

எழுத்தாளர் பாலகுமாரன் இரண்டாவது ஆண்டு இலக்கிய விருது வழங்கும் விழா இன்று 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை வாணி மஹாலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விருது கலாப்ரியாவுக்கு வழங்கப்படுகிறது.
280க்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்தவர் பாலகுமாரன். ‘மெர்க்குரிப்பூக்கள்’, ‘கரையோர முதலைகள்’, ‘இரும்பு குதிரைகள்’, ‘பயணிகள் கவனிக்கவும்’, ‘இனிது இனிது காதல் இனிது’, ‘காதற்பெருமான்’, ‘என்னுயிர்த்தோழி’, ‘என் கண்மணித்தாமரை’, ‘உடையார்’, ‘கங்கைகொண்ட சோழன்’ உள்ளிட்ட ஏராளாமான நாவல்களைப் படைத்துள்ளார். எழுத்தாளர் பாலகுமாரன் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி காலமானார்.
அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், பாலகுமாரனின் குடும்பத்தார் ‘ரைட்டர் பாலகுமாரன் சாரிடபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் விழா நடத்தினார்கள். இந்த டிரஸ்ட் மூலம் வருடந்தோறும், பாலகுமாரன் பெயரில் இலக்கிய விருது வழங்குவது என்று தீர்மானித்தார்கள்.
அதன்படி, 2019ம் ஆண்டு சென்னை வாணிமஹாலில், முதலாம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. எழுத்தாளர் நரன் அந்த விருதினைப் பெற்றார். அவருக்கும் விருதுடன் 25 ஆயிரம் ரூபாய்க்கான பரிசு காசோலையாக வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு (2020) மே மாதம் 15ம் தேதி கரோனா ஊரடங்கால் விழாவை நடத்த இயலாத நிலையில், 2020ம் ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கும் விழா, இன்று 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வாணி மஹாலில் நடைபெறுகிறது.
மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில். பாலகுமாரன் இரண்டாவது ஆண்டு இலக்கிய விருது கலாப்ரியாவுக்கு வழங்கப்படுகிறது.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ தலைமை வகிக்கிறார். பாலகுமாரன் இலக்கிய விருது குறித்து சூர்யா பாலகுமாரன் விளக்கிப் பேசுகிறார். இந்த முறை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் நினைவுப்பரிசும் வழங்கப்படுகிறது. ஜே.என். ஜெகன்நாதன் கலாப்ரியாவை அறிமுகப்படுத்திப் பேசுகிறார்.
சசிகுமார், ரவிசுப்ரமணியன், சந்திரா கோபாலன் முதலானோர் சிறப்புரை வழங்குகின்றனர். கலாப்ரியா ஏற்புரை வழங்குகிறார்.
விழாவில் இல.கணேசன், பாண்டே முதலானோர் கலந்துகொண்டு பேசுகின்றனர். விழா ஏற்பாடுகளை ரைட்டர் பாலகுமாரன் சாரிடபிள் டிரஸ்ட் உறுப்பினர்கள், பாலகுமாரன் குடும்பத்தார் செய்து வருகின்றனர்.