புத்தக இரவில் மலர்ந்த புத்தாண்டு
புத்தக இரவில் மலர்ந்த புத்தாண்டு
நள்ளிரவு வரை புத்தகக் கடைகளைத் திறந்துவைப்பதற்குக் கெடுபிடிகள் இருந்தாலும் அரசின் கட்டுப்பாடுகளை மீறாமல் புத்தாண்டைக் கொண்டாடி முடித்திருக்கிறது அறிவுத் துறை. புத்தாண்டு தினத்தைப் புத்தகங்களோடு கொண்டாடும் ‘புத்தகங்களோடு சொல்வோம் புத்தாண்டு வாழ்த்து’ இயக்கம் இந்த ஆண்டு எளிமையான அளவில் நடந்தது. இன்னொரு புறம் சமூக வலைதளங்களில், ‘2020-ல் படித்த புத்தகங்கள், பிடித்த/பிடிக்காத புத்தகங்கள், புத்தகப் பரிந்துரைகள்’ எனப் பட்டியலிட்டுப் பகிர்ந்து மகிழ்ந்தனர் வாசகர்கள். புத்தக இரவுக் கொண்டாட்டங்களில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், புத்தகக் கடைகளுக்கு வாசகர்கள் தங்கள் குடும்பத்தோடு வருகைபுரிவது. குறிப்பாக, குழந்தைகளுக்கு அறிவின் வாசத்தைக் காட்டிவிடும் உற்சாகத்தில் பெற்றோர்கள் வலம்வருவதைப் பார்ப்பது உண்மையில் அலாதியான அனுபவம் என்கிறார்கள் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும்.
குழந்தைகள், பெண்கள், இளைஞர்களோடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற்றார்கள். தமிழின் முன்னணிப் பதிப்பகங்கள் பலவும் 10% முதல் 50% வரையிலான தள்ளுபடி விற்பனையை இதையொட்டி அறிவித்திருந்தன. இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. புத்தகங்கள் வாங்கிய இளம் வாசகர்கள் பலரும் புத்தாண்டு தினத்தில் வாசிக்கத் தொடங்கிய புதிய புத்தகங்களின் அட்டைப்படங்களை சமூக வலைதளங்களில் உற்சாகத்தோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவருவதைப் பார்க்க முடிகிறது. உண்மையில், இது நல்ல அறிகுறி.
பிரமிள் நூலகம்
கவிஞர் பிரமிளின் 25-வது நினைவு நாளான ஜனவரி 6 அன்று திருநெல்வேலியிலுள்ள திருமால் நகரில் பிரமிள் பெயரில் ஒரு நூலகம் திறக்கப்படவுள்ளது. காலை 10 மணியளவில் திறப்பு விழா நடக்கிறது. பிரமிளின் உற்ற நண்பர் கால சுப்பிரமணியம் திறந்து வைக்கிறார். “பிரமிளைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடாவிட்டாலும், குறைந்தபட்சம் மறக்காமலாவது இருக்க வேண்டும். வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தத்தைத் தன் படைப்புகள் வழியாக நமக்கு நுட்பமாக உணர்த்தும் பிரமிளின் பெயரில் நூலகம் தொடங்குவதில் மகிழ்ச்சி” என்கிறார் மயன் ரமேஷ் ராஜா. இந்த நூலகத்துக்குப் புத்தகங்களை அன்பளிக்க விரும்புபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்: 99429 77800
வாசிப்புச் சவாலுக்குத் தயாரா?
புத்தாண்டை முன்னிட்டு வாசிப்புச் சவாலுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறது ‘பாரதி புத்தகாலயம்’. வாசிப்புச் சவாலுக்கான விதிமுறைகளுக்கு ‘புக்டே’ ஃபேஸ்புக் குழுவைப் பார்க்கவும் (https://www.facebook.com/groups/838599272913969/).
பங்கேற்கும் எல்லோருக்குமே புத்தகப் பரிசு உண்டு.
தொடர்புக்கு: 87780 73949
எழுத்துக் குடும்பம்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பா.ஜம்புலிங்கத்தின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் புத்தகம் வெளியிட்டு அசத்தியிருக்கிறார்கள். பா.ஜம்புலிங்கம் (‘விக்கிப்பீடியா 1000: பதிவு அனுபவங்கள்’), அவருடைய மனைவி பாக்கியவதி (‘அப்பாவுக்காக’), மூத்த மகன் ஜ.பாரத் (‘கடவுள்களுடன் தேநீர்’), இளைய மகன் ஜ.சிவகுரு (‘100 நூறு வார்த்தைக் கதைகள்’) என நால்வரும் புத்தகம் வெளியிட்டு 2020-ஐ வெற்றிகரமாக நிறைவுசெய்திருக்கிறார்கள். வாழ்த்துகள், இந்தப் பயணம் தொடரட்டும்!
நாவல் பரிசுப் போட்டி
கஸ்தூரி சீனிவாசனால் 1981-ல் நிறுவப்பட்ட அறநிலையமானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ரங்கம்மாள் பெயரில் நாவல் பரிசுப் போட்டி நடத்துகிறது. ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு (நாவலாசிரியருக்கு ரூ.40 ஆயிரம், பதிப்பாளருக்கு ரூ.10 ஆயிரம்) கொண்ட இந்தப் போட்டியில் இந்தியாவில் வெளியாகும் தமிழ் நாவலாசிரியர்கள் பங்குபெறலாம். 2019, 2020-ல் வெளியான நாவல்களைப் போட்டிக்கு அனுப்பலாம்.
தொடர்புக்கு: 0422 – 2574110
