Published : 09 Jan 2021 07:22 AM
Last Updated : 09 Jan 2021 07:22 AM

நீதித் துறையை நோக்கிசில நேரிய விமர்சனங்கள்

நீதி: ஒரு மேயாத மான்
கே.சந்துரு
போதிவனம் வெளியீடு
ராயப்பேட்டை,
சென்னை- 14.
விலை: ரூ.200
தொடர்புக்கு: 98414 50437

சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட இதழ்களில் எழுதிய 37 கட்டுரைகளின் தொகுப்பு. தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளுடன் இயற்றப்படுகிற பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள், ஊடகச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்கள், காவல் துறை நிகழ்த்தும் போலித் தற்காப்புக் கொலைகள், மதச்சார்பின்மைக் கோட்பாடு எதிர்கொள்ளும் சவால்கள், வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ராணுவச் சட்டங்கள், வெளிப்படைத் தன்மையற்ற நீதிபதி நியமனங்கள் என இந்திய அரசமைப்பின் அடிப்படைகள் சந்தித்துவரும் சிக்கல்களை மையமிட்டே இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலரான நீதித் துறை தன் பணியைச் செய்வதில் வெளிப்படுத்தும் தடுமாற்றங்களையும் அக்கறையோடு சுட்டிக்காட்டுகின்றன.

சட்டமியற்றும் அவைகளையும், இயற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிர்வாகத் துறையையும் கண்காணிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அதிகாரமும் நீதித் துறையின் கைகளிலேயே ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. நீதித் துறையைக் கண்காணிக்கும் அதிகாரத்தை அது தனக்குத் தானே ஏற்றுக்கொண்டுள்ளது. நீதித் துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை, சட்டமியற்றும் அவைகளுக்கோ நிர்வாகத்துக்கோ அவ்வளவு எளிதில் அளித்துவிடவும் கூடாது. எனில், நீதித் துறையில் நிகழும் பிழைகளை யார்தான் சுட்டிக்காட்டுவது? குடிமக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் நீதித் துறை நேரிய விமர்சனங்களை அனுமதித்தாலுமேகூட அதைச் செய்ய முன்வருவது யார்?

வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களின் நலன் கருதி வாய்மூடி மௌனித்திருக்கிறார்கள் என்றால், சட்டத் துறைப் பேராசிரியர்கள் தாங்கள் ஆராய்ச்சியாளர்கள் என்பதைக் காட்டிலும், அரசு ஊழியர்கள் என்பதற்கே அதிக விசுவாசமாக இருக்கிறார்கள். விளைவாக, இவ்விரு தரப்பினரும் சட்ட நிபுணர்கள் என்ற வகையில், சட்டப் பிரிவுகளின் நுட்பங்களையும் அது தொடர்பான வழக்கு விவரங்களையும் விவாதிப்பதோடு மட்டுமே நின்றுகொள்கிறார்கள். மிகவும் அரிதானவர்களாக இருக்கும் சட்டநெறியாளர்களும்கூடத் தங்களது கருத்துகளை நேரடியாகச் சொல்லாமல், பிரிட்டிஷ் சட்ட நெறியாளர்களின் மேற்கோள்களின் வழியே குறிப்புணர்த்த மட்டுமே செய்கிறார்கள். இப்படியொரு நிலையில்தான், நீதித் துறைக்குள் ஒரு சுயவிமர்சனக் குரலாக சந்துரு தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கிறார். அவர் விருப்பத்துடன் தமிழில் எழுதுகிறார் என்றாலும், அவர் முன்வைக்கும் கருத்துகள் தமிழகத்துக்கு வெளியே தேசிய அளவிலும் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டியவை.

வழக்கறிஞராகத் தொழில்புரிந்த காலத்தில் மனித உரிமைச் செயல்பாட்டாளராகவும் இயங்கியவர் என்பதால் சட்டங்கள், தீர்ப்புகள் மட்டுமின்றி விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள், அரசாணைகள், சர்வதேச உடன்படிக்கைகள் என்று தொடர்புடைய பல தகவல்களும் சந்துருவின் கட்டுரைகளில் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன. சட்டரீதியான விவாதங்களை மேற்கொள்ளும்போது, அதன் வரலாற்றுப் பின்புலத்தை விளக்குவதையும் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். நெருக்கடிநிலைக் காலம் உள்ளிட்டு இன்றைய தமிழக அரசியலில் மறந்துபோன பல வரலாற்றுப் பக்கங்களை அவரது கட்டுரைகள் ஆதாரங்களுடன் நினைவூட்டுகின்றன. நடப்பு அரசியல் சூழல்களைக் குறித்த சில கட்டுரைகளில் மத்தியில் ஆளும் கட்சியின் கருத்தியலுக்கு நேரெதிர் நிலைப்பாடு கொண்டவராகவும் அவர் பேசுகிறார்.

மஹாராஷ்டிர அரசியலின் காட்சி மாற்றங்கள், ஆந்திரத்தில் ஆளுங்கட்சிக்கும் நீதித் துறைக்கும் இடையிலான பிணக்குகள், கரோனா காலத்தின் பாதிப்புகளிலிருந்து உழைக்கும் மக்களைப் பாதுகாக்கத் தவறிய சட்ட அமைப்புகளின் படுதோல்வி, அறிக்கைகளையும் வலைப் பதிவுகளையும் நீதிமன்ற அவதூறாகக் கொள்வது என நம்மைக் கடந்துபோன கடைசி இரண்டு ஆண்டுகளின் முக்கிய நிகழ்வுகளைத் தனது கட்டுரைகளில் விவாதித்திருக்கிறார் சந்துரு. அவரது விமர்சனங்களுக்கு ஊடகங்களும் தப்பவில்லை. என்றாலும், அவரது விவாதங்களின் பிரதான புள்ளி நீதித் துறையைப் பற்றியதாகவே இருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் சட்டமியற்றும் அவைகளிலோ நிர்வாகப் பொறுப்புகளிலோ அமர்வதற்குச் சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை என்றாலும், அது சரியான நெறிமுறையாகுமா என்று அவர் கேள்வி கேட்கிறார். தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியை விடவும் கொடுமையானது என்று உதாரணங்களைக் காட்டுகிறார். இடஒதுக்கீடு குறித்த நீதித் துறையின் ஒவ்வாமையைப் பட்டியலிடுகிறார்.

நிறைவாக, சந்துருவின் கட்டுரைகளைப் படித்து முடிக்கிறபோது இன்னொரு கேள்வியும் மனதில் எழுகிறது. அரசமைப்பின்படியும் அதைத் தாண்டியும் தமது சுதந்திரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலும் நீதித் துறைக்குள் பாராட்டத்தக்க வகையில் நன்னம்பிக்கைக்கான அறிகுறிகள் ஏதேனும் தோன்றவே இல்லையா? இந்தக் கட்டுரைத் தொகுப்பில் வி.ஆர்.கிருஷ்ணய்யர், கேஹார், சின்னப்ப ரெட்டி என்று முன்னாள் நீதிபதிகள் சிலரின் மேற்கோள்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவற்றின் அளவு மிகவும் குறைவு. சட்டத்தின்படி நடப்பதுதானே நீதித் துறையின் பணி, அதில் பாராட்டுவதற்கு என்ன இருக்கிறது என்று ஒரு விமர்சகரால் நகர்ந்துவிட முடியுமா? இடித்தும் பழித்தும் உரைக்கும் விமர்சகர் தான் காணும் நன்மைகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதற்குக் கடமைப்பட்டவர் அல்லவா? வழிகாட்டும் சிறந்த தீர்ப்புகளை கே.சந்துரு போன்ற முன்னாள் நீதிபதிகள் அடையாளம் காட்டவில்லை என்றால், செய்திகளை ஆக்கிரமிப்பவர்கள்தானே நீதித் துறையின் முகமாகிப்போவார்கள்?

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x