அஞ்சலி: வெங்கட் சாமிநாதன் 1933-2015: நம் காலத்தின் பெருமிதம்
நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் படைப்புச் சூழலின் முக்கியத்துவம் குறித்து எழுந்த முதல் குரல் வெங்கட் சாமிநாதனுடையது. தார்மிக ஆவேசமும் அறச் சீற்றமும் நேர்மையின் கொந்தளிப்பும் ஒன்றையொன்று மேவி உரத்து ஒலித்த எதிர்ப்புக் குரல் அவருடையது.
தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில், அதன் கலை, இலக்கிய, அரசியல் தளங்களில் படிந்திருந்த மாசுகளை அகற்ற வேண்டிய அவசியம் குறித்த அக்கறையோடும் ஆதங்கத்தோடும் ஆவேசமாக வெளிப்பட்ட குரல். நாம் புழங்கப் போகும் அறை தூசும் தும்புமாகக் குப்பைகள் மண்டிக் கிடக்கும் போது, அதைச் சுத்தப்படுத்துவதே முதல் பணியாக இருக்க முடியும், இருக்க வேண்டுமென்ற நம்பிக்கையோடு செயல்பட்டவர் வெ.சா. படைப்புக்கும் படைப்பாளிக்குமிடையேயான அவனுடைய சிந்தனைக்கும் செயலுக்குமிடையேயான நேர இசைமையும் குறித்து வெகுவாக ஆதங்கப்பட்ட ஆளுமை.
அவருடைய எழுத்தியக்கம் அல்லது இயக்க சக்தி என்பது இலக்கியம் சார்ந்த ஒன்றாக மட்டும் இருந்ததில்லை. ஓவியம், சிற்பம், கலைகள் என அனைத்துக் கலை ஊடகங்களின் மீதும் அவர் கவனம் குவிந்திருந்தது. அவற்றையெல்லாம் அவர் வெவ்வேறு துறைகளாகப் பார்க்காமல் ஒரு பண்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைந்த சக்திகளாகவே பார்த்தார். சகல கலைத் துறைகளுக்கும் சிந்தனைத் துறைகளுக்குமிடையே அடியோட்டமாக இயங்கும் வாழ்வியக்கத்தின் பூரணத்துவம் பற்றிய கவனக் குவிப்பே அவருடைய எழுத்தியக்கமாக, ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்திருந்தது.
நவீனத் தமிழ் இலக்கியத்திற்கான சீரிய விமர்சன இதழாக, சி.சு.செல்லப்பாவால் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘எழுத்து’ இதழே வெங்கட் சாமிநாதனின் எழுத்துலகப் பிரவேசத்துக்கு வழியமைத்துக் கொடுத்தது. 1960-ம் ஆண்டில் வெளியான ஜூலை- ஆகஸ்ட் இதழ்களில் வெ.சா.வின் முதல் கட்டுரையான ‘பாலையும் வாழையும்’ வெளியானது. நம் கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் நிலவிய சீரழிவுக்கான நோய்மைக் கூறுகளை நம் மரபிலிருந்து அறிய அவர் அதில் முற்பட்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 27.
வெங்கட் சாமிநாதனின் முன்னோடிகள்
இக்காலகட்டத்தில், ரசனை அடிப்படையிலான தர நிர்ணயம் என்பதைத் தன்னுடைய கூரிய அவதானிப்புகள் மூலம் க.நா.சுப்ரமண்யம் முன்வைத்துக்கொண்டிருந்தார். ஐரோப்பியக் கல்வித் துறைசார் விமர்சனப் போக்கான பகுப்பாய்வு முறையை சி.சு. செல்லப்பா மேற்கொண்டிருந்தார். இலக்கியக் கோட்பாட்டு ரீதியிலான பரிசீலனையில் அமைந்த தர விமர்சனங்களை தருமூ சிவராம் என்ற பிரமிள் மேற்கொண்டிருந்தார். இத்தருணத்தில்தான் வெங்கட் சாமிநாதனின் பார்வையிலிருந்து வெளிப்பட்ட புது வெளிச்சம் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பின் மீது ஒளிரத் தொடங்கியது.
அன்று திராவிட இயக்க இலக்கியப் பார்வையாக வெளிப்பட்ட போலிப் பெருமிதங்கள், கம்யூனிச இயக்க இலக்கியப் பார்வையாக வெளிப்பட்ட வறட்டு சித்தாந்த முழக்கங்கள், நம்முடைய வெகுஜனப் பண்பாட்டு வெளியை ஆக்கிரமித்திருந்த இதழ்கள், நாடகம், திரைப்படம் ஆகியவை நிகழ்த்திக்கொண்டிருந்த கேலிக்கூத்துகள் என இவை எல்லாவற்றுக்கும் அடித்தளமாகத் தார்மிகச் சீரழிவையே அடையாளமாகக் கண்டார். நம்முடைய தார்மிகச் சீரழிவுக்கான ஆதாரங்களைத் தேடிய யாத்திரையில் நம்முடைய கலை இலக்கியப் பாரம்பரியத்தைப் பாலையின் தொடர்ச்சியாகக் கண்டார்.
ஆனால் தொடர் யாத்ரீகரான அவரை அடுத்தடுத்து ஆட்கொண்ட அனுபவங்களின் சேர்மானங்களிலிருந்து அவருடைய பார்வை வெளி விரிவும் விகாசமும் பெற்றது. அவருடைய டில்லி வாழ்க்கை அளித்த உலகத் திரைப்பட அனுபவங்கள், நவீன ஓவிய-சிற்பக் கண்காட்சிகள், சங்கீத நாடக அகாடமியில் பார்த்த நாடக நிகழ்வுகள் என அவருடைய கலைவெளிப் பயணம் விரிவு கொண்டது.
அவருடைய வாழ்க்கையின் குறிப்பிடத்தகுந்த நிகழ்வாக அவர் கருதுவது, டில்லி சங்கீத நாடக அகாடமியில் புரிசை நடேசத் தம்பிரானின் தெருக்கூத்தை அவர் பார்த்ததைத்தான். 1965 அல்லது 66-ல் அது நடைபெற்றது. நடேசத் தம்பிரானின் தெருக்கூத்தைப் பார்த்து பிரமிப்பும் பரவசமும் கொண்டார். உலகின் மிகச் சிறந்த நவீன நாடக மேதைகளின் உலகங்களோடும் கருத்துகளோடும் பரிச்சயம் கொண்டிருந்த வெ.சா., நம்முடைய பாரம்பரிய தியேட்டராகத் தெருக்கூத்தைக் கண்டுபிடித்தார்.
அவருடைய பரந்துபட்ட அக்கறைகளில் ஒன்றாக தியேட்டர் மாறியது. அதன் விளைவைத் தமிழ்ச் சூழல் ஏற்றது. நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றன. கூத்துப் பட்டறை, நிஜ நாடக இயக்கம், பரிக்ஷா, வீதி நாடகங்கள் போன்ற பல முயற்சிகள் உருவெடுத்தன.
அதன் தொடர்ச்சியாக, கணியான் கூத்து, பாகவத மேளா, பாவைக் கூத்து போன்ற நாட்டார் கலைகள் மீது வெங்கட் சாமிநாதனின் கவனம் குவிந்தது. நம்முடைய கலை ஞான மரபின் பேராற்றலாக அவர் நாட்டார் கலைகளைக் கண்டார். அவற்றில் வெளிப்பட்ட பித்து நிலையையும் அழகியல் சாத்தியங்களையும் நம்முடைய கலை மரபின் உன்னதங்களாகப் போற்றினார்.
மரபின் வாரிசுகள் அல்லவா நாம்?
அவருடைய நீண்ட, நெடிய பயணம்தான், “சாதனங்களின் எல்லைகளை மீறி உன்னதப் படைப்புகளைத் தந்த கலைஞர்களைக் கொண்ட இருபது நூற்றாண்டுகள் மரபின் வாரிசுகள் அல்லவா நாம்?” என்று அவரைக் கேட்க வைத்தது.
அவருடைய கட்டுரைகள் பல தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. நம்முடைய கலை, இலக்கியச் சூழல் பற்றிய பார்வைகளாகவும் எதிர்ப்புக் குரலாகவும் ‘பாலையும் வாழையும்’, ‘ஓர் எதிர்ப்புக் குரல்’ போன்ற நூல்கள் உள்ளன. நவீன ஓவியக் கலை பற்றிய அவருடைய அவதானிப்புகளாக அமைந்த ‘கலை வாழ்க்கை அனுபவம் வெளிப்பாடு’, தமிழ் நாடகச் சூழல் பற்றி ‘அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை’ போன்ற நூல்களை எழுதியுள்ளார். நாட்டார் கலைகள் பற்றிய அனுபவப் பகிர்வான ‘பாவைக்கூத்து’, இலக்கியத்தின் பொய்முகங்கள் பற்றியதான ‘இலக்கிய ஊழல்கள்’ என அவரது புத்தகப் பட்டியில் கணிசமாக நீளக்கூடியது.
“சினிமா, அரசியல், சாதி துவேஷம், அறிவார்த்த வறட்சி என்னும் அரக்க சக்திகள் தமிழ்நாட்டையும் கலைகளையும் வாழ்வையும் நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கின்றன. நமது வளமான கலைகள் அனைத்தும் நிர்மூலமாகி நாசமடைந்துவிட்டன. நாசமடைந்து கொண்டிருக்கின்றன” என்ற வெ.சா.வின் துயர் தோய்ந்த ஆதங்கக் குரலை நாமும் எதிரொலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்துகொண்டிருக்கிறோம்.
என் இளம் வயதில் சிறுபத்திரிகைச் சூழலுக்குள் காலடி எடுத்துவைக்க முற்பட்டபோது, என்னுடைய முதல் ஆதர்சமாக இருந்தவர் வெங்கட் சாமிநாதன். என்னுடைய கலை, இலக்கியப் பார்வைகளின் உருவாக்கத்திலும் சிறுபத்திரிகை இயக்கச் செயல் மனோபாவத்திலும் வெ.சா.வின் பங்கு கணிசமானது. அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டதும் பெற்றுக்கொண்டதும் அதிகம்.
எனக்கு மட்டுமல்ல, சிறுபத்திரிகை சார்ந்த பலருக்கும் அவர் ஓர் உந்துசக்தியாக இருந்தார். அவருடைய எழுத்தியக்கமானது சிறுபத்திரிகை சார்ந்த ஒரு வட்டத்துக்குள்தான் இருந்துவந்திருக்கிறது. அதன் பாதிப்பில் செழித்ததுதான் சிறுபத்திரிகை இயக்கம். நவீன இலக்கியம், நவீன கலை, நவீன நாடகம், நாட்டார் கலைகள், உலக சினிமா என எல்லாக் கலை ஊடகங்களிடத்தும் இன்று ஒரு சிறுபத்திரிகை வாசகன் ஈடுபாடும் உறவும் கொள்வதென்பது வெ.சா. என்ற இயக்க சக்தியின் விளைவுதான். இந்த விளைவுதான் இன்று நமக்கான நம்பிக்கையாகவும் இருக்கிறது. நம் காலத்தின் பெருமிதம் வெங்கட் சாமிநாதன்.
- சி.சு.செல்லப்பாவுடன் இளம்வயது வெங்கட் சாமிநாதன்.
- சி.மோகன், கலை இலக்கிய விமர்சகர்,
‘காலம் கலை கலைஞன்’ போன்ற நூல்களின் ஆசிரியர்.
