Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM

பதிப்பு வரலாற்றில் ஓர் அரிய செம்பதிப்பு

இ.சுந்தரமூர்த்தி

தென்னிந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் உச்சத்தில் இருந்தபோது புதுச்சேரியை நிர்வகித்த நான்கு கவர்னர்களிடம் துபாஷியாக இருந்தவர் ஆனந்த ரங்கப்பிள்ளை. 1736 செப்டம்பர் 6-ல் தன் கைப்பட செய்திக் குறிப்புகளை எழுதத் தொடங்கியவர், 1761 ஜனவரி 12 அவரின் கடைசி நாள் வரை 25 ஆண்டுக் காலம் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதிவந்திருக்கிறார். ரங்கப்பிள்ளை தான் எழுதிய நாட்குறிப்புகளுக்கு ‘தினப்படிச் சேதிக் குறிப்பு’, ‘சொஸ்த லிகிதம்’ என்று பெயரிட்டார். அந்நாட்குறிப்புகள் இன்று வரலாற்று ஆவணங்களாக மாறிவிட்டன. ஆனந்த ரங்கப்பிள்ளை தன் காலத்தில் வாழ்ந்த பிரெஞ்சு, ஆங்கிலேய அலுவலர்களின் இந்திய வாழ்க்கையை எழுதி வைத்துள்ளார். காலனிய ஆட்சியின் உண்மையான நிலையை நேர்மையாகவும் பதிவிட்டுள்ளார். இந்திய மன்னர்கள், குடியானவர்கள், கைவினைஞர்கள் ஆகியோரைக் கூர்ந்து கவனித்துக் குறித்துள்ளார். காலனி ஆதிக்க அரசின் உருவாக்கத்தையும் மொகலாய அரசின் வீழ்ச்சியையும் பதிவுசெய்துள்ளார்.

ஆனந்த ரங்கரின் நாட்குறிப்புகள் வரலாற்றுக் கருவூலமாகவும், இலக்கியப் பெட்டகமாகவும், பண்பாட்டுப் பேழையாகவும் திகழ்கின்றன. யோகி சுத்தானந்த பாரதியார், ‘ஊரினைக் காத்த உத்தமர், தமிழ்ப் பெரியார், புதுவை தந்த புதையல்’ என்றெல்லாம் ரங்கப்பிள்ளையைப் போற்றுகின்றார். முந்நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அவருடைய தமிழ் உரைநடையை இன்றைய தலைமுறையினர் எளிதில் படிப்பதற்குரிய முறையில் பதிப்பிக்க வேண்டிய தேவை உள்ளது. தமிழ் உரைநடைக்கும் வரலாற்றுக்கும் அரிய கொடையான இந்தச் சேதிக் குறிப்புகளை மு.ராஜேந்திரன், அ.வெண்ணிலா உள்ளிட்ட பதிப்புக் குழு 12 தொகுதிகளில் பதிப்பித்துள்ளனர்.

தமிழ் நூல்களின் பதிப்பு வரலாறு இருநூறு ஆண்டு காலப் பழமையுடையது. தமிழ் இலக்கிய நூல்களுள் முதன்முதலில் அச்சானது திருக்குறளாகும். கி.பி.1812-ல் அம்பலவாணத் தம்பிரானும், ஞானப்பிரகாசரும் திருக்குறள் நூலை ‘மாசத தினச்சரிதை’ அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிட்டனர். இந்நூலின் பிற்பகுதியில் நாலடியாரும் அச்சிடப் பெற்றுள்ளது. மூலம் மட்டும் அச்சான இந்நூலின் முன்பகுதியில் ‘வரலாறு’ என்னும் தலைப்பில் பதிப்பியல் நெறி குறித்த சில கருத்துகள் குறிக்கப்பெற்றுள்ளன.

ஒரு நூலைப் பதிப்பிப்பதற்குக் குழு முயற்சி இன்றியமையாதது என்றும், அவை குறித்து அறிஞர் பலரிடத்தும் கருத்துகள் கேட்டும் முடிவுசெய்ய வேண்டுமென்றும் அந்த ஏட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. ‘இவை அச்சிற் பதிக்கும் முன் தென்னாட்டில் பரம்பரை ஆதீனங்களில் வித்துவ செனங்களிடத்திலுமுள்ள சுத்த பாடங்கள் பலவற்றிற்கும் இணங்கப் பிழையற இலக்கண இலக்கிய ஆராய்ச்சி உடையவர்களால் ஆராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டன’ எனும் குறிப்பிலிருந்து குழு முயற்சியால்தான் திருத்தமான செம்பதிப்பை உருவாக்க முடியும் என்பது புலனாகும்.

‘ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு’ என்னும் இப்பதிப்பை உருவாக்கப் பதிப்பாசிரியர்கள் மேற்கொண்ட பதிப்பு முயற்சி பாராட்டத்தக்கது. இந்தப் பதிப்புப் பணிக்காகப் புதுச்சேரியில் இருப்பவர்களே பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்பதால், புதுவையில் இருக்கும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ரங்கப்பிள்ளையின் தினசரியில் தேர்ச்சியுள்ள வரலாற்று ஆர்வலர்களைத் தங்கள் பதிப்புக்கு உறுதுணையாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஜே.எப்.ரைஸ், ரங்காச்சாரி, ஹென்றி டாட்வெல் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும், தமிழில் புதுச்சேரி அரசு வெளியிட்ட தொகுதிகளும் இந்தச் செம்பதிப்புக்கு அடிப்படை நூல்களாகப் பயன்பட்டுள்ளன. 5,190 பக்கம் கொண்ட பன்னிரு தொகுதிகளையும் ஒப்பிட்டுச் சரிபார்த்துப் பதிப்பித்துள்ள பதிப்பாசிரியர்களின் உழைப்பு பாராட்டத்தக்கது.

நாட்குறிப்பில் ரங்கப்பிள்ளையின் பன்மொழிப் புலமையால் பன்மொழிச் சொற்கள் பலவும் கலந்துள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்து, நூலின் இறுதியில் தந்திருப்பது பதிப்பாசிரியர்கள் இருவரின் கடுமையான உழைப்பைக் காட்டுகிறது.

ஆனந்த ரங்கரின் நாட்குறிப்புகளில் ஒரு சொல் பலவாறாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, அவரது ஆரம்பக் காலப் பதிவுகளில் ‘மதிப்பிற்குரிய’, ’திரு’ என்பதைக் குறிக்கும் பிரெஞ்சு சொல்லான ‘மான்சியர்’ என்பதைச் சில இடங்களில் ‘முசியே’ என்றும், சில இடங்களில் ‘முசே’ என்றும், சில இடங்களில் ‘சீனியோர்’ என்றும் எழுதுகிறார். பேச்சு வழக்குக்கும் எழுத்துக்குமுள்ள வேறுபாடுகள், படியெடுத்தவர்கள் செய்த முன்பின்னான சேர்க்கைகள் என இவையெல்லாமே சொற்களின் வேறுபட்ட உச்சரிப்புக்குக் காரணமாக இருந்திருக்கலாம். பிரிட்டிஷ்காரர்களை இங்கிலீசுக்காரர்கள் என்றும், இங்கிரேசுக்காரர்கள் என்றும் எழுதுகிறார். செய்தி கொண்டு செல்வோர்கள் அறக்காரர், சேதியாளர், காசீதுகள், சுவார், ஒட்டகச் சுவார் என்று செய்திகள் கொண்டுவரும் வழிமுறைகளோடு சேர்த்துப் பலமொழிச் சொற்களின் பயன்பாட்டாலும் பல பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கின்றனர். ஒட்டகம் மீது வரும் செய்தியாளர் ஒட்டகச் சுவார், குதிரை மீது வந்தால் குதிரைச் சுவார். ஆட்சியாளர்களை கவர்னர், குவர்ணதோர், பிரபு, துரை என்று அழைப்பர்.

பதிப்பாசிரியர்கள் இந்தச் சொற்களின் பயன்பாட்டு வேறுபாட்டைக் கண்டு, உணர்ந்து, பிறை அடைவுகளில் விளக்கம் தருவதும் படிப்போர்க்குத் துணையாய் அமையும். நாட்குறிப்பில் வரும் சில சொற்களுக்குப் பொருள் தெரியவில்லை எனில், கேள்விக்குறியைப் பிறை அடைவில் குறிப்பிட்டிருப்பதும் பாராட்டத்தக்கது. ஒவ்வொரு தொகுதியின் முக்கியச் செய்திகளைத் தொகுத்து, ‘நாட்குறிப்பின் சாரம்’ என்னும் தலைப்பில் தருவதும், பெயர்ச் சொல்லடைவு ஒன்றைத் தொகுத்துத் தந்திருப்பதும் வாசகர்களுக்குப் பெரிதும் துணையாய் அமையும். நாட்குறிப்பின் செய்திகளை எளிமையாகப் புரிந்துகொள்வதற்குப் பின்னிணைப்பில் அரிய தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கின்றனர் பதிப்பாசிரியர்கள். ஆய்வுசெய்வோருக்கு இந்தப் பின்னிணைப்புகள் உதவும்.

மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய இவ்வரிய நாட்குறிப்பை அறிந்துகொள்வதற்குப் பல்துறைப் புலமை இன்றியமையாதது. பழஞ்சொற்களின் பொருளை உணர்ந்துள்ள வரலாற்று அறிவும், பண்பாட்டுப் புலமையும், பன்மொழிப் புலமையும், சமூகப் பின்னணியும், அக்கால மொழிநடை அறிவும் இன்றியமையாதவை. எல்லாவற்றுக்கும் மேலாக, பதிப்பாசிரியருக்குப் புலமையும் பொறுமையும் ஆழ்ந்த ஈடுபாடும் மிகவும் இன்றியமையாதவை. சிறந்த பதிப்பு நெறிகளை மேற்கொண்டு இச்செம்பதிப்பை உருவாக்கியுள்ளனர். பன்னிரு தொகுதிகளையும் அழகிய முறையில் பதிப்பித்திருக்கும் மு.முருகேஷுக்கு நம் பாராட்டு உரியது.

- இ.சுந்தரமூர்த்தி, முன்னாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தொடர்புக்கு: esukural2014@gmail.com

***********************

ஜனவரி 12: ஆனந்த ரங்கப்பிள்ளையின் 260-வது நினைவுநாள்

***************************

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு

பதிப்பாசிரியர்கள்: மு.ராஜேந்திரன், அ.வெண்ணிலா

அகநி வெளியீடு

3, பாடசாலைத் தெரு, அம்மையப்பட்டு,

வந்தவாசி – 604408.

தொடர்புக்கு: 98426 37637

விலை: ரூ.8,400 (12 தொகுதிகள் சேர்த்து)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x