

ரஷ்ய இலக்கியம் படித்திருக்கும் எழுத்தாளர் ஈவ்லின் ஸ்கையின் நாவல் த கிரௌன்’ஸ் கேம். ரஷ்யப் பேரரசு பற்றிய சம்பவங்களைச் சித்தரிக்கும் இந்த நாவல் வளரிளம் பருவத்தினருக்காக எழுதப்பட்டிருக்கிறது. வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஃபேண்டஸி வகை நாவல் இது. 416 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் அடுத்த ஆண்டு மே மாதம் 17 அன்றுதான் விற்பனைக்கு வரயிருக்கிறது. இதன் முகப்பு அட்டைப்படம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிடுவது போல் உற்சாகமாக இந்த நாவலின் அட்டைப் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஹாப்பர் டீன் பதிப்பகம் இந்த நாவலை வெளியிடுகிறது.
கவிஞர் வரைந்த ரயில்வே லோகோ
மும்பையில் உருவாக்கப்பட்டு வரும் பாதாள ரயில்பாதைக் கட்டுமானத்திட்டம் 1960-களி லேயே, பொறியாளர் பிஜி பதாங்கரால் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டநிரல் புத்தகத்தின் அட்டைப்படத்தை வடிவமைத்தவர் மராத்திய, ஆங்கிலக் கவிஞர் அருண் கோலாட்கர். இந்தத் திட்டநிரலின் பிரதியைப் பாதுகாத்து வைத்திருந்தவர் பொறியாளர் பிஜி பதாங்கரின் உறவினர் குப்தே. அருண் கோலாட்கர் வரைந்த அட்டை ஓவியத்தையே தற்போது மும்பை பாதாள ரயில்வே பிரிவின் ‘லோகோ’-வாக மாற்றியுள்ளனர். மும்பை விளம்பர உலகில் அருள் கோலாட்கர் வெற்றிகரமான வரைகலை வடிவமைப்பாளராக இருந்திருக்கிறார்.
ஓரான் பாமுக்கை மறுக்கும் கதாபாத்திரங்கள்
ஓரான் பாமுக்கின் புதிய நாவல் ‘எ ஸ்டிரேஞ்னஸ் இன் மை மைண்டு’ சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக எழுதிவந்த நாவல் இது. இஸ்தான்புல்லில் போஸா என்ற பானத்தை விற்கும் மெவ்லுக் என்பவனின் காதல்/ திருமண வாழ்க்கைதான் கதை. காதலையும் திருமணத்தையும் பிரிக்கும் விசித்திரக் கோடாக ஒரு நிகழ்வு நாவலின் தொடக்கத்திலேயே இடம்பெற்றிருக்கிறது. அங்கிருந்து விரியும் நாவல் மெவ்லுக்கின் அன்றாட வாழ்க்கை, நினைவுகள் ஊடாகப் பயணிக்கிறது. இதனிடையே இஸ்தான்புல்லும் துருக்கியின் அரசியலும் இழையோடுகிறது. பெரும்பாலும் நாவலின் வடிவத்தில் புதுமையை மேற்கொள்ளும் பாமுக் இதிலும் ஒரு புதுமையான வடிவத்தைப் பின்பற்றியிருக்கிறார். ஓரான் பாமுக், ஒரு கதாபாத்திரம் பற்றி எழுதிக் கொண்டே போகும்போது, அந்தக் கதாபாத்திரமே எழுத்தாளனின் கூற்றை மறுத்து உண்மையில் இதுதான் நடந்தது என்று கூறுகிறது.