Published : 05 Dec 2020 07:17 AM
Last Updated : 05 Dec 2020 07:17 AM

ஐம்பது பெண்களின் கதைகள்!

அற்றவைகளால் நிரம்பியவள்
பிரியா விஜயராகவன்
கொம்பு பதிப்பகம்
விற்பனை உரிமை: தமிழ்வெளி
விலை: ரூ.430
தொடர்புக்கு:
90940 05600

பெண்கள் பற்றிய முடிவற்ற கதைகளால் 712 பக்கங்களில் சொல்லப்பட்டுள்ள இந்நாவல், பெண்ணிய அரசியலைக் கட்டமைத்துள்ளது. பொருள் அல்லது விநோதம் என்று பெண்ணைப் பற்றி நவீன வாழ்க்கை ஆண் மனதில் கட்டமைத்திருக்கும் புனைவுகளை இந்நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது. அஞ்சனா என்ற பெண் மருத்துவரின் பார்வையில் சுமார் ஐம்பதுக்கும் கூடுதலான பெண்கள் பற்றிய கதைகள், சமகாலத்தின் குரல்களாகப் பதிவாகியுள்ளன. நாவலின் மைய இழையாக அஞ்சனா இருந்தாலும் ஏகப்பட்ட பெண்களின் வேறுபட்ட குரல்கள் ஒலிக்கின்றன.

உலகம் கதைகளால் ஆனது என்ற கருத்து, பெண்களின் உலகுக்கு முழுக்கப் பொருந்துகிறது. கடின உழைப்பாளியான அஞ்சனாவின் பாட்டி தங்கம்மாள், மகளுக்காக உருகும் அம்மா, மருத்துவப் படிப்பில் நெருக்கமான தோழிகள், தீவிர சிகிச்சைப் பிரிவின் செவிலியர்கள், செஷல்ஸ் தீவில் அஞ்சனா குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் ஜெனிஸ், மலையுச்சியில் பாறையைக் குடைந்து வீடு கட்டியிருக்கும் மிராண்டா, போதைப் பிடியில் சிக்கி, சிதைக்கப்பட்டு, மீளத் துடிக்கும் செஷல்ஸ் சகோதரிகளான க்ரிஸ்டியானா, ஃபெமினா, ஆதிக்கச் சாதியினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிச் சீரழிக்கப்பட்ட கண்மணி, பாலியல் தொழிலாளியான பள்ளித் தோழி எஸ்.ஜே., லண்டனின் ஈஸ்ட் ஹாமின் இருண்ட குடியிருப்பில் தங்கியிருக்கும் பல்வேறு நாட்டுப் பெண்கள் என நீள்கின்றன பெண்களின் கதைகள். இவர்களுடைய கதைகள் ஒவ்வொன்றும் நம்மை மிகுந்த தொந்தரவுக்கு உள்ளாக்குகின்றன.

வெவ்வேறு நாட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி களை நுட்பத்துடன் இந்நாவலில் பதிவுசெய்துள்ளார். ஈழத்துத் தமிழ்ப் பெண்களான அமிர்தினியும் வான்மதியும் சிங்கள ராணுவத்தினரால் தொடர்ச்சியான பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், சித்ரவதைக்குள்ளான சம்பவங்கள் கொடூரமானவை. சோமாலியாவில், பெண்ணின் இயல்பான காமத்தை நசுக்குவதற்காக ஏழு வயதில் பெண்ணுறுப்பைச் சிதைக்கும் கொடூரமான செயலானது மதத்தின் பெயரால் நடைபெறுகிறது. இளம் பெண்ணான ரஷ்யாவைச் சேர்ந்த வோல்கா ஒரு மாபியா கும்பலால் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் செயல் மிகச் சாதாரணமாக நிகழ்கிறது. மத அடிப்படைவாதிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்டு லண்டனுக்குத் தப்பிவரும் ஈரானியப் பெண் ரோக்ஸானா, எல்லா உறவினர்களாலும் வெறுக்கப்படுகிறாள். பாகிஸ்தான் பெண்கள் ஃப்தீலா, சாய்னா; பிலிப்பினோ பெண்கள் யானா, வனேசா; லத்வியப் பெண் காஷகா என நாவலில் பதிவாகியிருக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வலிகள் நிரம்பியவையாக இருக்கின்றன.

மருத்துவமனையில் அஞ்சனாவின் கண் முன்னர் நிகழ்ந்த மரணத்தில் சடலமாகிப்போன உடல்கள், தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலைக் கத்தியால் அறுத்து சவப் பரிசோதனை செய்வதைப் பார்க்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், லண்டன் நகரில் சடலத்தைப் பதப்படுத்தும் ஃப்யூனால் பார்லரில் இறந்த உடலைக் கையாளும் முறை என உடல்களை முன்வைத்து நாவல் உருவாக்கும் பேச்சுகள் முக்கியமானவை.

பிரியா விஜயராகவன் ஒரு மருத்துவர் என்பதால் நாவலில் சித்தரிக்கப்படும் உடல்கள் பற்றிய விவரிப்புகள் அதிர்வை ஏற்படுத்துகின்றன. இதுவரை உடல்கள் குறித்துச் சமூகம் கட்டமைத்திருக்கும் மறைப்புகள் வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றன. “இந்த மருத்துவத் தொழில் எத்தனை விநோதமான ஒன்று. ஸ்டெதாஸ்கோப் ஒரு கேடயம்தான். சட்டென ஒருவரின் வாழ்க்கை, அந்தரங்கம், நிர்வாணம், இருட்டு, நிஜம், பயம், வலி எல்லாம் திறந்து காட்டப்படுவதை எப்படி ஏற்பது என்று எந்த மருத்துவப் புத்தகமும் சொல்லித் தரவில்லை” என்கிறார் அஞ்சனா.

அஞ்சனாவின் பார்வைக் கோணம் முழுக்கப் பெண்ணிய நோக்கிலானது. அவரின் பாட்டி, அம்மா தொடங்கி மரபான சூழலில் வளர்ந்த அஞ்சனா தான் செல்லுமிடத்தில் எதிர்கொண்ட பெண்களின் துயரங்களைத் தன்னுடையதாகக் கருதுகிறார். தமிழகத்தில் குடும்ப நிறுவனத்துக்குள் அடங்கியொடுங்கி இருக்கும் பெண்கள் பற்றி நாவல்கள் விவரிக்கும் கதைகளுக்கு மாற்றாக இவர் பரந்த தளத்தில் விரித்துச் செல்கிறார். அந்த வகையில், உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் தொடரும் பெண்களின் பாடுகளைச் சித்தரிக்கும் ‘அற்றவைகளால் நிரம்பியவள்’ நாவல் தனித்துவமானது.

‘அற்றவைகளால் நிரம்பியவள்’ நாவல் இதுவரை தமிழ்ச் சமூகம் கட்டமைத்திருக்கும் உடல்கள் பற்றிய புனைவுகளையும் மர்மங்களையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இது சமகாலத்தின் விமர்சனக் குரல். உலகம் எங்கும் மதம், மொழி, பண்பாடு, அரசியல், எனப் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அதிகாரத்தின் விளைவுகள் என்பதாகவும் நாவலை வாசிக்க இடமுண்டு. அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்!

- ந.முருகேசபாண்டியன், ‘கிராமத்து தெருக்களின் வழியே' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: murugesapandian2011@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x