Published : 05 Dec 2020 07:23 am

Updated : 05 Dec 2020 07:23 am

 

Published : 05 Dec 2020 07:23 AM
Last Updated : 05 Dec 2020 07:23 AM

பிறமொழி நூலகம்: நீதிமுறைமையின் முன்னுதாரணர்

book-review

வாய்ஸ் ஆஃப் த பாபுலிஸ்ட் ஜூரிஸ்ப்ருடெண்ட்
இல.சொ.சத்தியமூர்த்தி
சோக்கோ அறக்கட்டளை
மதுரை- 625 020
விலை: ரூ.100
தொடர்புக்கு: 0452-2583962

மரண தண்டனைக்கு எதிராக நீதித் துறைக்கு உள்ளேயும் பொதுவெளியிலும் ஓங்கி ஒலித்தவர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னும், தன் வாழ்நாள் முழுவதும் கூரிய விமர்சனங்களால் நீதித் துறையை வழிநடத்தியவர். தமிழகத்தில் கிருஷ்ணய்யரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் மதுரை சோக்கோ அறக்கட்டளையின் நினைவுவருவது தவிர்க்கவியலாதது. நீதித் துறையின் பண்பாட்டுச் சரிவு குறித்து அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு சோக்கோ அறக்கட்டளையின் பிரபல வெளியீடுகளில் ஒன்று. தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை எழுதிய ‘மனித நேயத்துக்கு வயது நூறு’ என்ற தலைப்பிலான கிருஷ்ணய்யரின் வாழ்க்கை வரலாற்றையும் சோக்கோ வெளியிட்டது. ஆண்டுதோறும் கிருஷ்ணய்யரின் பெயரில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு விருது வழங்கிக் கௌரவித்துவருகிறது. சோக்கோவின் மற்றொரு வெளியீடான இந்த ஆங்கில நூல், சட்டத்தமிழ் அறிஞரும் நீதிபதியுமான இல.சொ.சத்தியமூர்த்தியால் எழுதப்பட்டது. கிருஷ்ணய்யரின் முக்கியத்துவம் வாய்ந்த நாற்பது தீர்ப்புரைகள், இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், கருத்தரங்க உரைகள் ஆகியவற்றின் சாராம்சங்களைத் தொகுத்து வழங்கும் முயற்சி இது.


சட்டக் கோட்பாடுகள் மட்டுமின்றி நீதித் துறை ஒருபோதும் கைவிடக் கூடாத மதிப்பீடுகளையும் பொதுச் சமூகம் பின்பற்ற வேண்டிய முற்போக்குக் கருத்துகளையும் தொடர்ந்து வலியுறுத்திவந்தவர் கிருஷ்ணய்யர். இயற்றப்பட்ட சட்டங்களுக்குப் பதிலாக மனிதநேயமே நீதிமுறைமையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதற்குத் தன்னையே முன்னுதாரணமாக்கிக் கொண்டவர். ‘க்ரீமிலேயர்’ போன்று சட்டத் துறைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சொற்பயன்பாடுகளை வழங்கியிருக்கிறார். வாசிப்பதற்குச் சற்றே சவால் விடுக்கும் அவரின் மொழிநடை குறித்த சுயவிமர்சனமும், எதிர்கொண்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும்கூட இந்நூலில் பதிவாகியுள்ளன. மனித உரிமைகள், சமூக நல்லிணக்கம், ஊழல் ஒழிப்பு, நீதிமன்ற நடைமுறைகள், சிறைகளின் அவலநிலை, பாதிக்கப்பட்டோரின் நலன், சட்ட உதவி, பாலின நீதி, மது விலக்கு, தகவல் உரிமை, அரசமைப்புச் சட்டம் உணர்த்தும் விழுமியங்கள் என ஒன்றோடொன்று தொடர்புடைய கிருஷ்ணய்யரின் பல்வேறுபட்ட சிந்தனைகளைத் திரட்டி வழங்குகிறது இந்நூல். நூறாண்டு நிறைவாழ்வில் கிருஷ்ணய்யர் சட்டத் துறைக்கும் மனித சமுதாயத்துக்கும் அளித்துச்சென்ற பெரும் பங்களிப்பை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நூல் நல்லதொரு அறிமுகமாக இருக்கும்.

- புவி

டிசம்பர் 4: வி.ஆர்.கிருஷ்ணய்யர் நினைவு தினம்


பிறமொழி நூலகம்:Book reviewவாய்ஸ் ஆஃப் த பாபுலிஸ்ட் ஜூரிஸ்ப்ருடெண்ட்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x