Published : 14 Nov 2020 07:38 am

Updated : 14 Nov 2020 07:38 am

 

Published : 14 Nov 2020 07:38 AM
Last Updated : 14 Nov 2020 07:38 AM

360: காவல் நிலைய நூலகம்

police-station-library

வேளச்சேரியில் ஒரு புத்தகக் கடை

வேளச்சேரியில் புத்தகக் கடை திறந்திருக்கிறது ‘யாவரும் பதிப்பகம்’. தமிழின் முக்கிய எழுத்தாளர்களான அசோகமித்திரன், ஜெயந்தன் போன்றோர் வசித்த இடம் வேளச்சேரி. தற்போது எம்.டி.முத்துக்குமாரசாமி, குணா கந்தசாமி, பச்சோந்தி போன்றோர் வசிக்கும் இடம் அது. வீட்டு வசதிகள், மால்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம், ரயில் முனையம் என்று அசுர வளர்ச்சி பெற்ற வேளச்சேரியில் தமிழுக்காக ஒரு புத்தகக் கடை இல்லை என்ற குறையை இந்தக் கடை போக்கியிருக்கிறது. நவம்பர் 9 அன்று நடந்த எளிய விழாவில் கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் கடையைத் திறந்துவைத்தார். முக்கியமான இலக்கிய ஆளுமைகள் பலரும் அந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்தப் புத்தகக் கடையின் நிறுவனரான ஜீவ கரிகாலன் ஓவிய ஈடுபாடு உடையவர் என்பதைக் காட்டும் வகையில் ஓவியங்களுடன் அழகுணர்வோடு அந்தப் புத்தகக் கடை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இலக்கியச் சந்திப்புகள் நடத்த ஏதுவாகவும் வடிவமைப்பு அமைந்திருக்கிறது. தீவிர இலக்கியப் புத்தகங்கள் மட்டுமல்லாமல் வெகுஜனப் புத்தகங்களும் ஆங்கிலப் புத்தகங்களும் இங்கே இடம்பெறும். புத்தகம் வாங்கிக்கொண்டு அங்கே இருக்கும் செல்ஃபி மரத்துடன் ஒரு தற்படம் எடுத்துக்கொள்ளலாம் என்பது கடையின் விசேஷம். தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது ‘பி ஃபார் புக்ஸ்’ புத்தகக் கடை. தொடர்புக்கு: 90424 61472


ஒலிப்பேழைகளில் உறங்கும் ஆளுமைகளின் குரல்

நேர்காணலுக்கென்று பிரத்யேகமாக ‘நேர்காணல்’ என்ற இதழை நடத்தியவர் அய்யனார். இந்த இதழுக்காகத் தமிழின் முக்கியமான ஆளுமைகள் சிலரை நீண்ட நேர்காணல்கள் எடுத்துள்ளார். மேலும், இவர் எடுத்த நேர்காணல்கள் ‘புதிய பார்வை’, ‘விண்நாயகன்’, ‘உலகத்தமிழ்’ இணைய இதழ், ‘காலச்சுவடு’, ‘தலித்’, ‘போதி’, ‘தீராநதி’, ‘ஆழி’ ஆகிய இதழ்களிலும் வந்திருக்கின்றன. இவற்றில் சுமார் 40 நேர்காணல்களின் ஒலிப்பேழைகள் (கேசட்டுகள்) தற்போது அய்யனாரிடம் இருக்கின்றன. நீலகண்டன், மீரா, ந.முத்துசாமி, நா.தர்மராஜன், நகுலன், நீல.பத்மநாபன், பிரபஞ்சன், அரவிந்த கண் மருத்துவமனை டாக்டர் ஜி.வெங்கடசாமி, ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், மௌனகுரு, ஜெயமோகன், உமா மகேஸ்வரி உள்ளிட்ட பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்கள் இந்த ஒலிப்பேழைகளில் அடங்கியுள்ளன. ஒலிப்பேழைகள் நீண்ட காலம் நிலைத்திருப்பவையல்ல என்பதால், ஆவணப்படுத்துதலில் ஈடுபாடு உடைய எவரேனும் இவற்றை மின்னணு வடிவத்தில் மாற்றி உதவலாம். தொடர்புக்கு: 9688086641

காவல் நிலைய நூலகம்

சேலம் மாநகர் பகுதியான கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் நூலகம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார்கள் காவலர்கள். அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு தொடங்கி சமையல் குறிப்பு நூல்கள் வரை அதில் இடம்பெற்றுள்ளன. புகார் கொடுக்க வருவோரும், விசாரணைக்காக வருவோரும் காத்திருக்கும் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதற்காகக் காத்திருப்பு அறை, நாற்காலிகளுடன் இந்த நூலகமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. “புகார் கொடுக்க வந்த நேரத்தில் ஒரு நல்ல புத்தகம் அவர்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், நல்லதுதானே?” என்று புன்னகைக்கிறார் இன்ஸ்பெக்டர் சிவக்குமார். இதேபோல, கோயமுத்தூர் ரோட்டரி சங்கங்கள் சார்பில் காவல்நிலையம் தோறும் நூலகம் அமைக்கும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்கெனவே தொடங்கி வைத்திருக்கிறார். மெச்சத்தக்க இந்தப் பணி தமிழகம் முழுவதும் விரியட்டும்!

ஆசியக் கவிஞர்கள் சிறுவெளியீடுகளாக!

தமிழுக்கு முதன்முறையாக நூல் வடிவில் வந்திருக்கின்றன இந்தோனேஷியக் கவிஞர் சபார்டி ஜோகோ தமோனோவின் (1940-2020) கவிதைகள். நகுலனின் ‘கோட்-ஸ்டாண்டு கவிதைகள்’ நூலின் பாணியைப் பின்பற்றி 32 பக்கங்களில் இந்த நூல் வெளியாகியிருக்கிறது. இந்தக் கவிதைகளை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்தவர் விருட்சன். இந்த வரிசையில் பெரும்பாலும் ஆசியக் கவிஞர்களை மொழிபெயர்த்து வெளியிடவிருப்பதாகச் சொல்கிறார்கள். 1940-50-களில் கும்பகோணத்திலிருந்து வெளியான இதழ் ‘காவிரி’. தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு. எம்.வி.வெங்கட்ராம் போன்ற ஆளுமைகள் பங்களித்த இதழ் அது. அந்த இதழின் பெயரில் ஓர் இதழை நடத்தும் முயற்சியிலும் கும்பகோணத்தை மையம் கொண்டு இயங்கும் படைப்பாளிகள் இறங்கியிருக்கின்றனர். இந்த இதழின் ஆசிரியர் விக்ரம், துணை ஆசிரியர் விருட்சன். இவர்களோடு கவிஞர் ராணிதிலக், எழுத்தாளர் ஜீ.முருகன், பதிப்பாளர் மணிகண்டன் ஆகியோரும் இணைந்திருக்கின்றனர். இந்த இதழோடு சிறு வெளியீடுகளையும் கொண்டுவருகிறார்கள். அதற்கான முன்னோட்டம்தான் சபார்டி ஜோகோ தமோனோ, சார்ல்ஸ் ஃபூகோவ்ஸ்க்கி கவிதைகள். எல்லாம் விலையில்லா வெளியீடுகள். www.kaavirimagazine.blogspot.com எனும் தளத்தில் இவை பிடிஎஃப் வடிவிலும் கிடைக்கின்றன. தொடர்புக்கு: kaavirimagazine@gmail.com


Police station libraryகாவல் நிலைய நூலகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x