Published : 19 Dec 2020 08:18 AM
Last Updated : 19 Dec 2020 08:18 AM

நூல்நோக்கு: நிறப் பாகுபாட்டைப் பேசும் நாவல்

ரா.பாரதி

உல்லாசத் திருமணம்
தஹர் பென் ஜெலூன்
பிரெஞ்சிலிருந்து
தமிழில்:சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்
தடாகம் வெளியீடு
திருவான்மியூர், சென்னை-41.
தொடர்புக்கு: 98400 70870
விலை: ரூ.300

புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான தஹர் பென் ஜெலூனின் புதிய நாவலை ‘உல்லாசத் திருமணம்’ எனும் தலைப்பில் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர். ஆங்கில வாசகர்களுக்கு இந்நாவல் அடுத்த ஆண்டின் மத்தியில்தான் கிடைக்கவிருக்கிறது.

‘உல்லாசத் திருமணம்’ நாவல் அடிப்படையில் நிறப் பாகுபாட்டைப் பேசுகிறது. நாவல் களத்தில், இஸ்லாம் வழக்கப்படி நான்கு பெண்களை மணப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அமீரின் மனைவி லாலா ஃபாத்மாவுக்கு அவளது கணவன் இன்னொரு திருமணம் செய்துகொள்வதில் பிரச்சினை இல்லை. ஆனால், அமீர் இரண்டாவதாக மணந்துகொள்ளும் நபூ ஒரு கறுப்பினப் பெண் என்பதுதான் அவளுக்குப் பிரச்சினை. நபூ மிகவும் நல்ல விதமாக நடந்துகொண்டாலும்கூட அவளுடனான முரண்பாடுகளைத் தனிநபர் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல் இனப் பிரச்சினையாக நினைக்கிறாள். உண்மையில், சிக்கல் அங்கிருந்துதான் தொடங்குகிறது. எப்போது நபூ அந்த வீட்டுக்குள் நுழைகிறாளோ அப்போதே அமீர், லாலா, நபூ, அவர்களுடைய பிள்ளைகளுக்கு நெருக்கடிகள் தொடங்கிவிடுகின்றன. லாலாவை மரணப் படுக்கைக்குத் தள்ளும் அளவுக்கு அவளுடைய மனதைப் பாதிப்பதாக நபூ இருக்கிறாள்.

இது ஒருபுறம் என்றால், நபூவுக்குப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளில் ஹசன் கறுப்பு நிறத்திலும், ஹூசேன் வெள்ளை நிறத்திலும் பிறக்கிறான். ஒரே தாய் தந்தைக்குப் பிறந்திருந்தாலும் ஹூசேனுக்குக் கிடைக்கும் அனுகூலங்கள் ஹசனுக்கு எப்படி மறுக்கப்படுகிறது என்பதை இந்நாவல் கோடிட்டுக் காட்டுகிறது. குறைந்த பக்கங்களில் மூன்று தலைமுறையின் வாழ்க்கையை நாவல் எடுத்துக்கொள்கிறது. நிறப் பாகுபாட்டைப் பேசும் அதே வேளையில், குடும்ப உறவுச் சிக்கல்கள், பிறவிக் கோளாறு கொண்ட கரீமின் வாழ்க்கை எனப் பல தளங்களில் விரிகிறது நாவல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x