழ்வியலைக் கூறவில்லை. ஒரு சிறுபான்மை சமூகம் சார்ந்தவற்றையே பேசின. இப்படி இருக்க, அவர்களை எப்படி தஞ்சை மண் எழுத்தாளர்கள் என்று கூறுவது என்று நான் கடுமையாக விமர்சித்தேன்.

தஞ்சை மண்ணின் தொல்குடிகள் போல் இருக்கும் வேளாண் குடிகளையும் அவர் தம் வாழ்க்கையையும் அவர்கள் தொடவே இல்லை என்று வாதிட்டேன். தஞ்சை எழுத்தாளர்கள் தொடாது தவிர்த்த மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்வது என்று நான் முடிவு செய்தேன். அத்துடன் இதுதான் நம் பயணம் என்று தீர்மானித்தேன்.

என்னுடைய முதல் நாவல் ‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ 90-களில் வந்த சிறந்த நாவல்களில் இதையும், ஜெயமோகனின் ‘ரப்பர்’ என்ற நாவலையும் தி.க.சி முன்மொழிந்தார். அதன் பிறகு நிறைய எழுதினேன். அனைத்திலும் வேளாண் குடிகளின் வாழ்வியல் பேசும் கூறுகளே இருக்கும்.

கீழவெண்மணி பின்னணியில் நீங்கள் எழுதிய ‘செந்நெல்’ இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’ என்ற நாவலுக்கான பதிலா?

ஆமாம் என்றே கூறலாம். அவரது நாவல் அந்த மண்ணின் மக்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசவே இல்லை. அது கூலிப் பிரச்சினையைச் சார்ந்த விவசாயிகள் போராட்டம் என்று அதன் அடிப்படை தெரியாமல் எழுதப்பட்டு இருந்தது. வேண்டுமென்றே சாதிப் பிரச்சினை போல் கொச்சைப்படுத்தப்பட்டு இருந்தது. அதில் மக்களின் வலி பதியப்படவில்லை. அங்கதம் இருந்தது.

நான் அந்தச் சம்பவத்தில் இறந்த 44 பேரின் உடல்களை நேரில் பார்த்தவன். எனக்கு அது உறுத்தலாகவே இருந்தது. அந்த 1967-ன் அரைப்படி நெல் கூலி உயர்வுக்கான வர்க்கப் போராட்டத்தை பதிவு செய்ய நினைத்தேன். அதையும் 30 ஆண்டுகள் கழித்து எழுதினேன். நான் முடிந்தவரை உண்மையை எழுத முயன்றேன். அவரைப் போல் கற்பனையைக் கலக்கவில்லை. நான் எழுதிய எழுத்தில் கீழவெண்மணி படுகொலையில் சம்பந்தப்பட்ட கோபாலகிருஷ்ண நாயுடுவின் பெயரை அப்படியே வைத்தேன். பெயரை எல்லாம் மாற்றவே இல்லை.

பிறகு நீங்கள் எழுதிய ‘தப்பாட்டம்’ நாவல் நீங்கள் சார்ந்திருக்கும் பொதுவுடைமைக் கொள்கை சார்ந்தவர்களால்கூட விமர்சிக்கப்பட்டதே?

இரண்டு நாவல்களுக்கும் கால இடைவெளி இருந்ததால் அப்படிஎழுதியிருக்கக்கூடும். வரலாற்று ரீதியாக 50 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. ‘செந்நெல்’ கூலி உயர்வு கேட்ட வர்க்கப் போராட்டம் பற்றிப் பேசியது. ‘தப்பாட்டம்’ முதலாளித்துவமும், நிலப்பிரபுத்துவமும் ஒன்றான சூழலில் சாதியக் கூறுகளை இடதுசாரிகள் எப்படி அணுகினர் என்பதைக் கூறியது. எனக்குப் பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் சந்தேகம் இல்லை. அதை உறுதியான மார்க்கமாக நம்புபவன். அதையே குறை கூறவோ, ஊனப்படுத்தவோ விரும்புவேனா? அப்படி ஒருபோதும் எண்ண மாட்டேன். என் ‘தப்பாட்டம்’ குறித்து தப்பாக எண்ணியவர்கள் பிறகு தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டனர்.

உங்களது ‘தாண்டவபுரம்’ நாவலும் பெரிதும் சர்ச்சைக்குள்ளானதே?

அதை மிகவும் சிரமப்பட்டு எழுதினேன். 700 பக்கங்கள். அதில் இடம்பெறும் ஆளுடையப்பிள்ளை பாத்திரம் ஞானசம்பந்தரைப் பிரதிபலிப்பதாக நம்பினார்கள். நம்புவதும் நம்பாததும் அவர்களின் பார்வை. நான் அப்படிக் கருதவில்லை. கருதினாலும் அந்த உரிமை எனக்குக் கிடையாது என்று கூறமுடியாது. நான் எழுதியது கற்பனைதான். ஆனால், அவர்கள் அதை வரலாற்று நூல் போல் எடுத்துக்கொண்டு செயல்பட்டார்கள். ஏகப்பட்ட சர்ச்சைகள், விவாதங்கள், மிரட்டல்கள், அவதூறுகள் செய்தார்கள். என் மீது வழக்குகள் தொடுத்தார்கள். மிகவும் சோர்வடையச் செய்தார்கள்.

ஒரு படைப்பாளியாக இருந்துகொண்டு ‘தஞ்சை எழுத்தாளர்கள்’ என்கிற தொகுப்பு முயற்சியில் இறங்கியது ஏன்?

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் அதுவரை தஞ்சை மக்கள் இலக்கியம் என்று நம்பப்பட்டு வந்தவை எதுவும் வேளாண்குடி மக்கள் வாழ்க்கையைப் பேசவில்லை என்று எனக்குத் தெரியும். தேடித்தேடி படித்தபோது எனக்கு இது புரிந்தது. இந்த உண்மையை ஊருக்கு உணர்த்தவே படித்ததுடன் விடாமல் அதை என் குற்றச்சாட்டுக்கான சாட்சி ஆவணமாகத் தொகுத்தேன். தஞ்சையின் வண்டல்மண் மக்கள்தான் 90 சதவீதம் உள்ளவர்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு இலக்கியம் படைக்க முடியுமா? அது இலக்கியமா என்பது என் கேள்வி. அதற்குச் சாட்சியாக தொகுத்த தொகுப்புதான் அது எனலாம்.

உங்கள் மனப்போக்கு பொதுவுடைமை சார்ந்துள்ளது. அப்படிப்பட்ட நீங்கள் எழுதுவதில் கொள்கைப் பிரச்சாரம் நுழைந்துவிடாதா?

இலக்கியத்துக்கு நோக்கம் வேண்டும். ஒரு சித்தாந்தம் தேவை. வெற்றுப் பொழுதுபோக்கு நோக்கம் படைப்பிலக்கியத்துக்கு எந்நாளும் பெருமையல்ல. இம்மண்ணின் மக்களின் வாழ்க்கையில் வாழ்வியலில் பொதுவுடைமை இயக்கங்களும், கொள்கைகளும் பிணைந்து இருப்பதை மறுக்கமுடியாது. அவை வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பையும் தாக்கத்தையும் எழுதுவதை என்னால் தவிர்க்க முடியாது.

உங்களது படைப்புகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டபோது ‘கொச்சையான மொழி’ என்று விமர்சிக்கப்பட்டதே?

பேச்சுமொழி என்பது கொச்சையான மொழியா? மக்கள் பேசும் இயல்பான மொழியை இழிவாகக் கருதுவது எப்படிச் சரியாகும்? இவ்வளவு காலம் மொழியைத் தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றி உயிர்ப்பித்து வைத்துள்ளவர்கள் எளிய மக்களே. மெத்தப் படித்தவர்கள் அல்ல என்பது என்னுடைய கருத்து. எனவே பேச்சுமொழி பற்றிய தவறான புரிதல் பற்றி எனக்குக் கவலையில்லை.

இப்போதுள்ள புதிய படைப்புகள் மற்றும் படைப்பாளிகள் குறித்து?

நிறைய எழுதுகிறார்கள். ஏராளமான நூல்கள் வருகின்றன. ஆனாலும் செறிவும், மொழியும், கற்பனை ஆற்றலும், சிந்தனைக் களமும் வியக்கத்தக்க அளவில் வளரவில்லை என்றே கூற வேண்டும். மற்ற மொழிகளில் மலையாளம், கன்னடம் அளவுக்குத் தமிழில் புதிய விசையுடன் படைப்புகள் பெரிதாக வெளிவருவதில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மொழியின் நடையில் ,போக்கில் நவீன முயற்சிகள் மிகவும் குறைவாகவே நடைபெறுகின்றன. நம் படைப்பு மொழியின் நடை நவீனப்பட்டு மேம்பட வேண்டும்.

- அருள்செல்வன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x