Last Updated : 29 Dec, 2020 11:24 AM

 

Published : 29 Dec 2020 11:24 AM
Last Updated : 29 Dec 2020 11:24 AM

எழுத்துகள், படைப்புகள் ஆகியவை வாசகர், இரு மகன்கள் என மூவருக்கே சொந்தம்: எழுத்தாளர் கி.ரா. அறிவிப்பு

எழுத்தாளர் கி.ரா.

புதுச்சேரி

எழுத்துகள், படைப்புகள் ஆகியவை வாசகர், இரு மகன்கள் என மூவருக்கே சொந்தம் என, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அறிவித்துள்ளார்.

கி.ரா. என்றும் தாத்தா எனவும் அன்பாக பலரால் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922-ம் ஆண்டு பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி. 1958-ம் ஆண்டு முதல் இன்று வரை எழுதிக்கொண்டே இருக்கிறார்.

பள்ளி படிப்பை நிறைவு செய்யாவிட்டாலும் அவரது எழுத்தின் திறனால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியுள்ளார். சாகித்ய அகாதமி விருதை பெற்றவர். இவரது இலக்கியத்துக்கு மரியாதை அளிக்கும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அரசு ஊழியர் குடியிருப்பில் வீட்டை அரசு ஒதுக்கியுள்ளது.

தற்போது 99 வயதுடைய கி.ரா. கூறியதாவது:

"எழுத்தாளர் கி.ரா. என்ற கி.ராஜநாராயணன் ஆகிய நான் சுய நினைவுடன் சொல்வது என்னவென்றால் எனது எழுத்துக்கள், படைப்புகள் எல்லாம் டிசம்பர் 26-ம் தேதி முதல் சங்கர் என்ற புதுச்சேரி இளவேனில், எனது மூத்த மகன் திவாகரன், எனது இளைய மகன் பிரபி என்ற பிரபாகரன் ஆகிய மூன்று பேரையே சாரும். இவர்கள் மூவருமே எனது படைப்புகளுக்கு முழு உரிமை பெற்றவர்கள். இதை நான் முழு மனதுடன் எனது வாசகர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் தெரிவிக்கிறேன்.

எழுத்தாளர் கி.ரா-வுடன் புதுவை இளவேனில்

எனது படைப்புகளை வெளியிடும் பதிப்பாளர்களும், எனது படைப்புகளை திரைப்படங்களுக்குப் பயன்படுத்துவோரும் உரிய ராயல்டியை மூவருக்கும் அளிக்க வேண்டும். எனது படைப்புகள் மூலம் வரும் வருவாயின் ஒரு பகுதியைக் கொண்டு 'கரிசல் அறக்கட்டளை'யை நிறுவி எழுத்தாளர்களுக்கும், சிறு பத்திரிகைகளுக்கும் எனது பெயரில் பண முடிப்புடன் கூடிய விருதுகளை வழங்க வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக தனது படைப்புகளின் உரிமை முதலில் தனது வாசகர் புதுவை இளவேனிலுக்கும், அதைத்தொடர்ந்து, தனது இரு மகன்களுக்கும் எழுத்தாளர் கி.ரா. அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x